21-30
|
|
கற்றுப் பிறர்க்குரைத்துத் தாம்நில்லார் வாய்ப்படூஉம் வெற்றுரைக் குண்டோர் வலியுடைமை - சொற்றநீர் நில்லாததென்னென்று நாணுறைப்ப நேர்ந்தொருவன் சொல்லாமே சூழ்ந்து சொலல் |
|
(பொ-ள்.) கற்றுப் பிறர்க்கு உரைத்துத் தாம் நில்லார் வாய்ப்படூஉம் வெற்று உரைக்கு ஓர் வலி உடைமைஉண்டு - நூல்களைப் படித்துப் படித்ததன்படி ஒழுகவேண்டுமென்று அக்கருத்துக்களைப் பிறர்க்குமட்டும்எடுத்துக் கூறிக் கூறியபடி தாங்கள் அவ்வொழுக்கத்தில் நில்லாமலிருக்கின்றவர்கள் வாயில் உண்டாகும்சொல்லுக்கு ஒரு வலியுடைமை இருப்பதுண்டு; (அது), சொற்ற நீர் நில்லாதது என் என்று நாண்உறைப்ப நேர்ந்து ஒருவன் சொல்லாமே சூழ்ந்து சொலல் - நாங்கள் கற்றதன்படி ஒழுகவேண்டுமென்றுசொல்லிய நீங்கள் அங்ஙனமே அவ்வொழுக்கத்தில் நில்லாதது ஏனோ என்று வெட்கம் உறைக்கும்படிஎதிர்த்தொருவன் இகழ்ந்து சொல்லாதபடி, அறிவுறுத்தும்போது பிறர்க்கு நினைத்துப் பார்த்துஅறிவுறுத்தலாம். (வி-ம்.) சூழ்ந்து சொல்லல்ஒரு வலியுடைமையென்க. சூழ்ந்து சொல்லலாவது நீங்கள் அவ்வாறு நடத்தல் வேண்டுமென்றுஎதிரிருப்பாரை மட்டுஞ் சுட்டிச்சொல்லாமல் தன்னையும் அவர்களோடு சேர்த்துக்கொண்டு நாமெல்லாம்அவ்வாறு நடத்தல் வேண்டுமென்று தன்மைப் பன்மையாற் கூறுதல் போல்வன. இங்ஙனம் கூறுதலுமுண்டென்று அப்படிற்றொழுக்கத்தை இழித்தபடியாம். உறைத்தல் என்பது வருந்தும்படி நன்றாகத்தாக்குதல், “உறைப் பின் வீழ் ஒதுங்கு இடம் இன்மையின்”* என்பது கந்தபுராணம். ‘நான்சொல்வது உன் உடம்பில் உறைக்கவில்லையா’ என்பது வழக்கு, (க-து.) ‘கற்றபின் நிற்கஅதற்குத் தக’ என்பது. (21) __________________________________ * கந்தபுராணம், நகரழி படலம், 60. |
|
|
|
|
|
பிறர்க்குப் பயன்படத் தாங்கற்ற விற்பார் தமக்குப் பயன்வே றுடையார் - திறப்படூஉந் தீவினை யஞ்சா விறல்கொண்டு தென்புலத்தார் கோவினை வேலை கொளல் |
|
(பொ-ள்.) பிறர்க்குப் பயன்படத் தாம்கற்ற விற்பார் - உரியரல்லாத பிறர்க்குப் பயனாகும்படி தாம் வருந்திக்கற்றகல்வியறிவுகளைப் பணத்துக்காகக் கொடுக்கும் புலவர்கள், தமக்குப் பயன் வேறு உடையார் -தங்களுக்கு வேறொரு பயனை உடையராவார்கள்; (அது), திறப்படூஉம் தீவினை அஞ்சா விறல் கொண்டுதென்புலத்தார் கோவினை - பலவகைப்பட்ட தீய செயல்களையும் செய்தற்கு அஞ்சாத ஆற்றல்படைத்த தென்புலத்தார்க்குத் தலைவனான கூற்றுவனை, வேலை கொளல் - தங்களை நரகத்திலிட்டுஒறுக்கும்படி வேலை வாங்குதலாம், (அஃதாவது, அப்புலவர் நரகத்துக்குச் சென்று வருந்துவர் என்பது.) (வி-ம்.) நல்லறிவு,நல்லொழுக்கம் முதலியவற்றிற்குப் புறம்பானவர்களைக் குறித்திடுவார் பிறர்க்கென்றார்.