90. பேதையர் செயல்

பரபரப்பி னோடே பலபல செய்தாங்
கிரவுபகல் பாழுக் கிறைப்ப - ஒருவாற்றான்
நல்லாற்றில் நூக்கிற் பதறிக் குலைகுலைப
எவ்வாற்றான் உய்வார் இவர்

(பொ-ள்.) பலபல பரப்பினோடே செய்து-(உலகினர்)பல காரியங்களை விரைவாகச் செய்து, இரவு பகல் பாழுக்கு இறைப்ப-இரவையும்பகலையும் வீணிற் கழிப்பர், ஒரு ஆற்றால், ஒரு வகையால், நல் ஆற்றில்- நல்லொழுக்க வழியில், நூக்கில் - (அறிவுடையோர் அவர்களைச்)செலுத்தினால் பதறிக் குலை குலைப- மெய்பதறி நடு நடுங்குவார்கள், இவர்-(இத்தகைய இவர்கள் எவ்வாற்றான் உய்வார்-பிறவிப்பெருங்கடலினின்றும்) எந்த வழியாகத்தப்புவார்கள்?   

(வி-ம்.) நற்பயன் பெறுதற்குரியதம் மனம் வாக்குக் காயங்களை உலகினர் இடையறாமற் கீழ்மையான செயல்களிற் பயன்படுத்தி அழிதலின், 'இரவு பகல் பாழுக்கிறைப்ப' எனவும், அவ்வாறு பாழ்படுவாரை அறிஞர் நன்னெறிக்குத் திருப்ப முயன்றால் அவர்கள், மனம் அதனை விரும்பாமையின் 'பதறிக் குலை குலைப' எனவுங் கூறினர். "வீழ்நாள்படாஅமை" நன்றாற்றினஃதொருவன்வாழ்நாள் வழியடைக்குங் கல்' என்னுந் திருக்குறள் இங்குப் பெரிதும் கருத்திருத்தற் பாலதாகும்.   

(க.து.) உலகினர்தம் வாணாளை வீண் முயற்சிகளிற் கழிப்பர்.  (90)