41-50
 

41. மான வலியின் உயர்வு

தம்முடை யாற்றலும் மானமுந் தோற்றுத்தம்
இன்னுயிர் ஓம்பினும் ஓம்புக - பின்னர்ச்
சிறுவரை யாயினும் மன்ற தமக்காங்
கிறுவரை யில்லை யெனின்

(பொ-ள்.) பின்னர்- இனிமேல், சிறுவரை ஆயினும் - சிறிது காலமாயினும், மன்ற - திண்ணமாக,தமக்கு இறுவரை இல்லை எனின் - தமக்குச் சாங்காலம் இல்லையானால், தம்முடைய ஆற்றலும்மானமும்தோற்று - தம்முடைய வலிமையையும் மானத்தையும் இழந்து, தம் இன்னுயிர் - தமது  இனிய உயிரை, ஓம்பினும் ஓம்புக - காக்கினுங்காக்க.

(வி-ம்.) பிறந்த போதே இறப்புஉண்மையாகலின், வலியும் மானமும் இழக்காது வாழவேண்டும் என்க.  போர்முகத்தும் பகைவர்க்குப் புறங்காட்டல் வலியிழத்தல்: இழிதொழில்செய்து பிறரால் அவமதிக்கப்படலும் தண்டிக்கப்படலும் மானம் இழத்தல்: "மருந்தோமற்றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை, பீடழிய வந்த விடத்து " என்பது திருக்குறள்.ஓம்பினும் என்னும் உம்மை இழிவு  சிறப்பு.ஆங்கு: அசைநிலை, பிறந்த உயிரெல்லாம் என்றேனும் ஒருநாள் இறந்தே தீரும். இறவாத உயிரெதுவும் மண்ணிலில்லை. ஆசிரியர்குமரகுருபர அடிகள் தம் முதற்செய்யுளிலேயே இவ்வுண்மையை விளக்கி மண்ணிற் பிறந்தார்க்கெல்லாம் இறப்பு உண்டாகையால் "எம்பிரான்மன்று வழுத்தாததென்னே  நமரங்காள்" என்றுகூறி வருந்தினார்.

(க-து.) தமக்கு இனி இறத்தல் இல்லைஎன்று உறுதியாக உணர்ந்தார் தம் வலிமையையும் மானத்தையும் இழந்தேனும் தம் உயிரையும்பாதுகாக்க.              (41)

   

42. மானங் காப்பவர்

கலனழிந்த கற்புடைப் பெண்டிரும் ஐந்து
புலனொருங்கப் பொய்யொழிந் தாரும் - கொலைஞாட்பின்
மொய்ம்புடை வீரரும் அஞ்சார் முரண்மறலி
தும்பை முடிசூ டினும்

(பொ-ள்.)   கலன் அழிந்த - மங்கல நாண் இழந்த, கற்புடைப்பெண்டிரும்- கற்புடைய பெண்களும், ஐந்து புலன் ஒருங்க - (மெய், வாய், கண்,மூக்கு,செவியென்னும்) ஐம்புலன்களுந் தம் வசப்பட, பொய் ஒழிந்தாரும் - பொய்ம்மையினின்றுநீங்கினோரும், கொலைஞாட்பின் - யுத்தகளத்தின்கண்ணே, மொய்ம்பு உடை வீரரும் - வலிமையுடைய வீரர்களும், முரண், மறலி- வலிமைமிக்க நமன், தும்பை முடிசூடினும் - தும்பைப்பூ மாலையைத் தம் முடியின் அணிந்து  எதிர்ப்பினும், அஞ்சார் - (தமது ) நிலைகலங்கார்.