கற்ற: வினையாலணையும் பெயர். விற்பார் என்றார். அங்ஙனம் செய்தவன் இழிவு நோக்கி, இதுநல்ல தன்மையில் இல்லாத செல்வர்களை அவர்களிடம் பொருள் பெறுவதற்காகப் பாட்டுப்பாடும்புலவர்கள் போன்றோரைக் குறித்தது. தம்மைப் படைத்துப் புலவராக்கி எப்போதும்புறம்புறந்திரிந்து பாதுகாக்கும் எல்லாம் வல்ல கடவுளைத் தாம் வருந்திக் கற்றதன் பயனாகவாயாரப் பாடாமல். அருகே அணுகுதற்குந் தகுதியற்ற பொல்லாச் செல்வந்தரைப் பரிந்து பாடுதல்ஒரு தீவினை; அதுவுமன்றி. அவரை அளவுக்கு மேற் புகழ்ந்து பாடுதலோடு ஒப்பும் உயர்வும் அற்றஇறைவனோடு அவ்வொப்பும் உயர்வும் பொருந்த உரைத்துப் பணம் பறித்தல் மற்றுமொரு தீவினை.ஆதலின் நமனால் ஒறுக்கப்படுவாரென்க. *”கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன், நற்றாள்தொழாஅ ரெனின்” என்பர் திருவள்ளுவர். அல்லது இதனைத் தகுதியில்லாத மாணாக்கர்க்கு அவர்கொடுக்கும் பணமொன்றே கருதித் தாங் கற்ற அறிவு நூல்களை அறிவுறுத்துவார்க்குங்கொள்வதுண்டு.கொண்ட என்பதுகொண்டு எனத் திரிந்தது. தென்புலத்தார்-இறந்த உயிர்கள். இவைதெற்கிடத்தில் இருக்கின்றன என்னும் வழக்குப் பற்றித் ‘தென்புலத்தா’ ரென்றார். இதனைநாயனாரும் கூறுவார்,+ (க-து.) பொருட்பற்றில்லாதுதகுதியுள்ளாரை நாடிக் கல்வியைப் பரவச்செய்தல் வேண்டும்.(22) ______________________________ * திருக்குறள், கடவுள் வாழ்த்து, 2. + திருக்குறள், இல்வாழ்க்கை, 3 |
|
|
|
|
|
23. கல்லாதார் அவையடங்காமை |
கற்பன ஊழற்றார் கல்விக் கழகத்தாங் கொற்கமின் றூத்தைவாய் அங்காத்தல் - மற்றுத்தம் வல்லுரு அஞ்சன்மின் என்பவே மாபறவை புல்லுரு அஞ்சுவ போல் |
|
(பொ-ள்.) கற்பன ஊழ் அற்றார் - கற்கப்படுவனவற்றிற்கான நல்வினை இல்லாதவர்கள், கல்விக் கழகத்து -கல்வி பயிலும் இடத்தில் (அஃதாவது புலவர்களின் அவையில்): ஒற்கம் இன்று - அடக்கம்இல்லாமல், ஊத்தை வாய் அங்காத்தல் - அழுக்குப்பிடித்த தம் வாயைத் திறந்து பேசுதல் முதலியன,மா பறவை புல் உரு அஞ்சுவபோல் - விலங்குகளும் பறவைகளும் புல்லினாற் செய்யப்பட்ட பொய்உருவத்துக்கு அஞ்சுவதுபோல, தம் வல் உரு அஞ்சன்மின் - தம்முடைய வலிமையான உருவத்துக்குஅஞ்சாதிருங்கள், என்பவே - என்று சொல்வனவேயாம்.
