1-10
 

1. கடவுள் வாழ்த்து

நீரில் குமிழி இளமை நிறை செல்வம்
நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் - நீரில்
எழுத்து ஆகும் யாக்கை நமரங்காள் என்னே
வழுத்தாதது எம்பிரான் மன்று

(பொருள்.) இளமை  நீரில் குமிழி - இளமைப்பருவம் நீரிலுண்டாகும்குமிழியாகும்.  நிறை செல்வம்  நீரில் சுருட்டும் நெடுதிரைகள் - நிறைந்த செல்வம்நீரிலே காற்றினாற் சுருட்டப்படும் உயர்ந்த அலைகளாகும், யாக்கை  நீரில் எழுத்துஆகும் - உடம்பு நீரிலெழுதிய எழுத்தாகும்; (இங்ஙனமிருக்க), நமரங்காள் - நம்மவர்களே!'எம்பிரான் மன்று  வழுத்தாதது என்னே - நம்கடவுளுடைய மன்றினை (அம்பலத்தை) வாழ்த்தி வணங்காதது ஏனோ?

(விளக்கம்.) ஆகும்:கடைநிலைத்தீவகம்;  இதைக் குமிழி, திரைகள்என்பவற்றிற்குங் கூட்டுக. நிலையாமையைக் காட்டுதற்குக் குமிழி, திரை எழுத்து என்பனஉவமிக்கப்பட்டன. அங்ஙனம் உவமிக்கப்பட்டவை மூன்றும் நீரில் நிகழும் நிகழ்ச்சிகளாயிருத்தலின், அந்நீரோட்டத்தை இளமையும்செல்வமும் யாக்கையும் பொருந்திய வாழ்க்கைக்கு உவமித்துக் கொள்க. உவமைகள் உருவகமாகவந்தமையால் கருத்துக்கள் பின்னும் உறுதியாயின; இளமை எய்திப் பொருள் தொகுத்து உடம்பைவிடுதலால் அவை தம்மை அம்முறையே வைத்தார். இளமை, உருத்திரண்டு அழகு கெழுமி இருப்பதுபோல்இருந்து சிறிது காலத்தில் மாறுதற்கும் செல்வம், மிகுந்துங் குறைந்தும் மறைந்தும் எழுந்தும்நீளத்தொடர்ந்தும் தொடராதும் மாறுபடுதற்கும், நன்றாயிருக்கும் உடம்பு சட்டென்று இறத்தற்கும்முறையே குமிழி முதலானவை உவமமாக வந்தன.  முகிழ்என்பது சிவிறி; விசிறி சதை, தசை என்றாற்போல, எழுத்து நிலைமாறிக் குமிழ் என்றாயிற்று.அது வினைமுதற் பொருளதான  இகரவிகுதிஏற்றது.  குமிழி, செல்வம் என்பன,தொழிலடியாகப் பிறந்த பெயர்கள்.  நெடுந்திரை- உயர்ந்த அலை. என்: எவன் என்பதன் விகாரம். என்னே எம்பிரான் மன்று வழுத்தாததுஎன்பதற்கு, என்னே கடவுளை வழிபடாதது என்னும் பொதுப்பொருள் கொள்க. யாக்கை - தோல் நரம்புமுதலியவற்றாற் கட்டப்படுவது. நமரங்காள்: நமர்கள் என்னும் முறைப்பெயர் ஈற்றயல் அகரம்ஆகாரமாகி, விளியேற்று இடையே அம்சாரியை பெற்றது. வழுத்தாதது: எதிர்மறைத் தொழிற்பெயர்.

இஃது அறிவுரையோடு கூடிய கடவுள் வாழ்த்துச் செய்யுளென்க.இவ்வாறு கொள்ளும் முறையைத் திருக்குறட்கடவுள்வாழ்த்து அதிகாரத்தான் அறிக.

