96. மேலோர் செயல்

மெலியார் விழினும் ஒருவாற்றான் உய்ப
வலியார் மற்றொன்றானும் உய்யார் - நிலைதப்பி
நொய்ய சழக்கென வீழாவாம் வீழினும்
உய்யுமால் உய்யா பிற

(பொ-ள்.) நிலைதப்பி-நிலை தவறி,நொய்ய சழக்கென வீழாவாம்-கனமில்லாத பொருள்கள் விரைவில்விழமாட்டா, வீழினும்-ஒருவேளை விழுந்தாலும், உய்யும்-பிழைக்கும், பிற உய்யா-கனமான பொருள்கள் நிலை கெட்டு  விழுந்தால் பிழைக்க மாட்டா, (அதுபோல) மெலியார் விழினும்-சிறியோர் தம்நிலையினின்று  தவறினும், ஒருஆற்றான்-ஒரு வழியாக, உய்ப-பிழைத்துக்கொள்வர் வலியார்- பெரியோர், (தம் நிலை தவறினால்)மற்ற ஒன்றானும்-வேறு எந்த வகையாலும், உய்யார்-பிழைக்கமாட்டார்.

(வி-ம்.) மெலியார் வலியார் என்றது ஈண்டு முறையே இல்லறத்தாரையும் துறவிகளையும் நோக்கிற்று. சிறியர் நிலைதவறின் அவர் கீழோராகையால் அவர்நிலை தவறினதை உலகம் நன்கறியாது: பெரியாரோவெனின் தன்னிலை கெட்டால் உலகெலாம் அது பரவும். ஆகலின், பின்பு அவர்கள் பெருமையடைதல் அரிது."ஆடு படுத்தால் எழுந்திருக்கும்.ஆனை படுத்தால்எழுந்திருக்குமா?" என்னும்பழமொழி இங்குக் கவனிக்கத் தக்கது. உய்ப : பலர்பால்எதிர்கால வினைமுற்று ; நொய்ய : அஃறிணைக் குறிப்புப் பெயர், சழக்கென : உரிச்சொல்லடியாகப் பிறந்த வினையெச்சம் : சழக்கென்பது பகுதி. 'நிலைதப' என்றும் பாடம்.

(க-து.) மேனிலையிலுள்ளார் அந்நிலை தவறின் பின் ஒரு வழியானும் உய்தலரிது.   (96)