11-20
|
|
இன்சொல்லன் தாழ்நடையன் ஆயினுமொன் றில்லானேல் வன்சொல்லி னல்லது வாய்திறவா - என்சொலினும் கைத்துடையான் காற்கீழ் ஒதுக்குங் கடன்ஞாலம் பித்துடைய வல்ல பிற |
|
(பொ-ள்.) இன்சொல்லன் - இனிய சொற்களையுடையவனும், தாழ் நடையன் - அடங்கிய ஒழுக்கமுடையவனும்,ஆயினும்-ஆனாலும், ஒன்று இல்லானேல் - அவன் சிறிதும் பொருள் இல்லாதவறியவனானால், கடல் ஞாலம் - கடலாற் சூழப்பட்ட உலகம். வன்சொல்லின் அல்லது-கடுஞ்சொற்கொண்டு பேசுதலல்லாது, வாய் திறவா - இன்சொற்கொண்டு பேசாவாம், என்சொல்லினும் - யாதுதான் சொன்னாலும், கைத்து உடையான் கால்கீழ் ஒதுங்கும் - செல்வமுடையவன்காலின் கீழே அடங்கும். (ஆதலால் இவ்வுலக நிலைகள்) பித்து உடைய - பேதுறவேஉடையன, அல்ல பிற - நல்லறிவு உடையன அல்ல. (வி-ம்.) பிறர் மகிழும்படி தீங்குபயவாத வகையிற்பேசும் பேச்சு இன்சொல், தாழ்நடை - அடக்கியஒழுக்கம். ஒன்று - சிறிது என்னும் பொருளில் வந்தது: இழிவு சிறப்பும்மை விரித்துக்கொள்க. வன்சொல்லினல்லது வாய்திறவா என்றது, உலகம் வன்சொல் சொல்லுதற்குவாய்திறக்குமேயன்றி வேறு இன்சொல் சொல்வதற்கு வாய்திறவா என்றற்கு. கைத்து -கையிலிருப்பது; தன்மைத்து என்பதுபோல; அது பொருளை உணர்த்திற்று. என்-இங்குத் தாழ்ந்ததைத்குறித்தது. ஞாலம், அதன்கண் உள்ள மக்களுயிர்களை உணர்த்தி ஆகுபெயராய்நின்றது, ஞாலம் என்னுஞ் சொல்லின் அஃறிணை பற்றித் திறவா, ஒதுங்கும், உடைய அல்ல, பிறஎன்பன வெல்லாம் பலவின் பாலாகவே வந்தன. பித்து - நல்லதன் நன்மையும் தீயதன்தீமையும் பிரித்துணராமை. (க-து.) செல்வர், நற்குண நற்செய்கைகள் இல்லாதவராயினும் உலகம் அவர்க்கு அடங்கிநடக்கும். (11) |
|
|
|
|
|
இவறன்மை கண்டும் உடையாரை யாரும் குறையிரந்துங் குற்றவேல் செய்ப - பெரிதுந்தாம் முற்பகல் நோலாதார் நோற்றாரைப் பின்செல்லல் கற்பன்றே கல்லாமை யன்று |
|
(பொ-ள்.) இவறன்மை கண்டும் - ஈயாத்தன்மையைத் தெரிந்துகொண்டிருந்தும், உடையாரை - செல்வமுடையவர்களை,யாரும்- எல்லாரும், குறையிரந்தும் குற்றேவல் செய்ப - பொருள் வேண்டி அதன் பொருட்டுக்கைவேலைகளும் செய்வார்கள், முன்பகல் பெரிதும் தாம் நோலாதார் - முன்பிறப்பில் தாங்கள் மிகவும்தவம் செய்யாதவர்கள், நோற்றாரைப் பின் செல்லல் கற்பு அன்றே - தவம் செய்தவர்களைப்பின்சென்று வேண்டுதலன்றோ கல்வியறிவாகும்; கல்லாமை