(வி-ம்.) ஒருங்கு: பகுதி உகரக்கேடு சந்தி, அ: விகுதி. தும்பை மாலை - போர் செய்தற்கு அணியும் மாலை.தும்பை என்னும் முதற்பொருள் அதன் சினையாகிய மலர்க்கு ஆனமையால் பொருளாகு பெயராகவும்,பின்பு அம்மலரால் ஆன மாலைக்கானமையாற் கருவியாகு பெயராகவும் வருதலின், `தும்பை' இருமடியாகுபெயர். மறலி-மறத்தொழில் (கொடுந்தொழில்: அஃதாவது கொல்லுதல்) செய்வதால் மறலிஎனப்பட்டான். கணவரை இழந்து கற்புநிலை தவறாத பெண்கள் இயல்பாகவே தம் வாழ்நாளில் வெறுப்புற்றிருப்பர்;அன்னார் தம் கணவர் இருக்குங்கால் தாம் வாழ்க்கையில் இன்பமாய்க் காலங்கழித்ததும்அன்னார் இறந்தபின் தம் உலக வாழ்க்கை தமக்கு எப்போதும் மகிழ்ச்சியற்றிருப்பதுங் கண்டுஇறப்புக்கு ஆயத்தமாயிருப்பர். ஐம்புலன் வென்ற துறவிகட்கு உலகப்பற்றே யிராதாதலின்,  அவர்களும் இறப்பை வெறார். வீரர் வீரருலகுவிரும்பிப் போரில் தம் பகைவருடன் எதிர்த்து நிற்குங்கால் தம் உயிரைத் துரும்பாகமதித்துத் தமக்கு அல்லது எதிரிக்கு வெற்றிகாணு மளவும் வீரமுடன் சண்டை செய்வர். தாம்தோற்க நேர்ந்துழி மானங்காப்பான் தம் இன்னுயிரை அக்கொலைக் களத்திலேயே கூற்றுவனிடம்ஒப்படைப்பர். "கூற்றுடன்று மேல்வரினுங் கூடி யெதிர்நிற்கும், ஆற்ற லதுவே படை"என்பது திருக்குறள்.

(க-து.) கற்புடைய கைம்பெண்களும், ஐம்புலன் வென்ற துறவிகளும், அஞ்சா நெஞ்சு படைத்த  போர் வீரர்களும் இறத்தற்கும் அஞ்சாது தம்மானத்தினைக் காப்பர்.   (42)

   

43. மெய்ப்பயனுடையார் இறத்தற் கஞ்சார்

புழுநெளிந்து புண்ணழுகி யோசனை நாறும்
கழிமுடை நாற்றத்த வேனும் - விழலர்
விளிவுன்னி வெய்துயிர்ப்பர் மெய்ப்பயன் கொண்டார்
சுளியார் சுமைபோடு தற்கு

(பொ-ள்.) விழலர்- (அறிவில்லா) வீணர், புழு நெளிந்து - புழுக்கள் நெளிய, புண் அழுகி - புண்ணாயழுகி, யோசனைநாறும் - யோசனை தூரத்துக்கு நாறுகின்ற, கழி-மிகுந்த, முடைநாற்றத்த ஏனும்-தீநாற்றத்தையுடையவராயினும், விளிவு உன்னி-சாதலை நினைந்து, வெய்து உயிர்ப்பர் -பெருமூச்செறிவர்; (ஆனால்), மெய்ப்பயன் கொண்டார் - தாம் உடம்பெடுத்த பயனை முயன்றுஅடைந்த அறிஞர், சுமை போடுதற்கு - (இவ்வுடம்பாகிய) சுமையை வீசி எறிய, சுளியார் -வெறுப்புக் கொள்ளார்.

(வி-ம்.) சுமைசுமப்போன், சுமை தாங்காது அதைக் கொண்டுபோய் இறக்குமிடம் வருமட்டும் வருந்தி நடந்துஅவ்விடங் கண்டவுடன் மகிழ்ச்சியால் தன் தலைமீதிருக்குஞ் சுமையை இறக்கி மனமகிழ்தல்போல், உடம்பெடுத்த பயனறிந்த அறிஞர் அவ்வுடம்பாகிய சுமையைச் சுமந்து திரிய  வருத்தமடைந்து அச்சுமையைப் போடுங் காலங் கண்டால்மகிழ்ச்சிகொள்வாராகையால் `சுமைபோடுதற்குச் சுளியார்' என்றார்: "மற்றுந்தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க, லுற்றார்க் குடம்பு மிகை " என்பது திருக்குறள்.

