31-40
|
|
முடிப்ப முடித்துப்பின் பூசுவபூசி உடுப்ப உடுத்துண்ப உண்ணா - இடித்திடித்துக் கட்டுரை கூறின் செவிக்கொளா கண்விழியா நெட்டுயிர்ப்போ டுற்ற பிணம் |
|
(பொ-ள்.) முடிப்ப முடித்து - முடிக்கத்தக்க மலர் முதலியவற்றை முடித்துக்கொண்டு, பின் பூசுவ பூசி-அதன்பின்பு பூசத்தக்க கலவை முதலியவைகளைப் பூசிக்கொண்டு, உடுப்ப உடுத்து - உடுக்கத்தக்க பட்டாடைமுதலியவற்றை உடுத்துக்கொண்டு, உண்பஉண்ணா-உண்ணத்தக்க நறுநெய்யுணாக்களை உண்டு (உயிர்த்தன்மை காட்டி). இடித்து இடித்துக்கட்டுரை கூறின் - பலமுறை நெருக்கி நெருக்கி அறிவுரை கூறினாலும், செவிகொள்ளா கண்விழியா-காது கொள்ளாதனவாய்க் கண் திறந்துபாராதனவாய்ப் பிணத்தன்மை காட்டி நிற்கும்அரசர்கள், நெட்டுயிர்ப்போடு உற்றபிணம் - பெருமூச்சோடு கூடிய பிணங்களேயாவார்கள். (வி-ம்.) முடிப்பதும் பூசுவதும் உடுப்பதும் உண்பதுமான செயல்களெல்லாம் உயிரிருப்பதுபோற் காட்டுகின்றன.ஆனால் கேளாமையும் பாராமையும் உயிரில்லாததுபோற் காட்டுகின்றன. உயிருக்கு முதன்மையானதன்மைஅறிவே ஆதலின், அதன் செய்கைகளான கேட்பதும் பார்ப்பதும் இல்லாத அரசர்களைப் `பிணம்’ என்றே கூறல் வேண்டினார்.ஆனால் அவ்விறந்த பிணத்தினின்றுஞ் சிறிது வேற்றுமை காட்டுதற் பொருட்டு நெட்டுயிர்ப்போடுற்ற பிணமென்றாரென்க. முடிப்ப, பூசுவ, உடுப்ப, உண்ப, செவிகொளா, கண்விழியா:வினையாலணையும் பெயர்கள். கடைசி இரண்டினை முற்றாகக் கொள்ளலுமாம். உண்ணா நின்று என்பதுகடை குறைந்து உண்ணா என்று நின்றது. இடித்திடித்துக் கூறல் - வெட்கம் வருமாறு நெருக்கிக்கூறல்,*”மிகுதிக்கண் மேற்சென்றிடித்தல்” என்பது திருக்குறள். கட்டுரை - பொருள் பொதிந்தசொல்; உறுதியுடைய சொல்லுமாம் என்பது அடியார்க்குநல்லாருரை. கூறின் என்றவிடத்து இழிவுசிறப்பும்மை தொக்கு நின்றது. (க-து.) அறிவும்இரக்கமும் இல்லாதவர்கள் பிணங்களுக்கு ஒப்பாவார்கள். (31) _______________________________ * குறள், நட்பு, 4.சிலப். பதிகம், 54 இன் உரை. |
|
|
|
|
|
ஒற்றின் தெரியா சிறைப்புறத் தோர்துமெனப் பொற்றோள் துணையாத் தெரிதந்தும் - குற்றம் அறிவரிதென் றஞ்சுவதே செங்கோன்மை சென்று முறையிடினுங் கேளாமை யன்று |
|
(பொ-ள்.) ஒன்றின் தெரியா -வேவுகாரரால் தெரியப்படாத உண்மைகளை, சிறைப்புறத்து ஒர்தும்என - ஒதுக்கிடங்களிலிருந்துதெரிந்து கொள்வோம் என்று, பொன் தோள் துணையா தெரிதந்தும் - பொன்னாலான வீரவளைஅணிந்த தனது தோளே தனக்குத் துணையாக நினைத்துக்கொண்டு போய் அங்கிருந்து அவற்றைத்தெரிந்து கொண்டும், குற்றம் அறிவரிது என்று அஞ்சுவதே செங்கோன்மை - குடிமக்களின்செய்கைகளில் குற்றமாவன இவைதாம் என்று துணிதல் அருமையானதென்று