அன்று - அஃது அறியாமையன்று. (வி-ம்.) தவமுடையாரைவேண்டுதல் கல்விக்கு அழகு என்றமையாற் பொருளுடையாரை வேண்டுதல் அழகன்று என்பது பெறப்படும்இஃது இசையெச்சம். இவறன்மை - கேட்டபொழுது பொருள் கொடாமை, இஃது `இவறலும் மாண்பிறந்தமானமும்’* என்ற விடத்துப் பரிமேலழகர் இவறலும் என்பதற்கு “வேண்டியவழிப் பொருள்கொடமையும்” என்று உரைகூறுதலின் வைத்து அறியப்படும். குறையிரத்தல்:இஃது ஒருசொன்னீர்மைத்தாய், நின்று வேண்டுதல்என்னும் பொருள் தந்து நின்றது. குற்றேவல் - எடுபிடிவேலை. உம்மையைக் குற்றேவலுக்குக் கூட்டுக. பகல் - பிறப்புணர்த்திற்று. கல் என்னும் பகுதிவிவ்விகுதி பெற்றுக் கல்வி யென்றாயதுபோல், புவ்விகுதி பெற்றுக் கற்பு என்றாயிற்று. கல்விகற்பு என்பன ஒரு பொருட் கிளவிகள், கற்பன்றே - என்பதனோ டமையாமற் கல்லாமையன்று என்றுபின்னுங் கூறியது தெளிவின் பொருட்டு. கற்பன்றே என்றது, ஈதன்றோ கற்பு என்றபடி. முற்பகலில்தவம் மிகுதியுஞ் செய்து செல்வராயுள்ளாரை, அவ்வாறு தவம் செய்து செல்வம் பெறாதஇலம்பாட்டார் பின் செல்வதன்றோ கல்வி யறிவின் பயன் அஃது அறியாமையன்று’ என்று உரைகூறுவாருமுளர்: பொருளுடையாருள் இவறன்மை இல்லாதாரே தவமுடையராதலின், அது பொருளன் றென்பதுகண்டுகொள்க, நோற்றாரைப் பின் செல்லல் `கற்பன்றே கல்லாமையன்று’ என்றமையின், இவறன்மைகண்டு முடையாரை யாருங் குறையிரந்துங் குற்றேல் செய்தல் கல்லாமையன்றே கற்பன்று என்பதும்பெறப் படுமாறறிந்து கொள்க, (க-து.) பொருளுடையாரினும் தவமுடையார் உலகத்தவராற் பின்பற்றத்தக்கவராவர்,(12) ________________________________ * திருக்குறள், குற்றங்கடிதல், 2 |
|
|
|
|
|
கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால் மற்றோ ரணிகலம் வேண்டாவாம் - முற்ற முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே அழகுக் கழகுசெய் வார் |
|
(பொ-ள்.) முற்ற - ஒரு காலத்திலும், முழுமணிப் பூணுக்குப் பூண் வேண்டா - முழுமுழு மணிகளாற் செய்யப்பட்டநகைக்கு வேறு நகைவேண்டா. யாரே அழகுக்கு அழகு செய்வார் - எவர்தாம் அழகுக்கு அழகுசெய்வார்கள்’ (அதுபோல), கற்றோர்க்குக் கல்வி நலனே கலன் அல்லால் - படித்தவர்களுக்குஅப் படிப்பினழகே அழகாவதல்லாமல், மற்றோர் அணிகலம் வேண்டா ஆம்-அவருக்கு வேறொரு நகையழகுவேண்டுதல் இல்லையாம்.