(க-து.) தாம்உடலெடுத்த பயனையடைந்த அறிஞர் இறத்தற்கு அஞ்சார்.     (43)

   

44. மன்னன் எப்படி மன்னுயிர் அப்படி

இகழின் இகழ்ந்தாங் கிறைமகன் ஒன்று
புகழினும் ஒக்கப் புகழ்ப - இகல்மன்னன்
சீர்வழிப் பட்டதே மன்பதைமற் றென்செயும்
நீர்வழிப் பட்ட புணை

(பொ-ள்.)   நீர்வழிப்பட்ட புணை - நீர் செல்லும் வழியே செல்லும்தெப்பம், (அதுபோல்) மன்பதை - மக்கட்கூட்டம், இகல்மன்னன்  - வலிமையுடைய அரசனது, சீர் வழிப்பட்டது - ஆணை ஒழுங்கின் வழியே செல்லும்,மற்று என்செய்யும் - அவ்வழியிற் செல்லாது வேறு என்ன செய்யும்? (அஃதெவ்வாறெனில்),இறைமகன் - அரசன், ஒன்று இகழின் - ஒரு பொருளை இகழ்ந்தால், ஒக்க இகழ்ந்து - (தாமும்அரசனோடு ) கூட அதை இகழ்ந்து, புகழினும் - அவன் (அப் பொருளை) புகழ்ந்தால், ஒக்க  புகழ்ப - தாமும்கூட ஒத்துப் புகழ்வர்.

(வி-ம்) ஒன்று:எண்ணாகு பெயர். அரசனுறங்கினுஞ் சென்று உலகங் காக்கும் அவன் கடவுள் தன்மை, இங்குச் சீர்எனப்பட்டது. "உறங்கும்போதுந் தன்னரு ளாணையுலகெங்கும், அறங்குன் றாவாக் காப்பதைசுயன்ப' என வருவதுங் காண்க. ஒக்க: தனி வினைப்பெயர்; கு: சாரியை; அ: பெயரெச்ச  விகுதி; சுகரம் இரட்டித்தது சந்தி. ஒக்க - ஒத்துநிற்க.

(க-து.) அரசன்ஆணைவழியே குடிகள் ஒழுகுவர்.   (44)

   

45. அமைச்சரியல்பு

செவிசுடச் சென்றாங் கிடித்தறிவு மூட்டி
வெகுளினும் வாய்வெரீஇப் பேரா - கவிழ்மதத்த
கைம்மா வயத்ததோ பாகுமற் றெத்திறத்தும்
அம்மாண் பினவே அமைச்சு

(பொ-ள்.) பாகு-பாகன், எத்திறத்தும்-எவ்வகையாலும், கவிழ் மதத்த -பொழியும் மதத்தினையுடைய, கைமா -யானையின், வயத்ததோ - வயத்தினனாவனோ, (அதுபோல்) அமைச்சு - அமைச்சர்கள், எத்திறத்தும்- எவ்வகையாலும், அம்மாண்பினவே - அத்தன்மையரேயாவர், (ஆகையால்) சென்று - (அரசன் தன்நெறி தவறினால் அவனிடத்துப்) போய், செவி சுட - (அவன்) செவிகள் வருந்தும்படி, இடித்து -(அவன் குற்றங்களை எடுத்துக்காட்டி) இடித்துரைத்து, அறிவுமூட்டி - (அவனுக்கு) அறிவுவரச்செய்து,  வெகுளினும் - (அவன் குற்றங்களைஎடுத்துக்காட்டி)   இடித்துரைத்து, வெகுளினும் -(அவன் தம்மைக்) கோபிக்கினும், வாய்வெரீஇ - (அவனுக்கு) அஞ்சி, பேரா - (அவனைவிட்டு)அகலார்.