(வி-ம்.) கற்பன - கற்கப்படுவன. அவை, நூற்கருத்துக்கள். இந்நூலாசிரியர் குமரகுருபர அடிகள் இந் நூன்முழுதும் கல்வியைப் பன்மையாகவே கூறுகின்றார். ‘தாங் கற்ற விற்பார்’ ‘கற்றதெல்லாம்’‘எனைத்துணைய வேனும் இலம்பாட்டார் கல்வி’ ‘வருந்தித் தாங் கற்றன’ ‘நெடும்பகற் கற்றஅவையத்து உதவாதுடைந்து’ ‘எத்துணையவாயினுங் கல்வி’ என்று இச்செய்யுட்கு முன்னும்;‘கல்வி...சேரா’ ‘கற்றன கல்லார் செவிமாட்டி’ என்று பின்னும் வருதல் காண்க. கற்பன ஊழ்:நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை. ஒற்கம்- அடக்கம், ஊத்தை வாய்அங்காத்தல், வல் உரு என்றார், கல்லாதார் பேசுதலின் இழிவு தோற்றுதற்கு. அங்காத்தல்என்பதன் குறிப்புக் கண்டு அதற்குக் கற்றாரொருவர் பேசும் பொழுது அவைக்கண் இடைஇடையே வாய்திறந்து பேசுதல் என்றும் பொருள்கூறுப. மாவும்பறவையும்என்று உம்மைத்தொகை விரிக்க. புல்லுருஎன்பது, கம்பு தினை முதலியன விளைந்து கதிர் முற்றிய கொல்லைகளில் விலங்குகளும் பறவைகளும்‘யாரோ ஒரு காவற்காரன் கையிற் கொம்பு வைத்திருக்கின்றான்’ என்று நினைத்து அஞ்சும்படியாக,அக்கொல்லைக்காரர்கள் புல்லினாற் செய்துவைக்கும் உருவம். விலங்குகளும் பறவைகளும்அவ்வுருவத்தின் உண்மையை அறிந்துகொண்டால், எப்படி அவை அஞ்சாது செல்லுமோ அதுபோலக்கல்லாதவர்கள் தங்கள் வாய் திறந்து பேசுவதனால் தங்கள் பாற் கல்வி நலமில்லை யென்பவைக்காட்டிக் கொள்ளுகின்றார்களாதலின், மற்றவர்களும் இவர்களுக்கு அஞ்சாமல் நடப்பார்கள்என்க. ஆகவே, கல்லாதவர்கள் பேசுவது, தம்மிடத்திற் கல்வியில்லை என்பதைக் காட்டிஎதிரிலிருப்பவர்களை அச்சப்படாதிருங்கள் என்று கூறுவதுபோலிருக்கின்றது என்றார். என்ப என்றுபன்மையாற் கூறின்மையின், அங்காத்தல் முதலியன என்று பல வினைமுதல்கள் வருவிக்கப்பட்டன.முதலியன எனப்பட்டவை, கற்றது போற் காட்டிக் கொள்ளும் உடற்புனைவு முதலியவற்றை. அஞ்சுவ:கடைக்குறை. இது தொழிற்பெயர். (க-து.) தெரிந்தவர்கள் முன்பு, தாமும் தெரிந்தவர்கள் போலப் பேசலாகாது. (23) |
|
|
|
|
|
போக்கறு கல்வி புலமிக்கார் பாலன்றி மீக்கொள் நகையினார் வாய்ச்சேரா - தாக்கணங்கும் ஆணவாம் பெண்மை யுடத்தெனினும் பெண்ணலம் பேடு கொளப்படுவ தில் |
|
(பொ-ள்.) தாக்கு அணங்கும்- தாக்கிவருத்துகின்ற, ஆணவாம் பெண்மை -ஆண்மக்கள் அவாவக்கூடிய பெண்மைத்தன்மை, உடைத்து எனினும் - உடையது என்றாலும், பெண் நலம் - அப் பெண்ணின் இன்பம், பேடுகொளப்படுவது இல்-பேடுகளாற் கொள்ளப்படுவதில்லை. (அதுபோல), போக்குஅறு கல்வி- குற்றமற்றகல்வி, புலம் மிக்கவர்பால் அன்றி-அறிவு மிக்கவரிடத்தில் அல்லாமல, மீக்கொள்நகையினார்வாய் - விளையாட்டுத் தன்மையே மிகுதியும் மேற்கொண்டிருப்பவர்களிடத்தில், சேரா- சேர மாட்டாவாம்.