(கருத்து.) இளமையும் செல்வமும்யாக்கையும் நிலையாமையால், அவை உள்ள பொழுதே இறைவனை வழிபட்டுக் கொள்கவென்பது.       (1)

   

2. கல்வியின் சிறப்பு

அறம் பொருள் இன்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை நல் இசையும் நாட்டும் - உறும் கவல் ஒன்று
உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்கு இல்லை
சிற்றுயிர்க்கு உற்ற துணை

(பொ-ள்.) அறம் பொருள் இன்பமும் வீடும் பயக்கும் - ஒழுக்கமும் செல்வமும் இன்பமும் என்னும் மூன்றையும்வீடுபேற்றையும் கொடுக்கும், புறங்கடை நல்இசையும் நாட்டும்-உலகத்தில் குற்றமற்ற புகழையும்நிலைநிறுத்தும், உறும் கவல்ஒன்று உற்றுழியும் கை கொடுக்கும் - நேரக்கூடிய வருத்தமொன்றுநேர்ந்த பொழுதும் கைகொடுத்து உதவிசெய்யும், சிறு உயிர்க்கு உற்றதுணை கல்வியின் ஊங்குஇல்லை - ஆதலால் சிறிய உயிர்களாகிய மக்கட்குத் தக்கதுணை கல்வியைவிடப்பிறிதில்லை.

(வி-ம்.) வீடு,முதல் மூன்றன் பயனாகலானும் மறுமையில் எய்துதற்குரியதாகலானும் அதனை மட்டும் உம்மைகொடுத்துவேறு பிரித்தார். புறங்கடை புறத்தில்; புறம் என்றது கற்றறிந்த புலவன் இருக்கும் ஊர்க்குப்புறனாய இடம் என்னும் பொருண் மேல் நின்றது. கடை: ஏழாம் வேற்றுமையுறுபு; அன்றி, இலக்கணப்போலியுமாம். உறுகவல்; முன்வினைப் பயனாகக் கட்டாயம் வந்தே தீருங் கவலைக்கிடமான செய்கை.கவல்: முதனிலைத் தொழிற்பெயர். உழி- பொழுது; இடமுமாம். ஊங்கு: மிகுதிப் பொருள் தருவதோர்இடைச்சொல். சிற்றுயிர் - அறிவிலும் ஆற்றலிலும் சிறுமையுடைய உயிர், அது மலத்தாற்றொடக்குற்று ஏங்குஞ் சிறுமையையும் குறித்து நின்றது. துணையாயிருப்பதென்பதுஉற்றுழியுதவலாகலின், அவ்வுற்றுழியுதவலுக்கு வேறாக அதனினும் மேம்பட்ட நல்லிசையையும் அறமுதலாநான்கினையும் தரவல்லதாதலால், கல்வி உற்ற துணையாயிற்று.  இச்செய்யுளில் உள்ள பயக்கும், நாட்டும், கைகொடுக்கும் என்னுஞ் சொற்கள்மிக்க ஆற்றலுடையவை. பயக்கும் நாட்டும் கொடுக்கும் என்பனவற்றைப் பெயரெச்சமாக்கிக்கல்விக்கு அடைமொழி யாக்கலுமாம். கைகொடுக்கும்-கைகொடு; பகுதி, கைகொடுத்தலாவது  இடையே வந்த இடுக்கணைக் கெடுத்துச் செய்யத்தக்கதுஇதுவென அறிந்து உள்ளம் ஓங்குவதற்கு ஏதுவான அறிவினை உண்டாக்குதல்,இசையும், உற்றுழியும்: உம்மைகள் இறந்ததுதழீஇய எச்சப்பொருளன. அறமுதல் நான்கையும் இசையையும்உற்றுழி உதவியையும் செய்யவல்லது கல்வி என்பதை நாயனார், முறையே "ஒருமைக் கண்தான்கற்ற கல்வி ஒருவற், கெழுமையும் ஏமாப்புடைத்து " * "யாதானு நாடாமா லூராமாலென்னொருவன், சாந்துணையுங் கல்லாதவாறு"+ கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை"+என்று  அருளினார்.

