86. துறவிகளின் உணவு

துயிற்சுவையும் தூநல்லார் தோட்சுவையும் எல்லாம்
அயிற் சுவையின் ஆகுவவென் றெண்ணி - அயிற்சுவையும்
பித்துணாக் கொள்பபோற் கொள்ப பிறர்சிலர்போல்
மொத்துணா மொய்ம்பி னவர்

(பொ-ள்.) பிறர்சிலர்போல்-வேறு சிலர் போல,மொத்துணா மொய்ம்பினவர் - ஐம்புல வின்பங்களால்அடி படாத தவ வலிமையுடையோர், துயில் சுவையும் - தூக்கத்தின் இன்பமும், தூ - நல்லார் தோள்சுவையும்- அழகிய பெண்களது தோளைத் தழுவும் இன்பமும், எல்லாம் - மற்றுமுள்ள  எல்லா இன்பங்களும், அயில்சுவை இன்- உண்டி யினாலுண்டாகும் இன்பத்தால், ஆகுவ என்று எண்ணி-வருவன என்று நினைத்து, அயில் சுவையும் - அவ்வுண்டி கொள்ளுதலையும்,பித்து உணா கொள்வது போல மிகச்சிறுகவே உண்பார்கள். 

(வி-ம்.) பித்தன் பசிக்கும்போதுசிறிது உணவே கொள்வான். அதுபோல்துறவிகள் பசி காரணமாகச் சிறிது உணவே கொள்வார்கள். அயில் : முதனிலைத்தொழிலாகு பெயர். அயிற் சுவையும் என்னும் உம்மைஏனைத் துயிற்சுவை முதலியனவும் குறைப்பரென்னும்பொருட்டு. 

(க-து.) உண்டிமிகுந்தால் சிற்றின்ப எண்ணங்கள் மனத்திலெழுமென்று துறவிகள் மிகவும் குறைவாகவே உண்பார்கள்.          (86)