(வி-ம்.) முற்ற - என்றது, எக்காலத்திலும் என்பதுணர்த்திற்று, உடைத்துச் சாணை தீட்டப்பட்டபொடிமணிகளாலல்லாமல் முழு மணிகளாலேயே செய்யப்பட்ட நகையாம் என்றற்கு முழுமணிப் பூண்என்றார். பூண்: முதனிலைத் தொழிலாகு பெயர்: கல்வி நலன் என்பது நல்ல கல்வியைக் குறித்தது;கல்வியழகு என்பது பொருள். நலன், கலன்: கலம் என்பவற்றின் போலி, முழுமணி - மாணிக்கம்;அஃது அறிவு நூற்கல்வி. மற்று - பிறிது. *`ஒருமொழி யொழிதன் இனங்கொளற் குரித்தே’என்பதனால் நகை என்னும் உவமையோடு, உடை முதலான அழகுகளையுங் கொள்க, இவையெல்லாம் தரும்அழகுகளை விடக் கல்வியாலாகும் அழகு பெரிதென்பது. “குஞ்சிஅழகும்கொடுந்தானைக்கோட்டழகும் மஞ்சள்அழகும் அழகல்ல - நெஞ்சத்து நல்லம்யாம்என்னும் நடுவு நிலைமையால் கல்விஅழகே அழகு” என்னும் நாலடியாராலுங் காண்க.ஆம்: அசை.
(க-து.) செல்வ வாழ்க்கையினுங்கல்வி வாழ்க்கையே சிறந்தது. (13) ______________________________________ * நன்னூல்; பொதுவியல், 7. |
|
|
|
|
|
14. கல்விச் செருக்கால் பயனில்லை |
முற்றும் உணர்ந்தவர் இல்லை முழுவதூஉங் கற்றனம் என்று களியற்க - சிற்றுளியால் கல்லுந் தகருங் தகரா கனங்குழாய் கொல்லுலைக் கூடத்தி னால் |
|
(பொ-ள்.) கனம்குழாய் - பளுவான காதணியை உடைய பெண்ணே!, முற்றும் உணர்ந்தவர் இல்லை - எல்லாம்தெரிந்தவர் உலகத்தில் ஒருவரும் இல்லை; முழுவதூஉம் கற்றனம் என்று களியற்க - ஆதலால்எல்லாவற்றையும் கற்றுவிட்டோம் என்று செருக்காதே, ஏனென்றால், சிறு உளியால் - மிகச்சிறிய உளியினால், கல்லும் தகரும் - மலைகளும் உடையும்; கொல் உலைக் கூடத்தினால் தகரா -ஆனால் கொல்லனுடைய உலைக்களத்தில் உள்ள சம்மட்டியினால் அம்மலைகளும் உடையா.
(வி-ம்.) உணர்ந்தவர் இல்லை என்று உயர்திணைப் பெயருக்கு இல்லையென்னும் பயனிலை கொடுத்து முடித்தலை, *“ வேறு இல்லை உண்டு ஐம்பால் மூவிடத்தன” என்பதனாற் கொள்க. கற்றனம்; தன்மை ஒருமைஉட்கொண்டது; சிறப்பின் பொருட்டுப் பன்மையில் வந்தது. கல்-மலை; இஃதிப் பொருட்டாதல்“கல் இயங்கு கருங்குற மங்கையர்”+ என்னுங் கம்பர் மொழியிற் காண்க. தகரா: எதிர்மறைப்பலவின்பால் வினைமுற்று. கொல்- கொல்லன்; விகுதிகெட்டுப் பகுதியளவாய் நின்றது. இங்ஙனம்வருதலைக்”கொல் உலை வேற்கண் நல்லார்” + என்னும் நைடதப் பாட்டானும் அறிக. உலை,உலைக்களத்துக்கு வருதலும் அதன்கண் உள்ளது. கூடம் என்பது சம்மட்டியை உணர்த்துதலும் “ கூடம்எடுத்து அங்கைத் தலத்தால் அறைதிர்”* என்பதன்கண் அறியப்படும். முதலிரண்டடிகளுக்குப்பின்னிரண்டடியின் உவமையால் ஏதுக்கூறினார். உவமம், சிறிது கற்றாரும் பெரிது கற்றாரை வென்றுவிடுவர் என்னும் வேறொரு பொருளையும் உட்கொண்டு நின்றது. (க-து.) கற்றனம் என்று செருக்கடையலாகாது. (14) ________________________________ * நன்னூல், வினையியல், 20 + இராமா, வரைக,61. + நைடதம், நாட்டுப். 27. |