(க-து.) மக்களாய்ப்பிறந்தார் கல்வியே தக்க துணையென்று நம்பிக் கற்கற்பாலார்.
___________________________________

*திருக்குறள், கல்வி-8. +திருக். கல்வி -7. + திருக்.கல்வி-10.

   

3. கல்வியின் இன்பம்

தொடங்கும்கால் துன்பமாய் இன்பம் பயக்கும்
மடம் கொன்று அறிவு அகற்றும் கல்வி நெடுங்காமம்
முன் பயக்கும் சில நீர இன்பத்தின் முற்றிழாய்
பின் பயக்கும் பீழை பெரிது

(பொ-ள்.) முற்றிழாய்-முடிந்த தொழில்களையுடைய நகைகளையணிந்த பெண்ணே!, கல்வி-படிப்பு, தொடங்குங்கால்துன்பம் ஆய் இன்பம் பயக்கும்-படிப்பதற்குத் தொடங்குங்காலத்தில் துன்பம் தருவதாகிப் பின்புஇன்பங்கொடுக்கும்; மடம் கொன்று அறிவு அகற்றும்-(அதுவல்லாமலும்) அறியாமையை நீக்கிஅறிவைப் பெருகச் செய்யும்; (ஆனால்), நெடுகாமம்-மிகுதியான காம ஆசையோ வென்றால்,முன்பயக்கும் சில நீர இன்பத்தின் - தொடக்கத்தில் தரக்கூடிய சிறுபொழுது இருக்குந்தன்மையவான இன்பத்தைப் பார்க்கினும், பின் பயக்கும் பீழை பெரிது - அவ்வின்பநுகர்ச்சியின் பின் உண்டாகும் துன்பம் மிகுதியாகும்.

(வி-ம்.) காமத்தினால்இன்பம் நுகர்ந்துவரும் மக்களுள் கற்ற லென்பது துன்பமாயிருக்கின்றதே என்று எண்ணுநர்க்குவிடைமொழியாகும் இச்செய்யுள், மடம் - அறியாமை; அது மீண்டும் உண்டாகாதவாறு கல்விகெடுத்துவிடும் என்பார், `கொன்று' என்றார். கற்பக் கழிபடமஃகும் என்ற நான்மணிக்கடிகைச்செய்யுளும் இக்கருத்துடையது. மடம் நீங்கவே அதனுள் மறைந்து கிடந்த அறிவு எழுந்தது, அங்ஙனம்எழுவித்தலேயன்றிக் கல்வி அதனைப் பெரிதாகவும் விரியச் செய்யும் என்பார். `அகற்றும்'என்றார். நெடுங்காமம் - நெடுமை காமம்: நெடுமை - இங்கு மிகுதிப் பொருளது.

(க-து.) காம வின்பத்தினுங்கல்வியின்பமே சிறந்த தென்பது.    (3)

   

4. அவையை அழகுபடுத்தும் கல்வி

கல்வியே கற்பு உடைப் பெண்டிர் அப்பெண்டிர்க்குச்
செல்வப் புதல்வனே தீங்கவியாச் - சொல்வளம்
மல்லல் வெறுக்கையா மாண் அவை மண்ணுறுத்தும்
செல்வமும் உண்டு சிலர்க்கு

(பொ-ள்.) கல்வியே கற்பு உடைப்பெண்டிர் ஆ-கற்கின்றவர்க்குத் தாம் கற்ற கல்வியே கற்புடையமனைவியராகவும், அப்பெண்டிர்க்கு தீங்கவியே செல்வப் புதல்வன் ஆ-அம் மனைவியர்க்கு இனியபாடலே அருமையான புதல்வனாகவும், சொல் வளம் மல்லல் வெறுக்கை ஆ-அப்பாடலின் மொழிவளப்பமே நிறைந்தசெல்வமாகவும் இருக்க, மாண் அவை மண்ணுறுத்தும் செல்வமும் சிலர்க்கு உண்டு - மாட்சிமைப்பட்டஅறிஞர் அவையினை அழகுபடுத்தும் செல்வாக்கும் சிலரிடத்தில் உள்ளதாம்.