(வி-ம்.) யானைதன்னியல்பிலிருக்கும்போது அதனைத் தம்வசப்படுத்தி நடத்தும் பாகர், அது மதங்கொண்டு தம்வசம் அடங்காமல் ஓடும்போதும் அதனை விடாது சென்று அதனை அங்குசம் இட்டு இடித்து அதன் மதத்தைஅடக்கி மறுபடியும் அதனைத் தன்னியல்பிற்குக் கொண்டுவருவது போல்,  அரசன் தன்னியல்பில் நின்றபோது அவன் மனம்போல்நடக்கும் அமைச்சர் அவன் வெகுண்டு  தன்னிலைதவறுங்கால் அவன் செவிகளில் நன்மொழிகளை இடித்துரைத்து அவனுக்கு அறிவு புகட்டி  அவனை மறுபடியும் தன்னியல்பிற்குக் கொணர்வர் என்றுஅழகாக உவமித்திருக்கின்றார் ஆசிரியர்.

"அறிகொன் றறியானெனினு முறுதி

உழையிருந்தான் கூறல் கடன்."            (திருக்குறள்)

 

"கதங்கொள்சீற்றத்தை யாற்றுவா னினியன கழறி

பதங்கொள்பாகனு மந்திரி யொத்தனன் பன்னூல்

விதங்களாலவன் மெல்லென மெல்லன விளம்பும்

இதங்கள்கொள்கிலா விறைவனை யொத்ததோர் யானை."

 

     -  (கம்பராமாயணம்)

கவிழ்மதம் - பொழியும் மதம், மூட்டி: பிறவினை  வினையெச்சம், மூட்டு: பிறவினைப் பகுதி, உகரக்கேடு;சந்தி, இ:விகுதி.  பேரா: அமைச்சு என்றஅஃறிணைப் பெயர்க்கேற்ற  பயனிலை, வயத்ததென்பதும்அத்தகையது.

(க-து.) பாகனானவன்யானை மதங்கொண்ட போது அதனை நடத்தி நல்வழிக்குக் கொண்டுவருவது போல், அமைச்சர் அரசன்வெகுண்டபோது அவனை நல்வழிப்படுத்தி யொழுகுவர்.   (45)

   

46. அரசனை அடுத்தொழுகுமாறு

கைவரும் வேந்தன் நமக்கென்று காதலித்த
செவ்வி தெரியா துரையற்க - ஒவ்வொருகால்
எண்மைய னேனும் அரியன் பெரிதம்மா
கண்ணிலன் உள்வெயர்ப்பி னான்

(பொ-ள்.) வேந்தன்-அரசன்,நமக்கு கைவரும் என்று - நமக்கு இசைந்து வருவன் என்று கருதி-காதலித்த - விரும்பினவற்றை,செவ்வி தெரியாது - (அவனிடம் சொல்லக்கூடிய)காலந்தெரியாமல், உரையற்க, சொல்லுதலொழிக, ஒவ்வொரு கால் எண்யைனேனும் - சிற்சில நேரங்களில்(அவன் காணுதற்கு) எளியனானாலும், பெரிது-பெரும்பாலும், அரியன்- காண்டற்கும் பேசுதற்கும்)அரியனாவன், (மேலும்) கண்இலன் - (அவன்) கண்ணோட்டமில்லாதவன், உள் வெயர்ப்பினான் -உள்ளத்தே  சினமுமுடையவன்.

