92. தவத்தின் இயல்பு

நல்லவை செய்யத் தொடங்கினும் நோனாமே
அல்லன அல்லவற்றிற் கொண்டுய்க்கும் - எல்லி
வியனெறிச் செல்வாரை ஆறலைத் துண்பார்
செலவு பிழைத்துய்ப்ப போல்

(பொ-ள்.) எல்லி- இரவிலே, ஆறலைத்து உண்பார்-வழி பறிப்பவர்களாகியதிருடர்கள், வியல்நெறி செல்வாரை-மக்கள்போக்குவரவுடைய பெருவழியிற் செல்லும் வழிப்போக்கர்களை, செலவு-(அந்நெறியில்) செல்வதை, பிழைத்து - தப்புவித்து, உய்ப்பபோல்-மக்கள் நடமாட்டமில்லாத தனிவழியிற் கொண்டு செல்லுதல்போல், நல்லன செய்யத் தொடங்கினும்-நற்காரியங்களைச் செய்யத்தொடங்கினாலும், அல்லன-தீயூழானது, நோனாமே-(அது)பொறாமல், அல்லவற்றில்-தீய காரியங்களில், கொண்டு உய்க்கும்-கொண்டு போய்விடும்.      

(வி-ம்.) 'ஊழ்வலிது' என்பது இங்கு நோக்கற்பாலது. நோனமே; எதிர்மறை வினையெச்சம். ஆ: எதிர்மறை யிடைநிலை. மே:விகுதி. எல்லி செல்வாரை;ஏழன் தொகை, "தவமுந் தவமுடையார்க்காகும் அவமதனை, யஃதிலார் மேற்கொள்வது," ஊழிற் பெருவலியாவுள மற்றொன்று, சூழினுந் தான் முந்துறும்' என்னும்திருக்குறள்கள் இங்கு நினைவு கூரற்பாலன.       

(க-து.) நற்காரியங்களைச் செய்யநினைத்தாலும் ஊழ்வினைமாறாயின் அவைதீய காரியங்களாகவே முடியும்.(92)