(வி-ம்.) இச்செய்யுளால், கல்வியோடு கூடிய ஒருவன் வாழ்க்கை, சிறந்த மனைவியோடு கூடி இல்லறம் நிகழ்த்தும் ஒருவனதுவாழ்க்கையை ஒக்கும் என்பது பெறப்படும், பெண்டிர், புதல்வன், செல்வம் என்பன ஒன்றுக்கொன்றுதொடர்புற்று நிற்றல் கண்டுகொள்க. "மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம்நன்மக்கட்பேறு" * என்னுந் திருக்குறளிற்போலக் கல்வி மற்றானொருவன் எவையேனும் இனியகருத்துடைய நூல்களை இயற்றியிடுதல் வேண்டும்; மகப்பெறாப் பெண்டிரோடு கூடுதலிற்பயனில்லையாதல்போல - நூல் களியற்றாக் கல்விப் புலமையும், பயனில்லையாம் என்றபடி `ஈர்ங்கவியாம்' எனவும் பாடமுண்டு. செல்வத்தாற் குழந்தைகளின் உடல் வளமும் உள்ள வளமும்சிறத்தலின் அத்தீங்கவிக்குச் சொல்வளமாகிய மல்லல்வெறுக்கை வேண்டுமென்றார்."மாணவை மண்ணுறுத்தல்" என்பது பிறர்க்கு அறிவுறுத்தலை உணர்த்திற்று.செல்வமுடையாரினும் சிலர்க்கே ஒப்புரவுச் செல்வம் இருப்பதுபோலக் கற்றாரினும் சிலர்க்கேஅவையை அணிசெய்யும் ஆற்றலுள்ளது. இச்செயல் அரிதாதல் பற்றிச் சிலர்க்கு என்றதுடன்செல்வமும் என்று சிறப்பும்மையுங் கொடுத்தார் ஈண்டுச் செல்வமும் என்பதுசெல்வாக்கையுணர்த்தும். இனிச், சொல்வளம் என்பதற்கே சொல்வன்மை என்று பொருள்கூறுவாருமுளர், தீங்கவியா: கடைக் குறை. ஆக என்பதைப்பெண்டிர்க்குங் கொள்க. இருக்க என்றொருசொல் வருவிக்க. மண்ணுறுத்தல் - கழுவுதல். இஃது எதிரிருக்கும் அவையினரை அவர் அறியாமையாகியமாசைத் தன் விரிவுரை நீரால் கழுவி அணிசெய்தலைக் குறித்து நின்றது. இச்செய்யுள் இயைபுஉருவகம்.

(க-து.) பிறர்க்கு நூலியற்றற்கும் அறிவுறுத்தற்கும் ஆற்றல் பெறாமலும், பெற்றும் அவை செய்யமாட்டாமலும் இருப்பின் கல்வியாற் பயனில்லையென்பது.         (4)

_________________________________

* திருக்குறள், வாழ்க்கைத்துணை நலம்-10. 

   

5. கல்வியும் உய்த்து உணர்வும்

எத்துணைய ஆயினும் கல்வி இடம் அறிந்து
உய்த்து உணர்வு இல் எனின் இல் ஆகும் - உய்த்து உணர்ந்தும்
சொல்வன்மை இன்று எனின் என்னாம் அஃது உண்டேல்
பொன் மலர் நாற்றம் உடைத்து

(பொ-ள்.) கல்விஎத்துணைய ஆயினும் - கற்ற கல்வி எவ்வளவு பெரியனவானாலும், இடம் அறிந்து - நூலின்இடந்தெரிந்து, உய்த்து உணர்வு இல் எனின் - ஆராய்ந்து உணரும் உணர்ச்சி இல்லையானால்,இல்லாகும்- அக் கல்வி பயனில்லையாகும், உய்த்துணர்ந்தும்-அங்ஙனம் உய்த்துணர்ந்தாலும், சொல்வன்மைஇன்று எனின் என் ஆம் - பிறர்க்கு எடுத்துச் சொல்லும் வல்லமை  இல்லையென்றால் அக் கல்வியால் என்ன பயனாகும்?, அஃதுண்டேல் -  அச்சொல்வன்மை  இருக்குமானால், பொன்மலர் நாற்றம் உடைத்து - அது பொன்னாற்செய்யப்பட்ட  மலர் மணம் உடையது போலாகும்.

