(பொ-ள்.) வஞ்சித்துஒழுகும் மதியிலிகாள்-(பொய்க்கோலம் பூண்டு)பிறரை வஞ்சித்து நடக்கும் மதியீனர்களே!, யாவரையும் வஞ்சித்தோம் என்று மகிழன்மின்- எல்லாரையும் நாம் வஞ்சித்துவிட்டோம் என்று நீங்கள் மகிழ்ச்சி கொள்ள வஞ்சித்தவற்றை, எங்கும் உளன் ஒருவன் காணும் என்று அஞ்சி-எங்கும் நிறைந்த இறைவன் காண்கின்றானென்று நடுங்கி, அங்கம் குலைவது -(உங்கள்) உடல்பதறுவதே, அறிவு-(உங்களுக்கு) அறிவாகும். (வி-ம்.) இறைவன் 'எங்குமிருக்கிறார், எல்லாம் அறிவார்' என்னும் உண்மையறியாமையின், 'மதியிலிகாள்' என்றார். மனிதர்தண்டிப்பதிலும் இறைவன் தண்டனைகொடிதாகலின், ‘அங்கங் குலைவதறிவு’ என்றார். மகிழன்மின்: எதிர்மறை ஏவற்பன்மைவினைமுற்று, வஞ்சித்த : இறந்தகாலப் பலவின்பால் வினையாலணையும் பெயர். கொல்: அசைச்சொல். மதியாவது பொருளின் இயல்பை ஆராய்ந்து அளந்தறிவது. (க-து.) எங்கும் நிறைந்த இறைவன் அறியாத செயல்யாதுமில்லையாகையால் பிறரை வஞ்சித்தோம் என்றுமகிழ வேண்டாம். (94) |