|
|
|
|
|
15. அகமகிழ்வும் செருக்கழிவும் |
தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை அம்மா பெரிதென் றகமகிழ்க - தம்மினுங் கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம் எற்றே இவர்க்குநாம் என்று |
|
(பொ-ள்.) தம்மின் மெலியாரை நோக்கி - தம்மை விடச் செல்வத்திற் குறைந்திருப்பாரைப் பார்த்து,தமது உடைமை அம்மா பெரிது என்று அகம் மகிழ்க - தாம் பெற்ற செல்வப்பொருள், அம்மா!மிகுதியாகும் என்று உள்ளம் மகிழ்ந்து கொள்க: (ஆனால்) தம்மினும் கற்றாரை நோக்கி -தம்மைவிட மிகுதியாகப் படித்திருப்பவர்களைப் பார்த்து, நாம் கற்றதெல்லாம் எற்றே இவர்க்குஎன்று கருத்து அழிக - நாம் படித்த படிப்பெல்லாம் இவர் படிப்புக்கு எந்த அளவின் தன்மையதுஎன்று வருந்திச் செருக்குக் கருத்தை விட்டுவிடுக. (வி-ம்.) செல்வத்துக்குப் பெயராக வரும் உடைமை என்பதைக் கூறினார், செல்வநிலையிலும் இங்ஙனமேதம்மின் மெலியாரைக் கண்டு அகம் மகிழ்தற்கும், பெரியாரைக் கண்டு கருத்தழிதற்கும் என்க.‘அகம் மகிழ்க’ என்றார், தம் மகிழ்ச்சியைப் புறத்திற் காட்டலாகா தென்றற்கு, ‘அழிகஎன்றார். கல்விச்செருக்கின்பால் சான்றோர்களுக்கு உள்ள வெறுப்பைத் தேற்றுதற்கு,உடைமை-செல்வம், `இவறன்மை கண்டும் உடையாரைக்” (12) என்று முன்னும் வந்தது, இச்செய்யுள்,உள்ளக்கருத்தை நோக்கியதாதலால், உடைமை என்பதைப் பண்புப் பெயராகக் கொண்டு உடையராந்தன்மை என்று பொருள் செய்தலும் ஒன்று. இஃது *`எம்மையுடையார் எமையிகழார்’ என்னும் சிவஞானபோதத் திருமொழியிலும் +”உடைமையுள் இன்மை” என்னும் திருவள்ளுவர் திருமொழியிலும்விளங்கும். திருவள்ளுவர் திருமொழியில் உள்ள உடைமை என்பதற்கு உரையாசிரியர் பரிமேலழகர்”உடையனாந் தன்மை” என்று பொருளுரைத்தார். அம்மா: வியப்புணர்த்தும் இடைச்சொல், எல்லாம்முழுமைத் தன்மையை ஏற்று அளவினையுங் குறித்தது. (க-து.) செருக்கும் வருத்தமும் இல்லாமல் மேன்மேலும் கற்றலிலே கருத்தூன்றி நிற்றல் வேண்டும், (15) __________________________________ * நைடதம்,சந்திரோபாலம்பனப் படலம்; 12. * சிவஞானபோதம், அவையடக்கம் + திருக்குறள் - விருந்தோம்பல் : 9. |
|
|
|
|
|
16. தாழ்ந்தாரிடந் தாழ்தல் |