நினைத்து அக்குற்றங்காண்டலுக்கு அஞ்சுவதே நல்ல அரசாட்சி முறையாகும். (அதுவே முறையாமன்றிச்) சென்று முறையிடினுங்கேளாமையன்று - குடிமக்களே போய்த்தங் குறைகளைச் சொல்லிக்கொண்டாலும் அதனைக்கேளாமலிருப்பது முறைமையன்று. (வி-ம்.) இச்செய்யுள் அரசனாவான்குடிமக்களின் நலங்களை அவர்களிருக்குமிடத்தில் வேவுகாரர்களை அனுப்பிவரச்செய்து, அவர்கள் வாயிலாகத் தெரிந்து கொள்வதுமன்றி,அவர்களாலும் தெரிந்து கொள்ளப்படாத உண்மைகளைத் தன் தோளே துணையாகத் தானே நேரிற்சென்றுஅறிவதும், அங்ஙனம் அறிந்த விடத்தும் அவர்பாலுள்ள குற்றங்களை அறியாதொழிவதுமே நல்லஅரசாட்சி முறையாமன்றி, அவ்வாறு தன் ஒற்றர்களாதல் அல்லது தானாதல் போய் அவர்நலங்களை அறியாதொழிதலும், குடிமக்கள் தாமாகவாவது தன்னிடம் வந்து முறையிட்டுக்குறையிரக்கும்போதுகூட அதனைக் கேளாமலிருப்பதும் முறையன்றாம் என்பதுணர்த்திற்று, ஒற்று என்பதுஇங்கு நட்பினர் பகைவர் அயலவர் ஆகிய மூவகையாரிடத்தும் வேற்றுமையின்றி அவர்க்கு அவர்போலஅவரோடு கலந்து அவ்வவரின் உண்மைச் செய்தியே அறிபவரை உணர்த்தும். தெரியா: வினையாலணையும்பெயர். போமிடத்துத் தனக்கு ஏதேனுந் தீங்குவரினும் போரிட்டுக் கண்டு வருவன் என்பதற்குப் ‘பொற்றோள் துணையா’ என்றார்.தெரிதருதலென்பது இங்கு இறந்த காலத்தின் கண், தெரிதந்து என்று வந்தது; தெரிந்து என்பதுபொருள். (க-து.) அரசனுக்குக்குடிமக்களிடத்தில் நன்மை காண்டலிலேயே கருத்திருக்க வேண்டும். (32) |
|
|
|
|
|
ஏதிலார் யாதும் புகல இறைமகன் கோதொரீஇக் கொள்கை முதுக்குறைவு - நேர்நின்று காக்கை வெளிதென்பார் என்சொலார் தாய்க்கொலை சால்புடைத் தென்பாரு முண்டு |
|
(பொ-ள்.) காக்கை நேர் நின்று - காக்கையின் எதிரிலேயே நின்றுகொண்டு, வெளிது என்பார் - அக் காக்கை வெண்மையானது என்று உண்மைக்கு மாறாகப் பேசுபவர், என் சொலார் - வேறு எதைத்தான் சொல்லமாட்டார்கள், தாய்க்கொலை சால்புடைத்து என்பாரும் உண்டு - தாயைக் கொலை செய்தல்கூடப் பொருத்தமானதே என்று சொல்பவர்களும் உலகத்தில் இருக்கிறார்கள்; ஆதலால், ஏதிலார் யாதும் புகல - பிறர் தமக்குத் தோன்றியவாறெல்லாம் சொன்னாலும், இறை மகன் கோது ஒரீஇக் கொள்கை முதுக்குறைவு - அரசனாவான் அவர்கள் கூறுவதிற் குற்றமானவற்றையெல்லாம் நீக்கிவிட்டு நல்லனவற்றை மட்டுங்கொள்ளுதல் பேரறிவாகும். (வி-ம்.) குடிமக்கள் வழக்கிட்டுக் கொண்டு ஒருவர்மேலொருவர் அழுக்காறு முதலியவற்றாற் பொருந்தாதனவுங் கூறுவராதலால்; அரசனாவான் அவர் கூற்றுக்களை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் அவற்றிற் பொருந்துவனவே எடுத்துக் கொள்ளுமாறு கூறிற்று: முதுக்குறைவு: ஒரு சொன்னீர்மைத் தாய்ப் பெரிய அறிவினை உணர்த்திற்று. "முதுக்குறைவி"* என்பதற்கு அடியார்க்கு நல்லார் `பெரிய அறிவுடையாள்' என்றது காண்க. (க-து.) எதனையும் ஆராய்ந்து பார்த்துப் பொருந்துவன கொள்வது அரசன் கடமை. (33) ________________________________ * சிலப், கொலைக்கள.98 |
