(பொ-ள்.) நலம்விற்று உணவுகொளும் பொன்தொடி நல்லார் - தமது இன்பத்தைப் பிறர்க்கு விற்று உண்டு பிழைக்கும் பொன்வளை யணிந்த பொதுமகளிர், கற்பு இல் மகளின் நனி நல்லார்- கற்பிலாத பெண்களினும்மிகவும் சிறந்தவர்களாவர். (ஏனெனில்),தம் கேள்வர்க்கும் - தம்மேல் அன்புடைய கணவர்க்கும்,ஏதிலார்க்கும்-பிறர்க்கும், தங்கட்கும்,தம் கிளைஞர் யாவர்க்கும் - தம் சுற்றத்தார்அனைவருக்கும், கேடு சூழார் - அவ்விலை மகளிர் கேடு செய்ய நினையார். (வி-ம்.) பொதுமகளிர் கேடு சூழாரென்றமையின், கற்பிலாக் குலமகளிரால் இத்தனை கேடுகளும் வரும்என்பது சொல்லாமலே விளங்கும். ‘பொற்றொடி’ அன்மொழித்தொகை. நனி: உரிச்சொல். கற்பிலா மங்கையரால் ஏற்படுங் கேடுகளைப்பற்றி,"பொருவில் கற்பின் வழீஇயபுன் மங்கையர், உரிய மூன்று மரபினுள் யோரையும்,வெருவந் தேங்க விழுங்கி யுமிழ்கலா, எரியுந்தீநர கிற்குடி யேற்றுவார்" என்று வருங் காசிகாண்டச் செய்யுளும் இங்கு நினைவுகூரற்பாலது. (க-து.) கற்பிலாப்பெண்களினும் பொது மகளிர் நல்லவர். (83) |