கல்வி யுடைமை பொருளுடைமை யென்றிரண்டு செல்வமுஞ் செல்வ மெனப்படும் - இல்லார் குறையிரந்து தம்முன்னர் நிற்பபோல் தாமுந் தலைவணங்கித் தாழப் பெரின் |
|
(பொ-ள்.) இல்லார்- கல்வியும்செல்வமும்இல்லாதவர்கள், குறையிரந்து தம்முன்னர்நிற்ப போல் -அவ்விரண்டையும் வேண்டி அவ்விரண்டுடைய தமக்கு முன்னால் நிற்பதுபோல, தாமும் தலைவணங்கித்தாழப் பெறின் - தாங்களும் தலையால் வணங்கித் தாழ்ந்து நிற்கப் பெற்றால்; கல்வியுடைமைபொருளுடைமை என்று இரண்டு செல்வமும்செல்வம் எனப்படும்- தாங்கள்பெற்றகல்விச்செல்வம்பொருட்செல்வம்என்னும்- இரண்டு செல்வங்களும் உண்மைச் செல்வங்களென்றுஉயர்ந்தோராற் பாராட்டப்படும். (வி-ம்.) உடைமை என்பதைத்தொழிலாகு பெயராகக்கொண்டு செல்வம்என்று உரைக்க, அவ்வாற்றால்,கல்வியுடைமை என்பது கல்வியாகிய உடைமை எனப்பொருளாம். இது பண்புத்தொகை நிலைத்தொடர்.இவ்வாறுரைக்க அறியாதார்உடைமை இரண்டுங் குறிப்புத் தொழிற் பெயரெனக் கொண்டு பொருள்மயக்கஞ் செய்வர். செல்வத்தாற் கல்வியும் கல்வியாற் செல்வமும் ஒன்றுக்கொன்று துணையாய்நின்று ஓங்கிப்பொலியுமாதலின், இவ்விரண்டும் ஒருவற்கு வேண்டற்பாலனவாம் என்பது கருத்து.இதற்குமுன் வந்த 10, 11 ஆம் செய்யுட்களாலும் இது விளங்கும். பொருளுடைமையால் விளையுஞ்செருக்கெழுச்சியைக் கல்வி யுடைமை தாழச் செய்யுமாதலின், `தாழப்பெறின்’ என்றார். பொருட்செல்வத்தை உண்மைப் பொருட் செல்வமாக்குவது கல்வியுடைமையாதலால் அதனை முற்கூறினார்.அன்றியும், இல்லையென்று வருவாரை இன்சொன் மொழிந்து தாழ்ந்து எதிரழைப்பது முன்னும், பொருள்தருவது பின்னுமால் நிகழ்தலாய், அம்முறையே தாழ்மை பயக்குங் கல்வியுடைமை, ஈகை பயக்குஞ்செல்வமுடைமைக்கு முன்னின்றது என்றலுமாம். இங்ஙனம் ஈகையுமான பயன்களைப் பெற்றபொழுதேகல்வியுடைமையும் செல்வமுடைமையும் உண்மைச் செல்வங்களெனப்படும் என்றதற்குச் `செல்வமுஞ்செல்வமெனப்படும், எனப்பட்டது. “அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்,பூரியார் கண்ணும் உள”* என்னுந் திருவள்ளுவர் கருத்தும் இது. தாழ்தலையுடையவர் கொடையுடையராயிருப்பவராதலால், தாழப்பெறின் என்பதனோடு நின்றது. தலைவணங்கித் தாழப்பெறின் என்றார்.கல்வியுடைமை செல்வமுடைமை என்னும் இரண்டாலும் விளைவதாம் செருக்கை அவ்வப்போதுஅடக்கிக்கொண்டே வரல் வேண்டுமென்பதற்கு, “பெறின்” என்றார், தாழ்தலின் அருமையும்பெருமையுந் தோன்ற, “கீழோ ராயினுந் தாழவுரை”* என்னும் முதுமொழி இங்குக் கருதுதற்குரியது.இனிக் கல்வியுஞ் செல்வமும் தனித்தனி உடையார்க்கும் இச் செய்யுட் கருத்துப் பொருந்தும்,நிற்ப நிற்பது என்பதன் ஈறு தொகுத்தல்.