(வி-ம்.) உய்த்துணர்வுஎன்பதற்கு நல்லாசிரியனைத் தெரிந்து ஆராய்ந்து அறிதலென்று பொருளுரைத்து அதற்கேற்ப எத்துணையஎன்பதற்குச் சிறுமைப் பொருளுரைப்பாருமுளர். இல்லாகும், என்னாம் என்பன படித்தும் பயனில்லைஎன்பதைக் காட்டின; உவமை சிறப்பின்கண் வந்தது. அதற்கு உவமஉருபு உரைத்துக்கொள்க. அஃது:இல்பொருளுவமை. கல்விக்கும், அதனைக் கற்பானுக்கும்; கற்றதை எடுத்துரைப்பானுக்கும் உள்ளஇயைபினை உவமை செவ்விதின் விளக்குகின்றது. `எத்துணைய தாயினும்' என்பதும் பாடம்.

(க-து.) இடமறிந்து உய்த்துணர்தலும் சொல்வன்மையும் இல்லையானாற்கல்வியாற் பயனில்லை. (5)

   

6. அவை அஞ்சுவார் கல்வி

அவை அஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார்
அவை அஞ்சா ஆகுலச் சொல்லும் - நவை அஞ்சி
ஈத்து உண்ணார் செல்வமும் நல்கூர்ந்தார் இன் நலமும்
பூத்தலின் பூவாமை நன்று

(பொ-ள்.) அவை அஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும்-கற்றார் அவைக்கு அஞ்சி உடம்பு நடுங்குவோருடையகல்வியறிவும், கல்லார் அவை அஞ்சா ஆகுலச்சொல்லும் - படிக்காதவர்களுடைய அவைக்கு அஞ்சாதஆரவாரச் சொல்லும், நவை அஞ்சி ஈத்து உண்ணார் செல்வமும் - குற்றத்துக் கஞ்சிக் கொடுத்துண்ணாதவர்கள்செல்வமும், நல்கூர்ந்தார் இன்நலமும்-வறியவர்களுடைய ஈகை முதலிய இனிமையான தன்மைகளும்,பூத்தலின் பூவாமை நன்று - ஆக இந்த நான்கு தன்மைகளும், உண்டாதலைவிட உண்டாகாமலிருத்தலேநன்று.

(வி-ம்.) இஃதுஅவைக்குச் சென்றும் அதற்கு அஞ்சுவாரைக் குறித்தது. அவையை யஞ்சி என்று இரண்டாம் வேற்றுமையுருபுவிரித்தலுமாம். விதிர்த்தல் உதறல். " மெய்தானரும்பி விதிர்விதிர்த்து ‘* என்பதுதிருவாசகம். ஆகுலம் - ஆரவாரம்: " ஆகுல நீர பிற"+ என்பதன் உரையை நோக்குக.செல்வமும் இன்னலமும் என்பன உள்ளுறை உவமமாக வந்தன. ஆகுலச் சொல்லும், மெய்விதிர்ப்பார் கல்வியும்பயனில்லை என்பது. இன்னலம் என்றற்கு இனிய அழகு என்றலுமாம். கற்றவர்களிலும் அவைக்குஅஞ்சாதவரே உண்மையிற் கற்றவர், மற்றவர் கற்றுங் கல்லாரே ஆவர். இதனைத் திருவள்ளுவனார்,"கற்றாருட் கற்றார்"+ என்றும், "கல்லா தவரிற் கடை " $ என்றுங்கூறுவார். கல்வியின் உண்மையும், இன்மையும் ஒரு சேரக்கூறினமையால் இது பழிப்பொப்புமைக் கூட்டஅணி.