(வி-ம்.) போக்கு- ஒழியத்தக்கது. அது குற்றம். புலம்- அறிவு . ஆராய்ந்து குற்றத்தை நீக்குவார் புலமிக்காராதலினால்மிக்கார்க்குப் போக்கறு கல்வி கூறினார். நகையினார் என்றனர் விளையாட்டுத்தன்மையுடையவரை. ஆன்றஅறிவும் அருளும் உடைய பெரியோரெல்லாரும் மிக ஆழ்ந்து ஆராய்ந்து காட்டியகல்விப்பொருளை அவரைப்போலவே மிக அமைந்த நோக்கமும் ஆழ்ந்த கருத்தும்உடையராய் யாண்டும்நெஞ்சம் செல்லுதலின்றிப் பெருந்தன்மை பொருந்திக் கற்பாராதலினால் அப்பெருந்தன்மை வாயாதுவிளையாட்டிற் பொழுதுகழிக்கும் வீணர்களிடம் அக்கல்விப் பொருள்கள் சேரா என்றார்.தாக்கும் அணங்கும் பெண்மை என்று சேர்த்து வினைத்தொகையாகக்கொண்டு தாக்கி வருத்துகின்றபெண்மைத்தன்மை என்று உரை கூறுக. ஆண் அவாம் என்பதை அப்பெண்மைக்குக் கூட்டிவினைத்தொகையாக்குக. பெண்ணலம் ஆணவாம் தாக்கணங்கும் பெண்மையுடைத்தெனிலும், அது -பேடுகொளப்படுவ தில் என்று வினை முடிவு செய்க. பேடு- இங்கு ஆண் தன்மை இழந்தது. ஆண் தன்மையையிழந்த ஆண்பால் பெண்பாலாகக் கொள்ளப்படும். ‘ஆண்மைவிட்டல்ல தவாவுவ பெண்பால்’* என்பதுநன்னூல். ஆதலால், பெண்பாலெனக் கொள்ளப்படுவது பெண்ணின்பத்தை நுகர ஏலாதது காண்க.“பெண்மக்களின் இயற்கையழகு ஆண்மக்களின் அறிவு ஆற்றல் முதலியவைகளைத் தாக்கி அவர்நெஞ்சத்தைத் தன் கீழ்ப்படுத்தி வருத்தலால் வருத்துவதோ ரணங்கு”* என்று பொருளுரைப்பர்ஆசிரியர் பரிமேலழகர். அணங்குதல்- வருத்துதல் இஃதிப்பொருட்டாதல் “பெண் அணங்குபூந்தார்”+என்ற விடத்துங் காண்க. (க-து.) விளையாட்டுத்தன்மையுடையவர்க்குப்படிப்பு வாராது. (24) ___________________________________ * பெயரியல், 7. + திருக்குறள், தகையணங்குறுத்தல், 2 உரை. + சிந்தாமணி, முத்தி, 17 நீ.வி.-3 |
|
|
|
|
|
25. கற்றவர் கல்லாதவர் இயல்பறிதல் |
கற்றன கல்லார் செவிமாட்டிக் கையுறூஉங் குற்றந் தமதே பிறிதன்று - முற்றுணர்ந்தும் தாமவர் தன்மை யுணராதார் தம்முணரா ஏதிலரை நோவ தெவன் |
|
(பொ-ள்.) தாம் கற்றன (படித்தவர்கள்) தாம் படித்த நூற் பொருள்களை, கல்லார் செவிமாட்டி - படிக்காதமூடர்களுடைய காதில் நுழைப்பதனால், கையுறூஉம் - தமக்குப் பொருந்தும், குற்றம் - அவமானக்குற்றம், தமதே - தம்முடையதே, பிறிது அன்று - வேறொருவருடையது அன்று; முற்றும்உணர்ந்தும்-எல்லாந் தெரிந்திருந்தும், அவர் தன்மை உணராதார் அம் மூடர்களுடைய மூடத்தன்மையைஉணராதவர்கள், தம் உணரா ஏதிலரை - தம்மைக் கற்றவர்களென்று உணர்ந்து கொள்ளாத அம்மூடர்களை, நோவது எவன்-நொந்து கொள்வது ஏன்? (வி-ம்.) ‘தாம் அவர்’என்பதில் உள்ள தாம் என்பதை எடுத்துத் ‘தாம் கற்றன’ என்று இணைத்துக் கொள்க. செவிமாட்டி-செவிமாட்டுதலால்; மாட்டி என்பதன் சொல்லாற்றல் தம்முடைய அறிவு நூற்பொருளை அம்மூடர்கள்விரும்பாராகவும் அவர்கள் விரும்பவில்லை என்பதைத் தாமுந் தெரிந்திருந்தும்வேண்டுமென்றேவலிந்து அறிவுறுத்தலை விளக்கிற்று. அங்ஙனம் அறிவுறுத்தலினால் அவமானமே அகப்படும் என்பார்.