97. தீயவையும் நல்லவையே

இசையாத போலினும் மேலையோர் செய்கை
வசையாகா மற்றையோர்க் கல்லால் - பசுவேட்டுத்
தீயோம்பி வான்வழக்கங் காண்பாரை யொப்பவே
ஊனோம்பி ஊன்றின் பவர்

(பொ-ள்.)  மேலையோர்செய்கை-பெரியார் செய்கை, இசையாத போலினும்-(சில நேரங்களில்) பிறர் கொள்கைக்குப்பொருத்தமற்றனவாயிருந்தாலும், மற்றையோருக்கு அல்லால்- சிறியோர்க்கன்றி (அவர் போன்ற பெரியோர்க்கு), வசை ஆகா- குற்றமாகா ;  பசு வேட்டு-உலகின் (நலங்கருதிப்) பசுவைப்படைத்து, தீஓம்பி-முத்தீ வேள்வி செய்து, வான் வழக்கங் காண்பாரை-மழை பெய்தலைச் செய்விக்கும் வேள்வியாசிரியரை, ஊன்ஓம்பி-(தமது) உடம்பைப் பாதுகாக்க வேண்டி, ஊன்தின்பவர்-(வேறோர் உயிரின்) இறைச்சியைத் தின்பவர்கள், ஒப்பாவரோ? (ஆகார்).   

(வி-ம்.) முத்தீ - ஆகவனீயம்,காருகபத்தியம், தட்சிணாக்கினியம், வேட்டு :  இறந்த கால வினையெச்சம்; வேள்: பகுதி; த் : இடைநிலை: ள், த், டகரமாதல் சந்தி; உ : விகுதி. பசு :வேள்விக்குரிய உயிர்களுக்குப்பொதுப் பெயர். மேலையோர் - முனிவர்.

"யானைமதப் பட்டா லலங்கார மாஞ்சிறுநாய்
தானுமதப் பட்டாற்சரியாமோ - ஞானி.
தடை மீறினாலுஞ் சரியாகும் கன்மி
நடைமீறில் ஆகாது காண்."   - ஒழிவிலொடுக்கம்

 

"தன்னூன்பெருக்கற்குத் தான் பிறிதூனுண்பான்
எங்ஙன மாளுமருள்."        - திருவள்ளுவர்.

(க-து.) பெரியோர் சில சமயங்களில் தீச்செயல்கள்புரிந்தாலும் அவற்றாலும் உலகுக்கு நன்மையே பிறக்குமாகையால் அவை பழிக்கப்படா. (97)