(க-து.) கற்றாரவைக்குஅஞ்சுங் கல்வி பயன் படாதென்பது. (6)
______________________________

*    திருவாசகம் திருச்சதகம்,1.

+    திருக்குறள், அறன் வலியுறுத்தல், 4

+    "  அவையஞ்சாமை, 2

$    "   "                  9.

   

7. புலவர் புகழ் உடம்பு

கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும்
மலரவன் வண் தமிழோர்க்கு ஒவ்வான்-மலரவன்செய்
வெற்று உடம்பு மாய்வன போல் மாயா புகழ்கொண்டு
மற்று இவர் செய்யும் உடம்பு

(பொ-ள்.) கலைமகள்வாழ்க்கை முகத்தது எனினும்- கலைமகளினுடைய வாழ்க்கை இருவர்க்கும் தத்தம்முகத்தினிடத்ததேயானாலும், மலரவன் வண் தமிழோர்க்கு ஒவ்வான்-மலர்மேலிருக்கும் நான்முகன்வளப்பம் பொருந்திய  தமிழ்ப் புலவர்களுக்குஒப்பாகான், (ஏனென்றால்) மலரவன் செய் வெறு உடம்பு மாய்வன போல் - மலரவன் செய்கின்றபுகழில்லாத ஊன் உடம்பு அழிந்துபோவன போல, மற்று இவர் செய்யும் உடம்பு புகழ் கொண்டு மாயா- மற்று இப்புலவர்கள் செய்கின்ற நூலுடம்புகள் புகழைப்பெற்று அழியமாட்டா (ஆதலின் என்க).

(வி-ம்.) கலை- கற்றலாற் பெறப்படுவது, கலைமகள் நான்முகன் நாவிலும் புலவர்கள் நாவிலும் உறைகின்றாளென்பதை `முகத்தது' என்றார்: முகத்தது; குறிப்பு முற்று. வெறுமை இலை - வெற்றிலை என்றாற்போல வெறுமை உடம்பு வெற்றுடம் பாயிற்று. பெருமை இல்லாத வெறும் உடம்பு என்பது பொருள். மண்நீர் முதலிய பூதங்களா னியன்றமையின் வெற்றுடம்பு மாய்வன; புலவர்கள் செய்யும் நூல் பின்னும்பின்னும் புகழப்படுதலின் மாயா என்றார் ; நூலை உடம்பென்று கூறினார்; " பல்வகைத்தாதுவின் உயிர்க்கு உடல்போற் பல சொல்லாற்பொருட்கிடனாக......செய்வது செய்யுள்"* என்பது நன்னூல். ஐயாயிரம் ஆண்டுகளுக்குமுன்னேயிருந்த தொல்காப்பியனாரும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயிருந்த திருவள்ளுவனாரும்அருளிச்செய்த தொல்காப்பியம், திருக்குறள் என்னும் இலக்கண இலக்கிய நூல்களாகியஉடம்புகளின் வாயிலாக அவர்கள் செய்து கொண்ட புகழ் இன்றும் அழியாமல் நின்றுநிலவுகின்றமையும், ஆனால், மலரவன் செய்த அவரூனுடம்புகள், புகழோடு இக்காலத்திற் காணமுடியாதபடிஅக்காலங்களிலேயே மறைந்து போனமையுங் கண்டுகொள்க, இவ்வுண்மையை நாயனார், "கேடில்விழுச் செல்வம்"+ என்று உளமாரக் கூறுவர். இவ்வெற்றுடம்பும் புகழுடம்பும் மேல் 40ஆவதுசெய்யுளிலும் வருதல் காண்க. பிறிதின்கண் வந்தது. இச்செய்யுள், தொழில் வேற்றுமையணி.

(க-து.) கல்வியே என்றும் அழியாதது.           
______________________________________

*   நன், பெயரியல், 11.

+   திருக்குறள், கல்வி, 10.

