8. அவையத்து உதவாதார் கல்வி

நெடும்பகற் கற்ற அவையத் துதவா
துடைந்துளா ருட்குவருங் கல்வி - கடும்பகல்
ஏதிலான் பாற்கண்ட இல்லினும் பொல்லாதே
தீதென்று நீப்பரி தால்

(பொ-ள்.)   நெடும்பகல் - பல நாளாக, கற்ற - தம்மாற்படிக்கப்பட்ட நூல்கள், அவையத்து - அவையிலே, உதவாது - எடுத்துரைப்பதற்குக் கூடாமல்; உடைந்துஉளார் - தோல்வியுற்றிருப்பவருடைய, உட்குவரும் - அச்சத்தைத் தரும், கல்வி - படிப்பானது,கடும்பகல் - நண்பகலில், ஏதிலான்பால் - அயலவனிடம், கண்ட - வயப்பட்டிருக்கப் பார்த்த,இல்லினும்- மனையாளைப் பார்க்கிலும், பொல்லாது - தீயதாகும்; (ஏனெனில்). தீது என்று -(அவளைத் தீயவளென்று நீக்குமாறு போலத்) தன் கல்வியைத் தீயதென்று, நீப்பு அரிது -நீத்தற்கு அரிதாதலின் என்பது.

(வி-ம்.) பகல்-நாள்,நெடுமை - நீட்சி, கற்ற கல்வி, உட்குவரும் கல்வி என்றும் இயைக்கலாம். கடும்பகல்- பெரிதும்விளக்கமுடைய உச்சிக்காலம். இல்லாள் தற்கொண்டாற்பேணி அறுசுவை உண்டி அமர்ந்து  ஊட்ட வேண்டியவளாதலின், அதனைச் செய்யாது, கொண்டகணவன் காலையில் தொழிலின் பொருட்டு வெளியே வயல் முதலிய இடங்கட்குச் சென்றுவியர்த்திளைத்துத் திரும்பியவன் மேலுந் துயருறும்படி அயலவன் அகம் அடைந்திருப்பதுணரின்அத்தகைய மனைமாட்சியற்றாள் தனக்கு நலம் பயவாதவள் என்று விலக்கப்படுதலும் கூடும்; ஆனால்கற்ற கல்வி அங்ஙனம் நீக்கப்படுதலும் இயலாதென்பார், `இல்லினும் பொல்லாதே' என்றார்.பால்: ஏழனுருபு. இல் - மனையாள்: இடவாகு பெயர்; உடைதல் - பின் வாங்கல், கெடுதல். நீப்பு:தொழிற்பெயர்; நீ: பகுதி, உட்கு - நாணமுமாம்.

(க-து.) அவைக்கு அஞ்சுங் கல்வி தீதுடையது.  
____________________________ 

*   நன், பெயரியல், 11.

+   திருக்குறள், கல்வி, 10.