|
|
|
|
|
கண்கூடப் பட்டது கேடெனினுங் கீழ்மக்கட் குண்டோ உணர்ச்சிமற் றில்லாகும் - மண்டெரி தான்வாய் மடுப்பினும் மாசுணம் கண்டுயில்வ பேரா பெருமூச் செறிந்து |
|
(பொ-ள்.) மண்டுஎரி - மிகுந்த நெருப்பு, வாய் மடுப்பினும் சூழ்ந்து எரிந்தாலும், மாசுணம் - பெரியபாம்புகள், பெருமூச்செறிந்த - பெருமூச்சு விட்டுக்கொண்டு: கண் துயில்வ-தூங்கிக்கொண்டிருக்கும்; பேரா - அவ்விடத்தினின்றும் அசையா; (அதுபோல) கேடு கண்கூடாப்பட்டதுஎனினும்-தமக்கு வருங்கெடுதிகளை நேராகவே பார்த்தார்களானாலும், கீழ்மக்கட்கு உண்டோஉணர்ச்சி- கீழ்மக்களுக்கு அவற்றினின்றுந் தப்பிப்பிழைக்கும் உணர்ச்சி உண்டோ;இல்லாகும்-இல்லையாகும். (வி-ம்.)கண்கூடு: ஒரு சொன்னீரதாய்க் கண்ணுக்குக் கூடுவதான கட்பார்வையை யுணர்த்திற்று.கண்கூடாகப்பட்டது - நேரே கண்ணாற் பார்க்கப்பட்டது. மற்று, தான்: அசை, மண்டெரி பெருந்தீஎன்பது நளவெண்பா. வாய்மடுத்தல்-உண்ணுதல்-மூச்செறிதல்: ஒரு சொல் தன்மைத்து. (க-து.) எத்துணைக் கெடுதி வருவதாயினும் கீழ்மக்கள் மீண்டும்மீண்டுந் தீயசெயல்களையே செய்வர். (34) |
|
|
|
|
|
நட்புப் பிரித்தல் பகைநட்டல் ஒற்றிகழ்தல் பக்கத்தார் யாரையும் ஐயுறுதல் - தக்கார் நெடுமொழி கோறல் குணம்பிறி தாதல் கெடுவது காட்டுங் குறி |
|
(பொ-ள்.) நட்புப்பிரித்தல்- நண்பர்களைப் பகையாக்கிக் கொள்ளலும், பகை நட்டல் - பகைவர்களைநட்பாக்கிக் கொள்ளலும், ஒற்று இகழ்தல்-வேவுகாரர்களை இழித்துரைத்தலும், பக்கத்தார்யாரையும் ஐயுறுதல் - பக்கத்திலுள்ள எல்லாரிடத்தினும் ஐயுறவு கொள்ளலும், தக்கார் நெடுமொழிகோறல் - பெரியோர்களுடைய அறிவுரைகளை மீறலும், குணம் பிறிது ஆதல் - இயல்பான தன்மைக்குமாறாதலும் (ஆக இந்த ஆறு பொருந்தாத செயல்களும்), கெடுவது காட்டும் குறி-பின்னால் வரும்கெடுதிகளைக் காட்டும் அடையாளங்களாம். (வி-ம்.) நட்பு,பகை என்பன பண்பாகு பெயர்களாய் அவை தம்முடையாரை உணர்த்தின; ஒற்று: தொழிலாகு பெயராய்எல்லாரிடத்தும் ஒன்றியிருப்பாரை உணர்த்திற்று. நெடுமொழி -பெருமையுடைய மொழி; அஃதுஅறிவுரை, நட்புப் பிரித்தல் முதலிய ஆறையும் உடையார்க்குக் கேடு வரும் என்க. (க-து.) நட்புப்பிரித்தல் முதலியன செய்யலாகாது. (35) |
|
|
|
|
|
பணியப் படுவார் புறங்கடைய ராகத் தணிவில் களிப்பினால் தாழ்வகர்க் - கணிய திளையாள் முயக்கெனினுஞ் சேய்த்தன்றே மூத்தாள் தொலையாத* போகங் கொளல் |
|