   

8. அவையத்து உதவாதார் கல்வி

நெடும்பகற் கற்ற அவையத் துதவா
துடைந்துளா ருட்குவருங் கல்வி - கடும்பகல்
ஏதிலான் பாற்கண்ட இல்லினும் பொல்லாதே
தீதென்று நீப்பரி தால்

(பொ-ள்.)   நெடும்பகல் - பல நாளாக, கற்ற - தம்மாற்படிக்கப்பட்ட நூல்கள், அவையத்து - அவையிலே, உதவாது - எடுத்துரைப்பதற்குக் கூடாமல்; உடைந்துஉளார் - தோல்வியுற்றிருப்பவருடைய, உட்குவரும் - அச்சத்தைத் தரும், கல்வி - படிப்பானது,கடும்பகல் - நண்பகலில், ஏதிலான்பால் - அயலவனிடம், கண்ட - வயப்பட்டிருக்கப் பார்த்த,இல்லினும்- மனையாளைப் பார்க்கிலும், பொல்லாது - தீயதாகும்; (ஏனெனில்). தீது என்று -(அவளைத் தீயவளென்று நீக்குமாறு போலத்) தன் கல்வியைத் தீயதென்று, நீப்பு அரிது -நீத்தற்கு அரிதாதலின் என்பது.

(வி-ம்.) பகல்-நாள்,நெடுமை - நீட்சி, கற்ற கல்வி, உட்குவரும் கல்வி என்றும் இயைக்கலாம். கடும்பகல்- பெரிதும்விளக்கமுடைய உச்சிக்காலம். இல்லாள் தற்கொண்டாற்பேணி அறுசுவை உண்டி அமர்ந்து  ஊட்ட வேண்டியவளாதலின், அதனைச் செய்யாது, கொண்டகணவன் காலையில் தொழிலின் பொருட்டு வெளியே வயல் முதலிய இடங்கட்குச் சென்றுவியர்த்திளைத்துத் திரும்பியவன் மேலுந் துயருறும்படி அயலவன் அகம் அடைந்திருப்பதுணரின்அத்தகைய மனைமாட்சியற்றாள் தனக்கு நலம் பயவாதவள் என்று விலக்கப்படுதலும் கூடும்; ஆனால்கற்ற கல்வி அங்ஙனம் நீக்கப்படுதலும் இயலாதென்பார், `இல்லினும் பொல்லாதே' என்றார்.பால்: ஏழனுருபு. இல் - மனையாள்: இடவாகு பெயர்; உடைதல் - பின் வாங்கல், கெடுதல். நீப்பு:தொழிற்பெயர்; நீ: பகுதி, உட்கு - நாணமுமாம்.

(க-து.) அவைக்கு அஞ்சுங் கல்வி தீதுடையது.  
____________________________ 

*   நன், பெயரியல், 11.

+   திருக்குறள், கல்வி, 10.

   

9. கற்றன ஓம்புதல்

வருந்தித்தாங் கற்றன ஓம்பாது மற்றும்
பரிந்துசில கற்பான் தொடங்கல் - கருந்தனம்
கைத்தலத்த உய்த்துச் சொரிந்திட் டரிப்பரித்தாங்கு
எய்த்துப் பொருள்செய் திடல்

(பொ-ள்.) தாம் வருந்தியக் கற்றன ஓம்பாது - மக்களாவார் தாங்கள் வருத்தப்பட்டுக் கற்றநூற்பொருள்களை மறந்து போகாதவாறு அடிக்கடி நினைத்துப் பாதுகாக்கமாட்டாமல், மற்றும் சிலபரிந்து கற்பான் தொடங்கல் - இன்னும் சில நூல்களை வருந்திக் கற்கத் தொடங்குதல்,கைத்தலத்த கருந்தனம் உய்த்து சொரிந்திட்டு - ஒருவன் தன் கையில் இருப்பதான மிகுந்தபணத்தை வீசிஎறிந்துவிட்டு, ஆங்கு அரிப்பு அரித்து எய்த்துப் பொருள் செய்திடல் -எறிந்தஅவ்விடத்தில் அரிப் பரித்து இளைத்துப் பொருள் சேர்ப்பது போலாகும்.