(வி-ம்.) கோல்நிலை கோடா வேந்தன் கோல்நிலை கோடா நிற்க, உறவினர் அயலார் என நோக்காதுஅறநெறி நின்று அந்நெறி பிறழ்ந்தாரைத் தண்டித்தலும், காலம் வருமளவும் பகைவரறியாமல் உள்ளேசினங் கொள்ளலும் இயல்பாதலால் கண் இலன், உள் வெயர்ப்பினான் என்றார். கண்,இடத்தினிகழ் பொருண்மேல் நிற்றலானும், உள்,அங்கிருக்கும் மனத்தின்மேல் நிற்றலானும் இடவாகு பெயர்கள். அரசனைக் கண்டு தத்தம்குறைபாடுகளைக் கூறப், பற்பல அதிகாரிகளும் புலவர்களும், குடிகளும் அயல்நாட்டு மன்னரின் தூதுவர்முதலியோரும் நேரம் பார்த்து நிற்பர். அரசன் எல்லோரையும் உசாவி அவரவர்க்கு மறுமொழிசொல்வதில் எப்போதும் ஆவலுடையவனாயிருப்பன். மேலும், அவரவர்க்கு ஏற்ற வகையில் அவரவர்குறைகள் நீக்க நெடுநேரம் ஆழ்ந்து கருதவேண்டியவனாயுமிருப்பன்.  அவ்வமயங்களில் அவன் மனநிலை தெரியாமல் எவ்வளவு உயிர்த்தோழராயிருந்தாலுங் காலமறியாமல் அவனிடம் ஏதாதது மொழிந்தால் அவன் சிந்தனை சிதறுண்டு  அதனாலவன் சீற்றங் கொள்வன். ஆதலின், செவியறிந்துரைக்க வென்பது.

(க-து.) அரசன்நம்மிடம் அன்புடையவனாயிருப்பினும் அவனிடம் காலமறிந்தே நாம் விரும்பியவற்றைச் சொல்லவேண்டும்.      (46)

   

47. அரசன் வெகுளி

பழமை கடைப்பிடியார் கேண்மையும் பாரார்
கிழமை பிறிதொன்றுங் கொள்ளார் - வெகுளின்மன்
காதன்மை உண்டே இறைமாண்டார்க்கு ஏதிலரும்
ஆர்வலரும் இல்லை அவர்க்கு

(பொ-ள்.)   வெகுளின்மன் - (அரசர்) மிகுதியாகக் கோபித்தால்,பழமை (இவர் நமக்கு அரசியலின்) தொன்று தொட்டுப் பணியாற்றி வருபவர் என்பதையும்,கடைப்பிடியார் - நிலைநிறுதார்,  கேண்மையும் -(இவர் நமக்கு) நண்பர் என்பதையும், பாரார்- கவனியார் பிறிது - (அவை) ஒழிய, கிழமை -(இவர் நமக்கு) உரியவர் என்பதையும், ஒன்றும்-சிறிதும். கொள்ளார் - நினையார், (ஆதலால்)இறை - அரசியலில், மாண்டார்க்கு - அகப்பட்டார்க்கு, காதன்மை உண்டே - அன்புடைமையுண்டோ?,அவர்க்கு-  அவ்வரசர்க்கு, ஏதிலரும்  - (இவர்) அயலாரெனவும், ஆர்வலரும் - (இவர்)அன்புநடயரெனவும், இல்லை -கிடையா.

(வி-ம்.) அரசர்சினங்கொள்வாராயின், அயலாரெனவும் அன்புடையாரெனவும் பாரார்என்பதற்குச் சோழ மன்னன் ஒரு பசுவினதுகன்றின்பொருட்டுத் தன் புதல்வன் செய்த குற்றத்திற்காக  அவனையே கீழே கிடத்தி அவன் மேல் தேரூர்ந்த வரலாறு சான்றாகும். பழமை,கிழமை இரண்டும் பண்பாகு பெயர்கள். மன்: மிகுதியுணர்த்திற்று. ஆர்வம்-அன்பு; இதனையுடையார்ஆர்வலர். அரசர்க்குக் கோபம் பிறந்தால் அவர் கட்டளைக்கு எதிர்த்துநிற்றலியலாது. அரசர் கோபத்திற்கு உற்றார், உறவினர் என்பது கிடையாது. "வேந்தன்சீறின் ஆந்துணை பில்லை" "மன்னரை யடைந்து வாழ்தல் வஞ்சநஞ் கடைய நாகந்தன்னொடு கூடி வாழுந்தன்மை" என்பன காண்க.