(பொ-ள்.) பணியப்படுவார் புறங்கடையராக-தம்மால் வணங்கி எதிர்கொள்ளத்தக்க பெரியார் தம்முடையதலைவாயிற்படியில் வந்து நின்றனராக, தணிவுஇல் களிப்பினால் தாழ்வார்க்கு -அடங்குதலில்லாதசெல்வக்களிப்பினால் அவரை எதிர்கொள்ளக் கூசுவார்க்கு, அணியது இளையாள் முயக்கு எனினும்-திருமகளின் சேர்க்கை அப்போது அவர்க்கு நெருக்கமாயிருக்கின்றதானாலும்; சேய்த்து அன்றேமூத்தாள் தொலையாத போகம்கொளல் - மூதேவியின் ஒழியாத சேர்க்கையை மேற்கொள்ளுதல்அவர்களுக்குத் தொலைவில் இல்லை. (வி-ம்.) ஆகவே,பெரியாரை மதியாது செல்வக்களிப்பினாற் செருக்குவார்பால் உள்ள திருமகள் நீங்கியொழியமூதேவி விரைவிலே வந்துசேருவள் என்க. அவர்கட்கு அச்செல்வம் அழிந்துபோம் என்பது கருத்து.அணியது சேய்த்து என்பவற்றைக் கால அளவுக்குக் கொள்க. (க-து.) செல்வத்தை விடப் பெரியாரையே பெருஞ்செல்வமாகப்பேண வேண்டும். (36)__________________________________ `* தொலையாத என்னும் இச்சொல் ஓர் ஏட்டுப்படியிற் கண்டது. +"புணர்முலைப்போகம்"என்பதும் பாடம். |
|
|
|
|
|
கண்ணோக்கு அரும்பா நகைமுகமே நாண்மலரா இன்மொழியின் வாய்மையே தீங்காயா - வண்மை பலமா நலங்கனிந்த பண்புடையா ரன்றே சலியாத கற்ப தரு |
|
(பொ-ள்.) கண்ணோக்குஅரும்பு ஆ-அருள் ஒழுகு கண்ணின் பார்வையை மொட்டாகவும், நகைமுகமே நாள்மலரா - மகிழ்ச்சியான்மலர்ந்த முகமே புதுப்பூவாகவும், வாய்மையின் இன்மொழியே தீம்காயா - மெய்ம்மையானஇன்சொல்லே தித்திப்பான காயாகவும், வண்மை பலம்ஆ - ஈகையே பழமாகவும், கொண்டுள்ள நலம்கனிந்த பண்பு உடையார் அன்றே சலியாத கற்பதரு - நன்மைகள் மிகுந்த பெருந்தன்மையுடையசெல்வர்களல்லரோ சலித்தலில்லாது ஈயும் கற்பக மரமாவர். (வி-ம்.) கண்ணோக்கு- அருட்பார்வைக்கே சிறப்பாக வழங்குதலை `என்மேல் கண்ணோக்கம் வை' என்பதிற் காண்க.நாள்மலர் - அன்று மலர்ந்த புதுப்பூ இன்மொழியின் வாய்மையே என்பதை மற்றவற்றோடும் ஒத்துநிற்றற்பொருட்டு முன் பின்னாக மாறுக, இங்கு வாய்மை யென்றது' உள்ளும் புறமும் ஒத்து நிற்றலை.வண்மை என்பதை `சொல்லின் முடிவின் அப்பொருண் முடித்தல்' என்னும் உத்திபற்றி ஈற்றில்நிறுத்தினார். இச்செய்யுளின் முதன்மையான கருத்து அதுவாதலின், கண்ணோக்கு நகைமுகம் இன்மொழிஎனவரும் ஏனைய மூன்றும் இவ்வண்மையைச் சிறப்பிக்க வந்தனவென்று கொள்க. இங்ஙனம்கருத்திலிருத்திச் செய்யுளியற்று முறையை மாணிக்கவாசகப்பெருமானாரியற்றிய திருச்சிற்றம்பலக்கோவையாரின் முதற் பாட்டினும் அதற்குப் பேராசிரியர் கூறும் உரையிலுங் கண்டுகொள்க. (க-து.) விரும்பிப்பார்த்தல்முகமலர்ச்சி முதலிய குணங்களையுடைய செல்வர் கற்பக மரம்போலப் பயன்படுவர். (37) |
|
|
|
|
|
