(பொ-ள்.) எவ்வினையரேனும் - துறவிகள் மற்றும் எவ்வகையான தீச் செயல்களைச் செய்தாலும் இணை விழைச்சு - மகளிரைச்சேர்ந்தின்புறுதல் என்னும், ஒன்றுஇல் எனின் - ஒரு தீத்தொழில் மட்டும் (அவர்களிடம்) இல்லாதிருந்தால், தெவ்வும் - (அவர்களுடைய)பகைவரும், திசை நோக்கிக் கைதொழூஉம் - (அவர்களிருக்குந்) திக்கைநோக்கித் தொழுவர், (அவ்வாறின்றி) எனைத்துணையர் ஆயினும் - அவர்கள்எத்தனை அறச் செய்கைகளுடையவர்களாயிருந்த போதிலும், அவ்வினை காத்தல்இலரேல் - அத் தீத்தொழிலைக் காவாதவர்களாயின், தூர்த்தரும் - மகளிர்இன்பத்திலேயே மூழ்கிநிற்குங்காமுகரும், அலர் தூர்ப்பார் - அவர்களைப் பற்றிப் பழமொழி கூறுவார்கள். (வி-ம்.) விழைச்சு : தொழிற்பெயர்;தூர்ப்பார்;பலர்பால் படர்க்கைவினைமுற்று. இணைவிழைச்சு - கூட்டம்: இருபாலரும் விரும்புதலின் இணைவிழைச்சு எனப்பட்டது. எவ்வினையரேனும் என்றது, துறவிகள் விலக்க வேண்டிய தீச்செயல்களை: அவையாவன : கோபம், நிந்தை, பிச்சை வாங்குதல் முதலியன. தூர்த்த லாவதுஈண்டுப் பழியை மிகுதியாகப் பரப்புதல், இச்சொல்லுக்கு இம்மிகுதிப் பொருளுண்மை "தூர்க்கின்ற மலர்மாரி" (இராவ .199) என்னும் கம்பர் வாக்கிற் காண்க. அலர்: தொழிலாகுபெயர். (க-து.) பெண்ணாசை அற்றகருவிகளைப் பகைவரும் கை கூப்பி வணங்குவர்;இன்றேல், அவர்களை யாவரும் பழிப்பர். (89) |