93. கூடாவொழுக்கம்

நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப்போர்வை
கஞ்சுக மன்று பிறிதொன்றே - கஞ்சுகம்
எப்புலமுங் காவாமே மெய்ப்புலங் காக்குமற்
றிப்புலமுங் காவா திது

(பொ-ள்.) நெஞ்சு-தமது மனம்; புறம்பு ஆ-புறத்திலே (கட்டுப்படாமல்)செல்ல, துறந்தார்-துறந்தவர்களுடைய, தவப்போர்வை-தவக்கோலமாகிய போர்வை, கஞ்சுகம் அன்று-சட்டையைப் போன்றதுமாகாது, (ஏனெனில்)கஞ்சுகம்-சட்டையானது, எப்புலமும்-எல்லாம் புலன்களையும். காவாமே-காக்காவிடினும், மெய்ப்புலம்-உடம்பாகிய புலனை மட்டுமாவது,காக்கும்-(பனி குளிர் முதலியவற்றினின்று) காக்கும், (ஆனால்), இது-இந்தப் பொய்த்தவப் போர்வையானது, இப்புலமும்- இந்த உடம்பையும், காவாது-(குளிர், பனி முதலியவற்றினின்று) காக்கமாட்டாது, பிறிது ஒன்றே - (ஆதலால் இப்பொய்த் தவக்கோலம்) வேறுஒரு பொருளே,   

(வி-ம்.)  மனத்தைப்புறஞ்செல்லவிட்டு மேலுக்கு மட்டும் துறந்தார்போல நடிப்பாரது துறவுகோலத்திற்கு ஓர் எளியசட்டைக்கிருக்கும் பெருமைகூடக் கிடையாது என்றார். சட்டையாவது குளிரினின்று காக்கும்; இப்பொய்த்தவப் போர்வையோ அதுவும்செய்யாது; ஆகையால் இது வேறொருபொருளே. துறந்தார் என்போர்எல்லாப் பற்றையும் அறவே நீத்தாராகையால் அவர்கள் மனம் ஒன்றிலும் பற்றுதல் கூடாது, ஏதாவதுஒரு காரியம் விரும்பிப் போகிறவன்,அதற்குத் தகுதியான சட்டையணிந்து செல்லுதல்போல, மனமடக்காது கருத்திலே கரவு  கொண்டாரதுதவக்கோலமும் தீச்செயல் புரிதற்கென்று அணியப்படுவதுபோல் தோன்றலால், அது போர்வை என்றும் ஆனால்போர்வைபோல் அது பயன்படாமையால் போர்வையுமன்று பிறிதொரு பொருள் என்றுங்கூறினார். "நெஞ்சிற்றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து, வாழ்வாரின் வன்கணாரில்" என்றது திருக்குறள்.   

(க-து.) மனத்தைக் கட்டுப்படுத்தாத துறவிகளின் தவக்கோலத்தால் யாதும் பயனில்லை. (93)