(க-து.) கல்வியும் செல்வமும் உடையார்க்கு அழகாவது அவையில்லாதாரிடத்துந் தாழ்மையோடிருத்தலாகும். (16) __________________________________ * திருக்-அருளுடைமை,1. * கொன்றைவேந்தன, 7. |
|
|
|
|
|
17. தாழாதாரிடத்துந் தாழ்தல் |
ஆக்கம் பெரியார் சிறியா ரிடைப்பட்ட மீச்செலவு காணின் நனிதாழ்ப - தூக்கின் மெலியது மேன்மே லெழச்செல்லச் செல்ல வலிதன்றே தாழுந் துலைக்கு |
|
(பொ-ள்.) தூக்கின்- உயர்த்திப்பிடித்தால்துலைக்கு - தராசில், மெலியது மேன்மேல் எழச்செல்ல செல்ல -இலேசான பொருளுள்ள தட்டு மேல்மேலே எழுவதற்கு உயரும்பொழுதெல்லாம், வலிது அன்றே தாழும்-பளுவானபொருளுள்ள தட்டன்றோ தாழ்ந்து போகும்; (அதுபோல), ஆக்கம்பெரியார்- கல்வியிலும்செல்வத்திலும்அல்லதுஇவ்விரண்டிலும்மிகுந்து பெரியாராயிருப்பவர்கள், சிறியாரிடைப்பட்டமீச்செலவுகாணின்நனிதாழ்ப- அவ்விரண்டிலுங்குறைந்து சிறியராயிருப்பவர்களிடத்தில்உண்டானவரம்பு கடந்த நடக்கையைக்கண்டால்அவர்களுக்கு மிகவும்தாழ்ந்து நடப்பார்கள். (வி-ம்.) ஆக்கம்- ஆக்குதல்; அது தன்னைச்சேர்த்துக்கொண்ட ஒருவனைமேன்மேலும்உயர்வாக்கும்என்னும்பொருளில்ஆகுபெயராய்க்கருவியையும்செல்வத்தையும்உணர்த்திற்று.ஆக்கத்திற். பெரியார்சிறியார்என்று கொள்க, இடை, இடம்என்பன ஒரு பொருட்பன்மொழி. பட்ட- உண்டான. மீச்செலவு-அளவுக்குமீறி நடக்கும்நடக்கை: செலவு - நடக்கை: இது தொழிற்பெயர்,இஃதிப்பொருட்டாதல்*”சேவடி படரும்செம்மல்உள்ளமொடு, நலம்புரி கொள்கைப்புலம்பிரிந்துஉறையும்செலவு” என்ற விடத்துக்காண்க. மீச்செலவு: ஒரு சொன்னீர்மைத்து. எழ, செல்லஎன்னும்இரண்டிற்கும்வினைமுதல்இலேசான பொருளுள்ள தட்டு, மெலியது வலிது என்பன இடத்துக்கேற்றபடிதுலைத்தட்டுகளை உணர்த்தின. துலைக்கு: உருபு மயக்கம்.முன்செய்யுள்தாழ்ந்தாரிடந்தாழ்தலைக்குறித்தது. இச்செய்யுள்தாழாதாரிடத்துந்தாழ்தலைக்குறித்தது,
(க-து.) தமக்குத் தாழ்ந்து நடவாதாரிடத்தும் தாம் தாழ்ந்து நடத்தலே தக்கது. (17) _________________________________ * திருமுருகாற்றுப்படை, 64 |
|
|
|
|
|
18. நலத்தகையார் தற்புகழ்ச்சி |
விலக்கிய ஓம்பி விதித்தனவே செய்யும் நலத்தகையார் நல்வினையுந் தீதே -புலப்பகையை வென்றனம் நல்லொழுக்கில் நின்றேம் பிறவென்று தம்பாடு தம்மிற் கொளின் |
|
