61-70
 

61. நல்லார் அல்லன செய்யார்

நல்லா றொழுக்கின் தலைநின்றார் நல்கூர்ந்தும்
அல்லன செய்தற்கு ஒருப்படார் - பல்பொறிய
செங்கண் புலிஏறு அறப்பசித்துந் தின்னாவாம்
பைங்கண் புனத்தபைங் கூழ்

(பொ-ள்.) பல்பொறிய - பல புள்ளிகளையுடைய, செம்கண் புலி ஏறு - சிவந்த கண்களையுடைய புலியேறானது, அறப்பசித்தும்-மிகுந்த பசிகொண்டும்,பைங்கண்புனத்த-பசுமையான இடமாகிய கொல்லைகளிலுள்ள, பைங்கூழ் - பசிய பயிர்களை,தின்னா ஆம்-தின்ன மாட்டா (அதுபோல்), நல் ஆறு ஒழுக்கின் தலை நின்றார்-நன்னெறியொழுகுதலின் உறுதியாக நின்றவர்கள், நல்கூர்ந்தும்-வறுமையுற்றும், அல்லன செய்தற்குஒருப்படார்- முறையல்லாதவற்றைச் செய்யமனங்கொள்ளமாட்டார்.

(வி-ம்.) நல்ஆறு என்பதுமுன் செய்யுளிற் கூறப்பட்ட மனம், வாக்குக் காயங்களாலாகியகுற்றங்களில்லாத போக்கு - அல்லன - கொலை, பொய், வஞ்சனை முதலியவை.ஒருப்படார் : ஒருமைப்படார் என்பதன் விகாரம்,புலி ஏறு - ஆண் புலி. ஏறு :சிறப்பு மொழி.

(க-து.) நல்லொழுக்கமுடையோர்வறுமை வந்த காலத்தும்தீச்செயல்புரிய நினையார்.(61)

   

62. முதன்மையாக ஓம்பவேண்டியவை

குலம்விற்றுக் கொள்ளும் வெறுக்கையும் வாய்மை
நலம்விற்றுக் கொள்ளுந் திருவும் - தவம்விற்றாங்கு
ஊனோம்பும் வாழ்வும் உரிமைவிற் றுண்பதூஉம்
தானோம்பிக் காத்தல் தலை

(பொ-ள்.) குலம்விற்றுக் கொள்ளும் வெறுக்கையும் - (ஒருவன்) தன்குலத்தை விற்றுத்தேடும்பொருளும், வாய்மை நலம் விற்றுக் கொள்ளும்திருவும் - உண்மை எனும்நற்பொருளை விற்று (அஃதாவது, பொய் புகன்று) பெறும் செல்வமும், தவம்விற்று ஊன் ஓம்பும் வாழ்வும் - (தான் கொண்ட) விரதத்தை விற்றுத் தன் உடலைப்பாதுகாக்கும் வாழ்க்கையும், உரிமைவிற்று உண்பதூஉம்-தன் முன்னோர் வாக்களித்த உரிமைகளை விற்று உண்ணுதலும் (ஆகிய இவை யாவும் தன்னை வந்தடையாமல்), தான் ஓம்பிக் காத்தல் - தான் விழிப்புடன் காத்துக்கொள்வது, தலை-(எல்லா வறங்களுள்ளும்) தலைமையான அறமாகும்.

(வி-ம்) குலம் விற்றல் - பொருள்வேண்டிக் குலத்திற்குரிய ஒழுக்கம் பெருமை முதலியவற்றை விட்டு வேறோர் இழிகுலப் பற்றுடைத்தாதல். வாய்மை நலம்விற்றல்-பொருள் வேண்டிய பொய்ப்புகலல். பொய்ச்சான்று கூறுதல், தவம் விற்றல்-பொருள் வேண்டிக் கூடாவொழுக்கம், தீமை, களவு முதலிய நற்றவத்திற் கேலாதன செய்தல், உரிமை விற்றல் - பொருள் வேண்டிப் பிறனுக் கடிமையாதல்,வெறுக்கை - பொருளுடையார்க்கு எப்போதும்உயிரச்சமேயாதலால் அறிஞர் அதனை வெறுப்பர்எனுங் காரணம் பற்றிப் பொருளுக்கு வெறுக்கை என்பது பெயராயிற்று. ஊன் : காரியமாகிய உடம்பிற்காதலால்- ஆகுபெயர்.தலை : பண்பாகு பெயர். ஆங்கு : அசை.