வாங்குங் கவளத் தொருசிறிது வாய்தப்பின் தூங்குங் களிறோ துயருறா - ஆங்கதுகொண் டூரும் எறும்பிங் கொருகோடி யுய்யுமால் ஆருங் கிளையோ டயின்று |
|
(பொ-ள்.) வாங்கும் - தான் எடுத்து உட்கொள்ளும், கவளத்து -ஒருவாய் உணவினின்று, ஒரு சிறிது - ஒரு சிறிது உணவு, வாய் தப்பின் - வாய் தவறிக் கீழேவிழுந்தால், (அதனால்) தூங்கும் - அசையா நிற்கும், களிறோ - யானைகளோ, துயர்உறா -வருத்தமடையா, அதுகொண்டு - தவறிய அவ்வுணவைக்கொண்டு, இங்கு - இவ்வுலகில், ஊரும் எறும்பு ஒருகோடி -ஊருகின்ற எறும்புகள் ஒரு கோடி, ஆரும் கிளையோடு - தங்கள் நிறைந்த சுற்றத்தோடு,அயின்று - உண்டு, உய்யும் - பிழைக்கும். (வி-ம்.) யானைவாயினின்றுந்தவறிய சிற்றுணவால் ஒரு கோடி எறும்புகள் உயிர்வாழும் என்பதனால்,ஒட்டணி கூறப்பட்டது. களிறு,பொதுமையில் நின்றது. ஆல்: அசை. அயின்று - இறந்தகால வினையெச்சம். `அயில்' பகுதி லகரமெய் னகர மெய்யாகத் திரிந்தது சந்தி.ற்: இடைநிலை;உ:விகுதி. கிளை- கிளைத்தல்: முதனிலைத்தொழிலாகுபெயர். "சுற்றத்தாற்சுற்றப்படவொழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன்"* என்பது திருக்குறள். கவளம்-ஒருவாய் உணவு. வாங்கும் கவளம் என்றவிடத்து, பாகன் கொடுக்க யானை வாங்கிஉண்ணும் ஒரு வாயுணவு எனலுமாம். (க-து.) பெருஞ்செல்வமுடையவர் அதனில் ஒரு சிறு பகுதியைத் தானமாக வழங்குவராயின் அதனால் எத்தனையோஉயிர்கள் பிழைக்கும். (38) ________________________________ * திருக்குறள் சுற்றந்தழால், 4. நீ வி - 4 |
|
|
|
|
|
மாகஞ் சிறுகக் குவித்து நிதிக்குவை ஈகையின் ஏக்கழுத்தம் மிக்குடைய - மாகொல் பகைமுகத்த வெள்வேலான் பார்வையில் தீட்டும் நகைமு கத்த நன்கு மதிப்பு |
|
(பொ-ள்.) பகைமுகத்த - பகைப்புலத்துள்ள, மா-(தன் பகைவராகிய) விலங்குகளையெல்லாம், கொல் - கொல்லுந்திறனுடைய, வெள் வேலான் -ஒளிமிக்க வேலேந்திய அரசன், நகை முகத்த - (தன்) மலர்ந்த முகத்திற் காணும், பார்வையின்- பார்வையில், தீட்டும் - தோற்றுவிக்கும், நன்கு மதிப்பு - நன்மதிப்புக்கள், மாகம் -வானும், சிறுக - குறையும்படி, நிதிக்குவை குவித்து - (அவ்வளவு பெரிய) பொருட் குவியலைக்குவித்து, ஈகையின் - அவை முழுமையும் அவரவர் தகுதிக்கேற்ப அவ்வரசன் அள்ளிக் கொடுத்தலைப்பார்க்கிலும், ஏக்கழுத்தம் - செம்மாப்பு,மிக்குடைய - பெரிதுடையவாகும். (வி-ம்.) "மாகஞ்சிறுக" என்றது நிதிக்குவையின் பெருக்கத்துக்கு, அவரவர் தகுதிக்கேற்ப அளவுசெய்து நோக்குதலால் பார்வையிற் றீட்டும் என்று கூறினார். ஏக்கமுத்தமுடமையாவது அரசன்கண்ணோட்டமிருப்பதால் இனி நமக்கு யாதுங் குறைவில்லை; எவர்க்கும் அச்சம் இல்லை என்று தோன்றும் உள்ளக் கிளர்ச்சியும்,அக்கிளர்ச்சியாலேற்படும் செம்மாப்பும்மிக்கு' மிக என்னுஞ் செயவெ னெச்சத்திரிபு. ஈகை: தொழிற்பெயர். முகத்த: குறிப்புப்பெயரெச்சம். அரசன்பால் குறையிரந்து நிற்கும் ஒருவனுக்கு அவ்வரசன் அளவற்ற பொருட் குவியலை அளிக்கிறான் என வைத்துக்கொள்வோம்.