(பொ-ள்.) புலப்பகையை - ஐந்துபுலன்களாகிய பகையையும், வென்றனம் - வென்றுவிட்டோம்; நல்ஒழுக்கில் -நல்லொழுக்கத்தில் நின்றேம் என்று-தவறாமல் நின்றோமென்று, தம்பாடு - தம்பெருமையை,தம்மில் கொளின்-தமக்குள் கருதிக்கொள்வாராயின், விலக்கிய- செய்யத் தகாதவென்றுவிலக்கப் பட்ட செயல்களை, ஓம்பி - செய்யாமற் காத்து, விதித்தனவே-செய்யத் தக்கவையென்றுவரையறுக்கப்பட்டவற்றையே, செய்யும் - செய்தற்கரிய, நலத்தகையார்- நன்மையாகியதன்மையுடையாரது, நல்வினையும் - நல்ல செயலும், தீதே - பயனற்றதேயாகும். (வி-ம்.) ஓம்பி- பேணி,விலக்கிய , விதித்தன: பலவின்பால் வினையாலணையும் பெயர்கள். ஐம்புலன்கள்,சுவையொளியூறோசை நாற்றம் என்பன. இவை மனத்தை முத்தி வழியிற் போகவிடாதுதடுத்தலின்,புலப்பகை என்றார். ஏ இரண்டில் முன்னது பிரிநிலை, பின்னது தேற்றம். ஒழுக்கு:முதனிலை திரிந்த தொழிற்பெயர். பிற: அசை; நல்வினையும்: உம்மை உயர்வு சிறப்பு. வென்றனம்நின்றோம்: தன்மைப் பன்மை, வினைமுற்றுக்கள்: அம் ஏம் என்பன விகுதி. (க-து.) ஐம்புலன்களையும்வென்ற நல்லொழுக்கமுடையாரும் தற்புகழ்ச்சி கொள்ளல்தீது. (18) |
|
|
|
|
|
19. தற்புகழ்ச்சியின் இழிவு |
தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர் நன்னீர் சொரிந்து வளர்த்தற்றால் - தன்னை வியவாமை யன்றே வியப்பாவ தின்பம் நயவாமை யன்றே நலம் |
|
(பொ-ள்.) தன்னை வியப்பிப்பான்தற்புகழ்தல்-தன்னைப் பிறர் மதிக்கும்படி செய்வதற்காகத் தன்னைத் தானே புகழ்ந்துகொள்ளுதல், தீச்சுடர் நல்நீர் சொரிந்து வளர்த்தற்று-குளிர்ந்த நீரை விட்டுத்தீவிளக்கைவளர்த்தது போலாம்; ஆதலால், தன்னை வியவாமை அன்றே - வியப்பாவது தன்னைத்தான்புகழ்ந்து கொள்ளாமை யன்றோ நன்மதிப்பாகும்; இன்பம் நயவாமை அன்றே நலம்-இன்பத்தை விரும்பாமையன்றோ இன்பமாகும்? (வி-ம்.) தீ வளரும் என்னுநீர்விட்டால் முன்னிருந்த தீயும் எப்படி வளராது அவிந்தே போகுமோ அதுபோலவே,தனக்கு மதிப்பு மிகுமென்று தன்னைத் தானே புகழ்ந்து கொண்டால் இதற்கு முன்னிருந்த மதிப்புமிகாது அழிந்தே போகும் என்பது. வியப்பிப்பான்; பானீற்று வினையெச்சம். மணிச்சுடர்முதலாயின இருத்தலின், இதனைத் தீச்சுடர் என்றார். தீச்சுடர் என்ற குறிப்பால்நல்நீர் என்பது தண்ணீராயிற்று. சொரிந்து என்னுங் குறிப்பினால் எரியும்போது நெய்சொரிந்து தீ வளர்த்தல் போல, வளருமென்று, எரியும்போது தண்ணீர் சொரிந்து அதன் வளர்ச்சியை எதிர்நோக்கினானென்பது பெறப்படும். இங்ஙனம் கூறவறியாது,எண்ணெய் விடுதற்கு ஈடாக அகலில் தண்ணீர் நிரப்பித் தீ வளர்த்தான், என்று சிறவாப்பொருளுரைப்பாருமுளர். இன்பம் நயவாமையன்றே நலம் என்பதை வியவாமை யன்றே வியப்பு என்பதற்குஉவமையாகக் கொள்ளலுமாம். நலம்-ஈண்டு இன்பம், நயவாமையே இன்பமாவதென்பது, “இன்பம்இடையறா(து) ஈண்டும் அவா என்னும, துன்பத்துள் துன்பம் கெடின்”* என்னும் வாய்மொழியினால்இனிது விளங்கும். ஆவது என்பதை நலத்திற்குங் கொள்க. (க-து.) தற்புகழ்ச்சி இகழ்ச்சியைத்தரும் (19) _____________________________ * திருக்குறள். அவாவறுத்தல், 9. |