‘கையுறூஉங் குற்றம்’ என்றார். கையுறல்-அகப்படல்; ‘காணிற் குடிப்பழியாங் கையுறிற்கால்குறையும்” என்பது நாலடியார். அளபெடை இன்னிசை நிறைக்க வந்தது. தமது: குறிப்புமுற்று.ஏகாரம்: தேற்றம். பிறிதன்று - வேறன்று; அக்குற்றம் அம்மூடர்களுடையது அன்று என்னும்பொருளில் வந்தது. நன்றாய்ப் படித்து எல்லாம் தெரிந்திருந்துங் கூடத், ‘தம் அறிவுரைகளைஅம்மூடர்கள் ஏற்றுக் கொள்வார்கள் அல்லது ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்’ என்று அறிந்துகொள்ளாமற் போனால், அம்மூடர்கள் எவ்வாறு, ‘இவர்கள் படித்தவர்கள்: ஆதலால் இவர்களுக்குமதிப்புக் கொடுத்து இவர்கள் கூறும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிந்துகொள்வார்கள் என்பது இதன் உட்கோள். ஏதிலர் - தம்மோடு தொடர்புறுதற்கு ஏதோர் ஏதுவும்இல்லாதவர். அவர் பிறர், `நொ’ நீண்டு நோவதென்றாயிற்று. (க-து.) ஏற்றுக்கொள்ளுந்தகுதியுடையவர்களுக்கே தாம் அறிந்த அறிவுநூற் பொருள்களைக் கூறுதல் வேண்டும். (25) |
|
|
|
|
|
வேத்தவை காவார் மிகன்மக்கள் வேறுசிலர் காத்தது கொண்டாங் குவப்பெய்தார் - மாத்தகைய அந்தப் புரத்ததுபூஞை புறங்கடைய கந்துகொல் பூட்கைக் களிறு |
|
(பொ-ள்.) மாத்தகைய அந்தப் புரத்தது பூஞை-பெருமையையுடைய வீட்டினுள் இருப்பது பூனை, புறங்கடையதுகந்து கொல் பூட்கைக் களிறு - அப்பெருமையில்லாத தலைவாயிலில் இருப்பது கட்டுத் தறியைமுறித்து விடக்கூடிய வலிமையுடைய யானை; (என்றாலும் வீட்டினுள் இருப்பதனால் பூனைக்கும்,வெளியில் இருப்பதனால் யானைக்கும் யாதொரு பெருமை சிறுமையும் இல்லை): ஆகவே, மிகல் மக்கள்வேத்து அவை காவார்-மேன்மக்கள், அரசனுடைய அவையில் இருந்தாற்றான் பெருமை வருமென்றுநினைத்து, அந்த அரசவையைக் காத்துக்கொண்டிருக்கமாட்டார்: (அதனால் அவர்க்குவருத்தமென்பதும் ஒன்றில்லை: வேறு சிலர் காத்தது கொண்டு ஆங்கு உவப்பு எய்தார்-அம்மேன்மக்களுக்கு வேறான வேறு சிலர், அஃதாவது கீழ்மக்கள், அவ்வரசவையைக்காத்துக்கொண்டிருந்ததனால் ஏதும் மகிழ்ந்து விடவுமாட்டார். (வி-ம்.) வேந்து அவை எனப்படுவது எதுகைநோக்கி வலித்து வேத்தவை எனப்பட்டது.காவார், காத்தது என்பன அரசனிடத்தில் அலுவல்பெறாதிருத்தலையும் பெற்றிருத்தலையும் குறித்தன. அலுவலைக் காவார் காத்து என்னுஞ்சொற்களாற் கூறினார்; அவ்வலுவல் அரசனிடத்ததேயானாலும் காத்துக் கிடப்பதாகியஇழிவையுடைத்தேயாம் என்றற்கு, மாத்தகைய அந்தப்புரம் என்றார். பிறரெல்லாம்கிட்டுதற்கு அரிதான பெருந்தன்மையுடைய வீட்டின்உள் அறை என்க. அஃது எல்லாரும் கிட்டுதற்கு அருமையான அரசவைக்கு உவமையாக வந்தது.பூட்கை-வலிமை. இஃது இப்பொருட்டாதல் ”ஓடாப்பூட்கை” என்றவிடத்துக் காண்க. (க-து.) அறிஞர்கள் எங்கிருந்தாலும்அவர்கட்கு மதிப்புண்டு. (26) ________________________________ * நாலடி, பிறர்மனை நயவாமை, 4 |
|
|
|
|
|
குலமகட்குத் தெய்வம் கொழுநனே மன்ற புதல்வர்க்குத் தந்தையுந் தாயும் - அறவோர்க் கடிகளே தெய்வம் அனைவோர்க்குந் தெய்வம் இலைமுகப் பைம்பூண் இறை |