(வி-ம்.) உவமஉருபு சேர்த்துக்கொள்க. `வருந்தித் தாங் கற்றன' என்றமையால், கற்றலின் அருமைபெறப்பட்டது. தொடங்குங்கால் துன்பமாய் என்று முன்னுங் (3) கூறினார். ஓம்புதல் -பாதுகாத்தல்: `குடியோம்பி என்பர் பின்னும்(2). மற்றும்- பிறிதுணர்த்தி நின்றது. கற்பான்:பானீற்று வினையெச்சம், கற்பதற்கு என்க. கருந் தனம் - பெரிய சொத்து கருமைக்கு இப்பொருளுண்மை "கருங்கறி மூடையோடு"* என்பதிற் காண்க. உய்த்து - செலுத்தி, இங்குவீசுதல் அரிப்பரித்தல் - வெயிலில் நின்று மண்ணை அரித்தெடுத்தல். இவ்வரித்த மண் வீடுகட்டுதற்கும் பாண்டம் மனைதற்கும் பயன்படும். இனி மண்ணோடு கலந்து கிடக்கும் பொருள்கள்அரித்தெடுக்கப்படுதல் பற்றி அரிப்பெனப்பட்டது எனினுமாம். பொருள் செய்திடல் - பொருள்சேகரித்தல். தொடங்கல், செய்திடல் போலாம் என்று முடிக்க.

(க-து.) கற்றவற்றை மறந்து மேலும் கற்பது பேதைமை.        (9)
________________________________

*    சிலப். ஊர் காண். 210.

   

10. வறிஞர் கல்வி

எனைத்துணைய வேனும் இலம்பாட்டார் கல்வி
திணைத்துணையுஞ் சீர்ப்பா டிலவாம் - மனைத்தக்காள்
மாண்பில ளாயின் மணமகன் நல்லறம்
பூண்ட புலப்படா போல்

(பொ-ள்.) மனைத்தக்காள்-மனைவி, மாண்பு இலளாயின் - மனைக்குத்தக்க மாட்சிமை இல்லாதவளானால் மணமகன்பூண்ட நல் அறம்- கணவன் மேற்கொண்ட இல்லறம், புலப்படா போல் - விளங்காதது போல,இலம்பாட்டார் கல்வி-வறுமைத் துன்பமுடையவர் கல்வி, எனைத் துணையவேனும் தினைத்துணையும்சீர்பாடு இலவாம் - எவ்வளவு திட்ப நுட்பங்கள் உடையவானாலும் தினையளவும் சிறப்புண்டாதல்இல்லையாம்,        

(வி-ம்.) எனைத்துணைய என்பதைத் திட்பநுட்பங்களுக்குக் கொள்க. இலம்பாடு வறுமை என்னும் பொருள் தருதலை,“இலம்பாடு அகற்றென்று”, என்னுந் திருவிளையாடற் புராணத்தாலறிக. சீர்ப்பாடு - சிறத்தல்;“மனைத்தக்க மாண்புடையள்”? என்பது இங்கு ‘மனைத்தக்காள் மாண்பு’ எனப்பட்டது.
    

“நற்குணநிறைந்த கற்புடை மனைவியோ
டன்பும்அருளுந் தாங்கி இன்சொலின்
விருந்துபுறந்தந் தருந்தவர்ப் பேணி
ஐவகைவேள்வியும் ஆற்றி”

என்று இவ் வாசிரியர் இயற்றிய சிதம்பர மும்மணிக் கோவையடிகள் மனைத்தக்காள்...........நல்லறம்”என்பதன் கருத்தை விளக்கும். “இல்லற மல்லது நல்லற மன்று”+ என்ற ஒளவைச் செல்விகூறினமையால், இங்கு நல்லறம் எனப்பட்டது இல்லறமாயிற்று.

(க-து.) கல்வி சிறப்பதற்குச் செல்வப் பொருளும் வேண்டும் (10)

_________________________________

*    உலவாக்கிழி யருளிய படலம், 13

+   திருக்குறள், வாழ்க்கைத்துணை நலம், 1.

+   கொன்றை வேந்தன், 3.