9. கற்றன ஓம்புதல்

வருந்தித்தாங் கற்றன ஓம்பாது மற்றும்
பரிந்துசில கற்பான் தொடங்கல் - கருந்தனம்
கைத்தலத்த உய்த்துச் சொரிந்திட் டரிப்பரித்தாங்கு
எய்த்துப் பொருள்செய் திடல்

(பொ-ள்.) தாம் வருந்தியக் கற்றன ஓம்பாது - மக்களாவார் தாங்கள் வருத்தப்பட்டுக் கற்றநூற்பொருள்களை மறந்து போகாதவாறு அடிக்கடி நினைத்துப் பாதுகாக்கமாட்டாமல், மற்றும் சிலபரிந்து கற்பான் தொடங்கல் - இன்னும் சில நூல்களை வருந்திக் கற்கத் தொடங்குதல்,கைத்தலத்த கருந்தனம் உய்த்து சொரிந்திட்டு - ஒருவன் தன் கையில் இருப்பதான மிகுந்தபணத்தை வீசிஎறிந்துவிட்டு, ஆங்கு அரிப்பு அரித்து எய்த்துப் பொருள் செய்திடல் -எறிந்தஅவ்விடத்தில் அரிப் பரித்து இளைத்துப் பொருள் சேர்ப்பது போலாகும்.

(வி-ம்.) உவமஉருபு சேர்த்துக்கொள்க. `வருந்தித் தாங் கற்றன' என்றமையால், கற்றலின் அருமைபெறப்பட்டது. தொடங்குங்கால் துன்பமாய் என்று முன்னுங் (3) கூறினார். ஓம்புதல் -பாதுகாத்தல்: `குடியோம்பி என்பர் பின்னும்(2). மற்றும்- பிறிதுணர்த்தி நின்றது. கற்பான்:பானீற்று வினையெச்சம், கற்பதற்கு என்க. கருந் தனம் - பெரிய சொத்து கருமைக்கு இப்பொருளுண்மை "கருங்கறி மூடையோடு"* என்பதிற் காண்க. உய்த்து - செலுத்தி, இங்குவீசுதல் அரிப்பரித்தல் - வெயிலில் நின்று மண்ணை அரித்தெடுத்தல். இவ்வரித்த மண் வீடுகட்டுதற்கும் பாண்டம் மனைதற்கும் பயன்படும். இனி மண்ணோடு கலந்து கிடக்கும் பொருள்கள்அரித்தெடுக்கப்படுதல் பற்றி அரிப்பெனப்பட்டது எனினுமாம். பொருள் செய்திடல் - பொருள்சேகரித்தல். தொடங்கல், செய்திடல் போலாம் என்று முடிக்க.

(க-து.) கற்றவற்றை மறந்து மேலும் கற்பது பேதைமை.        (9)
________________________________

*    சிலப். ஊர் காண். 210.