|
(பொ-ள்.) குலமகட்குக் கொழுநனே தெய்வம் - நல்லொழுக்கமுடைய பெண்ணுக்கு அவள் கணவனே தெய்வமாவான்,புதல்வர்க்குத் தந்தையும் தாயும்- புதல்வர்களுக்கு அவர்கள் தாய் தந்தையர்களே தெய்வமாவார்கள். அறவோர்க்கு அடிகளேதெய்வம் - நல்லொழுக்கமுடைய மாணவர்களுக்கு அவர்கள் ஆசிரியன்மாரே தெய்வமாவார்,அனைவோர்க்கும் இலை முகப்பைம்பூண் இறை தெய்வம் - இவரொழிய மற்றெல்லோருக்கும் இலை நுனிபோன்ற பசும்பொன் நகைகளணிந்த அரசனே தெய்வமாவான். (வி-ம்.) கற்புடைய மனைவி இங்குக் குலமகளெனப் பட்டாள். தெய்வம் என்றது, தெய்வம் போலப்பார்க்கத்தக்கவர்கள் என்பதற்கு, தெய்வம் என்பதை இரண்டாம் அடியினுங் கொள்க, கொழுநனேஎன்பதில் உள்ள பிரிநிலை ஏகாரத்தை மற்றவற்றிற்குங் கூட்டுக. அறவோர் என்றார், மாணவர்கள் மற்றவற்றிற் பற்று வையாதுகல்வியிலே கருத்தூன்றித் துறவிகள் போல் நிற்றலின். அடிகள் ஆசிரியர்க்கு வருதலை “அன்னைதன்னைத் தாதையை அடிகள் தன்னை” * என்னுங் கந்தபுராணத் திருமொழியிற் காண்க. குலமகள்,புதல்வர், அறவோர் என்பவர்கட்குஇன்னின்னார் தெய்வமென்று கூறிவிட்டமையின், அவரொழித்து மற்றையோரையே அனைவோர்க்கும்என்றார். அவ்வனைவோரென்பார் இல்வாழ்வாரென்க. இலைமுகப் பைம்பூண் என்பதை வெற்றிலை மூக்குப்போலச் செய்யப்பட்ட நகை என்றுகூறுப. பைம்பொற்பூண் என்று வரற்பாலது பைம்பூண்என்று வந்தது. இஃது ஒரு மரபு வழுவமைதி யென்பர். கணவன், தாய், தந்தையர், ஆசிரியர், அரசன் என்பார், இறைவன் உயிர்கட்குஎவ்வகையான உதவி செய்கின்றானோ அது போன்ற உதவியையே உடனிருந்து அன்போடு அவ்வப்போதும்தன் மனைவி மாணவர் குடிமக்கள் என்பார்க்குச் செய்தலின், அவரெல்லாம் அவர்கட்குத் தெய்மாவா ரெனப்பட்டார். மன்ற -உறுதியாக எனப் பொருளுரைத்து எல்லாவற்றோடுங் கூட்டிக்கொள்க, (க-து.) மனைவி கணவனையும், மக்கள் பெற்றோரையும், மாணவர் ஆசிரியரையும், குடிமக்கள் அரசனையும் தெய்வமெனப் போற்றக் கடவர். (27) __________________________________ * கந்த, வீர.60:21 |
|
|
|
|
|
கண்ணிற் சொலிச்செவியின் நோக்கும் இறைமாட்சி புண்ணியத்தின் பாலதே யாயினுந் - தண்ணளியான் மன்பதை ஓம்பாதார்க் கென்னாம் வயப்படைமற் றென்பயக்கும் ஆணல் லவர்க்கு |
|
(பொ-ள்.) கண்ணின் சொலிச் செவியின் நோக்கும் இறைமாட்சி - கட்பார்வையால் கருத்து அறிவித்துநேரிற் பார்ப்பது போலக் காதினால் செய்திகளை அறியும் அரசனுடைய பெருமையான செய்கை,புண்ணியத்தின் பாலதே ஆயினும் - நல்வினையோடு சேர்ந்ததே ஆனாலும், தண் அளியால் மன்பதை ஓம்பாதார்க்கு - குளிர்ந்த அருள்நெஞ்சத்தாற் குடிமக்களை ஆளாத அரசர்க்கு, என்னாகும் - கண்ணிற் சொல்லிச் செவியில்நோக்கும் அரசாட்சி முறை என்ன பயனாம்?, ஆணல்லவர்க்கு வயப்படை என் பயக்கும்- பேடிகளுக்கு வெற்றி தரத்தக்க வில்,வாள், வேல் முதலிய போர்க் கருவிகள் என்ன பயனைத் தரும்? (வி-ம்.) தன்கீழ் வேலை செய்வோர்க்கும் குடி மக்களுக்கும் ஏனையோர்க்கும் காரியங்களை வாயாற்சொல்லாமல் அக்கருத்தை அவர்கள் தம் பார்வையினாலேயே அறிந்துகொண்டு செயற்படுமாறுபார்த்தலைக் ‘கண்ணிற் சொலி’ என்றார்: வாயின் வேலையைக் கண் செய்தலால், கண்ணுக்குச்சொல்லுந் தொழிலை ஏற்றினார். நேரிற்போய் ஒரு செய்தியை அறிந்தது போலவே தக்கஒற்றர்கள் வாயிலாக அதைக் கேட்டு அறிந்து கொள்ளுதலால், `செவியின் நோக்கி’ என்றார்.