|
|
|
|
|
பிறரால் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும் மறவாமே நோற்பதொன் றுண்டு - பிறர்பிறர் சீரெல்லாந் தூற்றிச் சிறுமை புறங்காத்து யார்யார்க்கும் தாழ்ச்சி சொலல் |
|
(பொ-ள்.) பிறரால்பெருஞ்சுட்டு வேண்டுவான் - மற்றவர்களால் நன்கு மதிக்கப்படுவதற்காக பெருமதிப்பைவிரும்புமொருவன், யாண்டும் மறவாமே நோற்பது ஒன்று உண்டு - எப்பொழுதும்மறவாமற் செய்யத்தக்கது ஒன்றிருக்கின்றது; (அது), பிறர் பிறர் சீர் எல்லாம்தூற்றிச் சிறுமை புறம் காத்து - மற்றவருடைய பெருமைகளை யெல்லாம் மறைக்காமல் வெளியே பரப்பிஅவர்கள் தீயவொழுக்கத்தை மட்டும் அங்ஙனம் வெளியே பரப்பாமற் காத்து; யார் யார்க்கும்தாழ்ச்சி சொலல்- எல்லாரிடத்திலும் வணக்கமான மொழிகளையே பேசுதலாம். (வி-ம்.) பிறராற் சுட்டப்படும் சுட்டென்று கொள்க. சுட்டு இங்கு ஒருவன் நலன்களைச் சுட்டிஎண்ணுதலாலான மதிப்புக்கு வந்தது. வேண்டுவான்-விரும்புவான். “வேண்டுவார்வேண்டுவதே ஈவான் கண்டாய்”* என்பதிற் காண்க. நோற்பது - நோன்புபோல எண்ணிச்செய்க என்பது. பிறரைப் பற்றிய நல்ல செய்திகளையெல்லாம் மறைக்காமல் வெளியேபரவச்செய்து கெட்ட செய்திகளை அங்ஙனம் பரப்பாமற் காத்துக்கொள்ளும் உயர்ந்த செயல்கடவுளுக்கு நோன்பெடுக்கும் வணக்கச்செயலோடு ஓராற்றால் ஒத்ததாம் என்பது அதன்குறிப்பு. பிறர் பிறர்: யார் யார் என்னும் அடுக்குகள் பன்மைப்பொருளன. தூற்றுதல் என்பது, பெரும்பாலும் கெட்ட செய்திகளை வெளியிற்பரப்புவதற்கே வருதல் வழக்கு: ஆனால் அச்சொல்லை இங்கு நல்லசெய்தியை வெளிப்படுத்துதற்குக்கூறினார், அக்கெட்ட செய்திகளைப் பரப்புவது போல் அவ்வளவு விரைவோடும் அவாவோடும்எங்கும் இந்நல்ல செய்திகளைப் பரப்புதல் வேண்டுமென்றற்கு, புறங்காத்து-புறத்தே போகவொட்டாத படி காத்து: தாழ்ச்சி - தாழ்மையான மொழியின்மேல் நின்றது.மேற்செய்யுளாலும் இச்செய்யுளாலும் பெறப்படுவது, தன்னைப் பிறர்மதிக்க வேண்டுமென்றுஎண்ணுபவன், தன்னைத்தான் புகழ்ந்து கொள்ளாமல் தன்னைத்தாழ்மையாகவே உரைத்துக்கொண்டு, பிறரை மட்டும் அவர்பாற் காணப்படும் உயர்ந்தசெயல்களால் உலகவர் புகழவைத்து, அவர் தாழ்ந்த செயல்களை வெளிப்படுத்தாமல் மறக்கக்கடவன் என்பது. (க-து.) பிறரைப்பற்றிக் கோளுரைக்காமல் அவர் செய்த நன்மையையே உரைத்தால்நன்மதிப்பு வரும். (20)____________________________________________ * தேவாரம், திருநாவுக்கரசு நாயனார், 6.237 - 1. |
|
|
|
|
|