(க-து.) எவரும் அரசரிடம் உரிமை கொள்ளல் இயலாது.       (47)

   

48. மன்னர் புறங்கடை காத்தல்

மன்னர் புறங்கடை காத்து வறிதேயாம்
எந்நலங் காண்டுமென் றெள்ளற்க - பன்னெடுநாள்
காத்தவை எல்லாம் கடைமுறைபோய்க் கைகொடுத்து
வேத்தவையின் மிக்குச் செய்யும்

(பொ-ள்.) யாம்- நாம், மன்னர் புறங்கடை - அரசர் தலைவாயிலை, வறிதே காத்தும்- வீணாகக் காத்துவந்தும்எந்நலம் காண்டும் - யாது பயனடைந்தோம், என்று எள்ளற்க - என்று அக் காவலைக் கைவிடுதலொழிக; பல்நெடுநாள்- பல நாட்கள் காத்தவை யெல்லாம் - (தலை வாயிலைப்பொறுமையுடன்) காத்திருந்தவை யெல்லாம்; கடைமுறை போய் - முடிவிற் சென்று, கைகொடுத்து-உதவியாகி, வேந்து அவையின் - அரசசபையில்,மிக்கு செயும் - மிகுந்த நன்மையைச் செய்யும்.

(வி-ம்.) வறிது:குறிப்பு வினையெச்சம். காண்டும்: தன்மைப் பன்மை இறந்தகால வினைமுற்று,  வேந்து அவை - வேந்தவை: வேத்தவையாயது வலித்தல்விகாரம். அரச சேவை வீண்போகாது. அரண்மனை வாயில் காக்கும்காவலாளனை அரசன் வாயிற்புறத்து வந்து போகும் பல தடவைகளில் ஒரு தடவையாவதுகவனியாமலிருக்கமாட்டான். பல தடவை கவனித்தும் அக்காவலாளிக்கு அன்பு காட்டாதிருக்கலாம்.அவனுக்கு வாயிற்காவலினும் உயர்ந்த தொழில் அளியாதிருக்கலாம். அப்போது அரசன்பால்வெறுப்பும் தன் தொழிலில் அருவருப்புங் கொள்ளலாகாது. ஏனெனில் அரசன் பல தடவையாக அக்காவலாளின் பொறுமை எப்படி என்று வெளிக்குக் காட்டாமலே கவனித்து வந்தாலும் வரலாம்.அப்படிப் பல தடவை கவனித்ததில் காவலாளன் தன் வேலையைப் பொறுமையோடு பார்க்கிறான் எனஅவன் உறுதிகொண்டுவிட்டால், பின் அக் காவலாளனை அரசன் கட்டாயம் மேற்றொழில் ஒன்றில்அமர்த்துவான்; ஆகையால் "மன்னர் புறங்கடை காத்து வறிதே யாம் எந்நலங் காண்டும் என்றெள்ளற்க, " "முயற்சி திருவினையாக்கும்."

(க-து.) அயர்வின்றிஅரசன் பணியாற்றுவார், முன் இல்லாவிடினும் முடிவில்அவன் அன்பு பெறுவர்.  (48)

   

49. இறுவரைகாறும் முயலல்

உறுதி பயப்பக் கடைபோகா வேனும்
இறுவரை காறும் முயல்ப - இறும் உயிர்க்கும்
ஆயுள் மருந்தொழுக்கல் தீதன்றால் அல்லனபோல்
ஆவனவும் உண்டு சில

(பொ-ள்.) இறும் உயிர்க்கும் -இறக்கும் நிலைமையில் இருக்கும் உயிர்களுக்கும், ஆயுள் மருந்து-வாழ்நாளைப் பெருகச் செய்யும்மருந்துகளை, ஒழுக்கல் - வாயில் விடுதல், தீதன்று-தீதாகாது, சில-சில காரியங்கள், அல்லனபோல் ஆவனவும் உண்டு-முடியாதவைபோல் தோன்றி (விடாமுயற்சியின் பயனாய்ப்) பின்பு முடிவனவும்உண்டு; (ஆதலால்) உறுதி பயப்ப - நன்மை பயங்குங் காரியங்கள், கடைபோகா ஏனும் - முற்றுப்பெறாவிடினும், இறுவரை காறும் - (அவை முடிவுபெறும் வரைக்கும், முயல்ப - (அறிஞர்) முயற்சிசெய்துவருவர்.