இவ்வகையான திறமை எல்லாராலும் இயல்வதன்றாதலால் அதனை `மாட்சி’ என்று கூறினார். அரசாட்சிசெய்ய வேண்டுவோர் இவ்வாறு செய்ய வேண்டுமாதலால், இங்ஙனம் செய்யும் ஆட்சித்திறமையில்லாதவர்கள் அரசராய்ப் பிறந்து விடுவதனால் மட்டும் ஏதும் பயனில்லை யென்பதாம்.அது போர் செய்யும் ஆற்றலில்லாதவன் கையில் வாளிருந்தும் பயனில்லையாதல்போல என்றார்.“பேடிகை ஒள்வாள்” என்று நாயனார் இவ்வுவமையைக் கொண்டிருத்தல் காண்க, ஆணல்லவர்க்கு: ஒருசொன்னீர்மைத்தாய் ஆண்மைத் தன்மையில்லாத பேடிகளை உணர்த்திற்று. (க-து.) ஆளுந்திறனும் அன்பும் இல்லாத அரசாட்சி பயனின்று. (28) |
|
|
|
|
|
குடிகொன் றிறைகொள்ளுங் கோமகற்குக் கற்றா மடிகொன்று பால்கொளலும் மாண்பே - குடியோம்பிக் கொள்ளுமா கொள்வோர்க்குக் காண்டுமே மாநிதியம் வெள்ளத்தின் மேலும் பல |
|
(பொ-ள்.) குடிகொன்று இறைகொள்ளும் கோமகற்கு-குடிமக்களை வருத்திவருத்தி வாங்கும் அரசனுக்கு. கன்றுஆமடிகொன்று பால் கொளலும் மாண்பே - கன்றையுடைய ஆவின் மடியினை வருத்திப்பால் கறப்பதும் நல்ல செயலாகும்; (இவ்வாறு வருத்தி வரி வாங்கும் அரசனிடத்தில்செல்வம் சேர்ந்திருக்கிறதோ வெனில் அதுவுமில்லை.ஆனால்.) குடி ஓம்பிக் கொள்ளுமாகொள்வோர்க்கு-குடிமக்களை அவர்கள் நலத்தில் கருத்து வைத்துப் பாதுகாத்து நல்ல முறையில்வாங்கும் (வகையாக வரியினை வாங்கும்) அரசர்க்கு, மா நிதியம் வெள்ளத்தின் மேலும் பலகாண்டும் - பெருமையுடைய பணம் வெள்ளத்தினும் மேலும் பலவாகக்காண்கின்றோம். (வி-ம்.) கொன்று என்றது, இங்குவருத்ததுலுக்கு வந்தது. அது கொலை செய்தது போன்ற அத்துணை மிகுதியான வருத்தத்தைச் செய்தலாம்.மடி கொன்று என்றதற்கும் அதுவே கருத்து. மடியைக் கொல்லுதலாவது அதனைக் கசக்கி உயிரோடுதோலுரிப்பதே போல அதன் முலைக்காம்புகளை நோவ நோவ மிக அழுத்தி நீட்டி இழுத்தல். ‘பால்கொளல்’என்னுங் குறிப்பினாலேயே அவ்வானுக்குக் கன்றிருப்பது பெறப்படுமாயினும் பாலருந்தக்கன்றொன்றிருக்கின்றதே என்பதையும் நோக்காமல் அது செய்வன் என்பதைக் குறிக்கக் ‘கற்றா’என்றார். கன்று ஆ என்பது வலித்துக் கற்றாவாயிற்று. “கற்றாவின் மனம்போல்” என்பதுதிருவாசகம். வருத்தி வரி வாங்கும் அரசனுக்கு வருத்திப் பால் கறக்கும் செயற்கையும் நல்லதாய்தோன்றும் என்று கூறினார். எத்துணைத் தீய செய்கையைச் செய்தற்கும் அவன் நெஞ்சம்ஒருப்படுமென்று அவன் கொடுமையை உணர்த்துதற்கும், பால்கொளல் இறை கொள்ளுதற்கு உவமையாதற்குமென்க. இறை-வரி; இதனை “அரசனுக்கு இறைப்பொருள் ஆறிலொன்றாயிற்று”* என்னும் பரிமேலழகருரையிற் காண்க. கொள்ளுமாரு