(பொ-ள்.) போதத்தால்தாம் வேய்ந்த - ஞானத்தால் தாம் அமைத்த, புக்கில் - பேரின்ப வீட்டிலே, குடிபுகுதுவார்- குடிபுகுதற்குச் சித்தமாயிருப்பவர்கள், புன்புலால் பொய்க்குடில்ஓம்புவரோ - முடைநாறும் ஊன் பொதிந்த பொய்க் குடிசையாகிய தம்முடம்பைப் பாதுகாப்பரோ? (காவார்); (காவாதொழிவதால்) அன்பொடு அருள் உடையர் ஏனும் - அன்பும் அருளுமுடையவராயினும், உயிர்நிலை- உயிர்க்கு நிலைக்களமாகிய தம்முடல்(உணவில்லாமையால் மெலிந்து ), என்பு இயக்கம் கண்டும்- எலும்புகள் தோன்றுவதைக் கண்டபோதுங்கூட, புறந்தரார் - (அவ்வூனுடம்பைப்) பாதுகாவார். (வி-ம்.) ஒடு: பாட்டின் இசை நன்கமையவேண்டிவந்த இடைச்சொல். நிலை : வினையடியாகப்பிறந்த பகுபதப்பொருட் பெயர்.புக்கில் - உரிய வீடு, புகுதுவார்-புகு:பகுதி,து: சாரியை. புறந்தரார் - புறந்தா : பகுதி. (க-து.) பேரின்பமாகியவீடுபேற்றை விரும்புகின்றவர்கள் சிற்றின்பவீடாகிய உடம்பைப் பேணார். (87) |