அவ்வாறு பொருட்குவியலைப் பெற்று அகன்றபின், அரசன் அவனைப்போல் தன்னிடம் வந்துகுறையிரந்த பல்லாயிரக்கணக்கான வறியரில் ஒருவனாய் எண்ணி அந்நேரமே அவனை மறந்துவிடுவான்.ஆனால் அங்ஙனமின்றி எப்பொழுதும் அரசனது கண்ணோட்டம் அவனுக்கிருப்பின் அவன் யாருக்கும்அஞ்சவேண்டியதில்லை. அவனை நாடிவருவோர் பலர் இருப்பார். அதனால் அவனுக்கு எப்போதும்மனமகிழ்ச்சியும் செல்வாக்கும் இருந்துவரும். (க,து,)அரசினடத்திலே அளவற்ற பெரும் பொருளைப் பரிசாகப் பெறுவதினும் வேனாலே நன்கு மதிக்கப்படும்பேறு பெறுதல் ஒருவர்க்கு மிக்க மேம்பாட்டைக் கொடுக்கும் (39) |
|
|
|
|
|
களைகாணாத் தம்மடைந்தார்க் குற்றுழியும் மற்றோர் விளைவுன்னி வெற்றுடம்பு தாங்கார் - தளர்நடைய தூனுடம் பெள்று புகழுடம்பு ஒம்புதற்கே தானுடம் பட்டார்கள் தாம் |
|
(பொ-ள்.) ஊன்உடம்புஇறைச்சியாலாகிய இவ்வுடல், தளர் நடையது என்று - (பிணி, மூப்பு, சாக்காடு முதலியவற்றால்)நிலைதளருந் தன்மையுடையது என்று கருதி (அதனால்அதை வெறுத்து), புகழுடம்புஓம்புதற்கே-(நிலைதனராத) புகழ் உடம்பினை வளர்க்கவே, உடம்பட்டார்கள் -தீர்மானித்தவர்கள்,தம் களைகண் ஆக அடைந்தவர்க்கு - தம்மை ஆதாரமாக அடைந்தவர்க்கு, உற்றஉழியும் (சிறிது துன்பம்) வந்தவிடத்தும், மற்றும் ஓர் விளைவு உன்னி - வேறொரு பயனைக்கருதி, வெற்றுடம்பு தாங்கார் - பயனில்லாத (தமது) ஊன் உடம்பினைப் பாதுகாக்க நினையார். (வி-ம்.) அரசர்க்கரசன்சிபி, புறாவின் பொருட்டுத் தன்னுயிர் கொடுத்ததும், தேவர் துன்பம் நீங்கத் ததீசிமுனிவர்தம் முதுகெலும்பு ஈந்ததும், பாபர் தம்மகன் பிழைக்கவேண்டி அவனுக்கு வந்த காய்ச்சலை ஒருபெரியார் கூறியபடி தாம் ஏற்றுத் தம் மகனுயிர் காப்பாற்றியதும், புகழுடம்பு விரும்புவார் தம்ஊனுடம்பைப் பொருட்படுத்தார் என்பதற்குத் தக்க சான்றாகும். "ஏவரெனினும் இடருற்றனராகிஓவில் குனையொன் றுளரேல் அது முடித்தற்கு ஆவிவிடினும் அறனே" என்பது கந்தபுராணம். களை கண்- நீக்குமிடம்.ஊனுடம்பு: மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்றொக்க வேற்றுமைத் தொகை நிலைத்தொடர்.புகழுடம்பு: இருபெயரொட்டுப் பண்புத்தொகை. அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையார் என்புமுரியர் பிறர்க்கு" என்பது திருக்குறள். (க-து.) புகழைவிரும்புகின்றவர்கள் தம் உயிரைக் கொடுத்தேனும்தம்மையடைந்தோர்க்கு உற்ற துயரை ஒழிப்பர். (40) |
|
|
|
|
|