கடைக்குறை. “குடியோம்பிக் கொள்ளுமா கொள்வோர்க்கு மாநிதியங் காண்டும்” என்பதனால் குடிகொன்றிறை கொள்ளுங் கோமகற்கு அச்செல்வம் இல்லை என்பது குறிப்பெச்சமாகப் பெறுதும்; மாநிதியம், பெரும் பணமன்று; பெருமையுடையபணம். என்னை? மிகுதியைக் குறித்தற்கு ‘வெள்ளத்தின் மேலும் பல’ வென்று பின் வருதலாலும்வருத்தாது வாங்குவான் பணம் மிகுதியாதலோடு பெருமையுமுடைய தென்பதை இங்குக் குறித்திடல்இன்றியமையாத தாதலாலும் என்க. கொள்ளுமா கொள்வார் பணம் பெருமையுடையதாம். எனவே, அங்ஙனங்கொள்ளாதார் பணம் குறைந்து போனதோடு பெருமையும் இலதாம் என்று கொள்க. வெள்ளம் ஓர்எண்ணென்றுங் கூறுப. வெள்ளத்தின் மேலும் பல என்னும் மூன்று சொற்களையும் மேலும்மேலும் மிகும்என்பதற்குக் கொள்க. ஏகாரம் இரண்டனுள் முன்னது தேற்றம்; பின்னது அசை. (க-து.) குடிகளை வருத்தாது வரி வாங்குதல் அரசன் கடன்.(29) ________________________________ * திருக்குறள், இல்வாழ்கை. 3-உரை. |
|
|
|
|
|
இன்று கொளற்பால நாளைக் கொளப்பொறான் நின்று குறையிரப்ப நேர்படான் - சென்றொருவன் ஆவன கூறின் எயிறலைப்பான் ஆறலைக்கும் வேடலன் வேந்தும் அலன் |
|
(பொ-ள்.) இன்று கொளற்பால நாளைகொளப்பொறான் - இன்று கொள்ளத்தக்க பொருள்களை நாளைக்கு வாங்கிக்கொள்ள ஒருநாள்பொறுக்கமாட்டான்; நின்று குறை இரப்ப நேர் படான்-சற்று நேரம் எதிரே நின்று குடிகள் தங்கள் குறைகளைச் சொல்லி வேண்டிக்கொள்ளஅகப்படமாட்டான்; ஒருவன் சென்று ஆவன கூறின் எயிறு அலைப்பான்-ஒருவன் எதிரே போய்த் தனக்கு வேண்டியவற்றைக் கூறினால் பல்லைக் கடித்துஅச்சுறுத்துவான்; ஆறு அலைக்கும் வேடு அலன் வேந்தும் அலன் - இப்படிப்பட்டவன் வேடனும் அல்லன் அரசனும் அல்லன். (வி-ம்.) இன்று கொளற்பால - இன்றுகொள்ளும் பான்மையை யுடையவை. நின்று குறையிரப்ப - பொறுமையாய்க் குறையிரத்தல் என்றுமாம்.நாளைக் கொளப் பொறானாயினும் அங்ஙனம் ஒருநாள் பொறுக்குமாறு குடிமக்கள் தமக்குள்ள குறைகளைச்சொல்லிக் கொள்ளலாமென்றாலும் அதற்கும் நேர்படான். ஏதோ நல்ல காலமாக நேர்பட்டானாயினும் அவர்கள் தமக்கு ஆவன கூறும்பொழுது அதனை ஏற்றுக்கொள்ளாமல் எயிறலைப்பான்; இவன்எதற்கும் பயனில்லை என்றிவ்வாறு பொருட்டொடர்பு செய்க. குறையிரப்ப: ஒரு சொன்னீரது, இரைப்பாரைப்போல நின்றுதங்குறை கூறதலுணர்த்திற்று. இதனை இரண்டாகப் பிரித்து இடர்ப்படுவாருமுளர் இங்ஙனமேஎயிறலைத்தல் ஆறலைத்தல் என்பன பண்டுதொட்டே பற்கடித்தல் வழிப்பறித்தல் என்னும் பொருள்மேலாகவே வருதலின், ஒரு சொன்னீர்மைய வென்று கொள்க. நேர்படல் - ஒத்து நிற்றல், இங்குக்குறையிரத்தல் வேண்டுமென்று ஒத்து நிற்றலை உணர்த்திற்று. அரசு அமைச்சுப்போல வேடு வேந்துபண்பாகு பெயர்கள். காட்டில் நின்று பறியாமையாலும் வேடனல்லன் என்றும், குடிகளிடத்தில்தண்ணளியில்லாமையாலும் முறையாகப் பாதுகாவாமையாலும் வேந்தனல்லன் என்றுங் கூறினார். (க-து.) அரசன் குடிகளின் நலத்திற்கருத்துடையனாதல் வேண்டும். (30) |
|
|
|
|
|