(வி-ம்.) உறுதி-அடையப்படுவது. பயப்ப:பலவின்பால் வினையாலணையும் பெயர்: இறுவரை:வினைத்தொகை. முயல்ப: பலர்பால் எதிர்காலவினைமுற்று, ப: விகுதி. காறு-வரை: சொல், ஒழுக்கல்: தொழிற்பெயர். ஆல்:அசை. ஆவனவும் -உம்மை இனி ஆகாமையும் என நிற்றலின் எதிர் மறையுமாம். "கலங்காது கண்டவினைக்கட்டுளங்காது, தூக்கங் கடிந்து செயல்" என்னுந் திருக்குறளும், "இசையாதெனினும் இயற்றியோர் ஆற்றால், அசையாது நிற்பதாம் ஆண்மை" என்னும் நாலடியாரும்இங்கே நினைவுகூரற்பாலன. உழைப்பில்லார்க்கு ஊதியமில்லை யாகையால் எக்கருமமாயினும் இறுதிவரைசலிப்பின்றி முயலல் வேண்டும்.

(க-து.) எக்கருமமாயினும்பயனளிக்காதென்று இடையில் விட்டுவிடாமல் அயர்வின்றி முடிவுவரை முயல வேண்டும்.       (49)

   

50. முயற்சி செய்யாமை

முயலாது வைத்து முயற்றின்மை யாலே
உயலாகா ஊழ்த்திறந்த என்னார் - மயலாயும்
ஊற்றமில் தூவிளக்கம் ஊழுண்மை காண்டுமென்று
ஏற்றார் எறிகால் முகத்து

(பொ-ள்.) ஊற்றம் இல்-அசைவின்றி நிற்குந் தன்மையில்லாத, தூ விளக்கம்-தூயவிளக்கை,ஊழ் உண்மை காண்டும் என்று - ஊழ்வினையின் உண்மையைத் தெரிவோம் என்றுகருதி, எறி-வீசுகின்ற, கால்முகத்து - காற்றுக்கெதிரில்,மயலாயும் - அறிவுகெட்டும், ஏற்றார்- (ஒருவரும்) ஏற்றமாட்டார் : (அதுபோலஅறிவுடையார்) முயலாது வைத்து -பயன்தரும் காரியங்களைச் செய்யத்தாம் முயற்சி செய்யாமலேயிருந்து, ஊழ்திறந்த - ஊழ்வினை வகையில் வரும் நன்மைகள், முயற்று இன்மையாலே - தாம் முயற்சி செய்யாமையால், உயல் ஆகா - தப்பமாட்டா:என்னார் - என்று கருதிக்கொண்டுவாளா இரார்.

(வி-ம்.) முயற்சியால்ஊழையும் வெல்லலாமென  இதற்கடுத்த செய்யுளில் ஆசிரியர் கூறுவர்.  ஊற்றம் - நிலையுடையதாய் நிற்குந்தன்மை."ஊற்ற மிறு விளக்கம்" என்ற பாடங்கொண்டு, அசைவின்றி நிற்றலை ஒழிந்த விளக்கினை என் றுரைப்பாருமுளர், முகத்து: ஏழாம் வேற்றுமைக்கண்நின்றது.

(க-து.) எல்லாம் ஊழ்வினைப்படி ஆகும் என்று கருதி அறிஞர் வாளாவிருந்து முயற்சி செய்யாதிரார்.           (50)