80. தூர்த்தர் இயல்பு

திருவினு நல்லாள் மனைக்கிழத்தி யேனும்
பிறர்மனைக்கே பீடழிந்து நிற்பார் - நறுவிய
வாயின வேனும் உமிழ்ந்து கடுத்தின்னும்
தீய விலங்கிற் சிலர்

(பொ-ள்.) நறுவிய- இனிய பொருள்கள், வாயின ஏனும் - (தமது) வாயிலகப்பட்டுள்ளனவாயினும், உமிழ்ந்து - (அவற்றைத்) துப்பிவிட்டு, கடு தின்னும் - கைப்புள்ள பொருள்களைத் தின்னும்,தீய விலங்கின்- கொடிய விலங்குபோல், சிலர்- தீயோர்சிலர், மனைக் கிழத்தி - தம் மனைவி,திருவினும் நல்லாள் ஏனும் -திருமகளினுஞ் சிறந்த அழகுடையவளாயிருப்பினும் அவளை விடுத்து, பிறன் மனைக்கே - பிறர் மனைவியரின் தொடர்புக்கே, பீடுஅழிந்து நிற்பர் - தம்முடைய பெருமை கெட்டு நிற்பர்.

(வி-ம்.) சில விலங்குகளென்றது, ஒட்டகம் முதலியவை. இவை உண்ணுதற்குஇனிய பொருள்கள்.பல இருக்கினும் அவற்றை விடுத்து வேப்பிலை போன்ற கசப்புடையபொருள்களையே விரும்பும்.  அவ்வாறே மனிதருள்ளும் உரிமையின்ப முடைய மனைவி இருக்கையில் அவளை விரும்பாது  அவ்வுரிமையின்பமில்லா அயலான் மனைவியை விரும்புவோரும் சிலர் உளர். நறுவிய : 'நறுமை'   என்னும் பண்படியாகப் பிறந்த பலவின்பால் படர்க்கைப்பெயர்; வாயின: குறிப்பு வினை முற்று. கடு - கைப்பு; பொருள்மேல் நிற்றலால் ஆகு பெயர். விலங்கின்- இன்;ஐந்தாம் வேற்றுமை ஒப்புப்பொருள்.  "ஆத்தமனையா ளகத்தி லிருக்கவே, காத்த மனையாளைக் காமுறுங் காளையர், காய்த்த பலாவின்கனியுண்ண மாட்டாமல்,ஈச்சம் பழத்துக்கிடருற்றவாறே" என்பது திருமந்திரம். 

(க-து.) திருமகள்போலும்அழகுடைய தம் மனைவியை நீங்கிப் பிறன் மனைவிமேல்ஆவல் கொள்ளும் பேதையர், இனிய பொருள் தம் வாயிலிருந்துந் தின்னாது உமிழ்ந்து கைப்புள்ளபொருளைத் தின்னும் விலங்குகளுக்குஒப்பாவர். (80)