(க-து.) மிகுந்த பொருள் கிடைக்குமென்றெண்ணி ஒருவன் தன்குலம் வாய்மை தவம் உரிமைஆகியவற்றைக் கைவிடல் தகாது. (62)

   

63. வஞ்சகர் செல்வம்

இடைதெரிந்து அச்சுறுத்து வஞ்சித்து எளியார்
உடைமைகொண்டு ஏமாப்பார் செல்வம்-மடநல்லார்
பொம்மன் முலைபோல் பருத்திடினும் மற்றவர்
நுண்ணிடைபோல் தேய்ந்து விடும்

(பொ-ள்.) இடைதெரிந்து-காலத்தின் வாய்ப்பறிந்து, அச்சுறுத்து-பயமுறுத்தி, வஞ்சித்து-ஏமாற்றி, எளியார்உடமை கொண்டு -எளியவர்களுடைய பொருளைக் கவர்ந்து, ஏமாப்பார்-இறுமாப்புக் கொள்பவர்களுடைய,செல்வம்-செல்வமானது, மடம் நல்லார் பொம்மன்முலைபோற்பருத்திடினும் - பேதைமையுடையபெண்களின் பூரித்த கொங்கைபோல்ஒருக்கால்மிகுந்திட்டாலும், (அவைஅதிவிரை வில்), அவர்நுண்ணிடைபோல்தேய்ந்துவிடும்-அப்பெண்களுடைய சிற்றிடைபோல்குறைந்து போகும்.

(வி-ம்.) பருத்திடினும் என்னும்உம்மைஎதிர்மறையாகலின் பெரும்பாலும் வளர்ச்சியின்மைகொள்ளப்படும். பருக்கப்பருக்க அதனைத்தாங்கும் இடை சிறுத்து வருதல்போல, வஞ்சித்துத் தேடுஞ்செல்வமும் ஒரோவொருகால் மேலேபெருக்க மடைவது போல்தோன்றினாலும்அதற்கு அடிப்படையாயிருக்கும்புண்ணியமாகியதிருவுடைமை தேய்ந்துவருமென்பது உவமையாற்பெறப்பட்டது.சூழ்ச்சியும் அச்சுறுத்தலுங்காரிய நிறைவேற்றத்திற்குரியவையென அவற்றை நலமுடையனவாகக் கொள்ளும்ஒரு சாராரை இச்செய்யுள் உரமாய்மறுத்தமை கண்டுகொள்க. விடும்:துணிவுப்பொருள்தந்தது்.

(க-து.) ஒருவரை வஞ்சித்துத் தேடியபொருள், வளர்வது போல் தோன்றினாலும் அதிவிரைவில் அழிந்துவிடும். (63)

   

64. பெற்றதைவிட்டுப் பெறாததை விரும்பல்

பெற்ற சிறுகப் பெறாத பெரிதுள்ளும்
சிற்றுயிர்க்கு ஆக்கம் அரிதம்மா - முற்றும்
வரவர வாய்மடுத்து வல்விராய் மாய
எரிதழன் மாயா திரா

(பொ-ள்.) வரவரவாய்மடுத்து - கிடைக்கக்கிடைக்கத்தன்வாயினுள் அடக்கி, வல்விராய் முற்றும் மாய - வலிய விறகுகள்முழுதும் எரிந்தழிய, எரிதழல்-எரிகின்றதீயும், மாயாதிரா - அழியாது போவதில்லை, (அழிந்தே போகும்; அது போல), பெற்ற - கிடைத்த பொருள், சிறுக - தமக்குச்சிறியவாகத் தோற்ற, பெறாத - கிடைக்காத பொருளை, பெரிதுள்ளும்- மிகுதியாக விரும்பிக்கருதும், சிற்றுயிர்க்கு - குறுகிய வாழ்நாளையுடைய உயிர்களுக்கு,ஆக்கம் அரிது - பொருள் வளர்ச்சியும்அதனாலான பிற நன்மைகளும் உண்டாதல்அரிதாகும்.

(வி-ம்.) 'போதுமென்ற மனமே பொன்செயுமருந்து' எனும் பழமொழி இங்குநோக்கற்பாலது. பெற்ற,பெறாத :இரண்டும் பெயர்கள். அருமை - ஈண்டு இன்மைப்பொருட்டு. விறகு போடப்போடத்தீயும் அவற்றைப்பற்றிக்கொழுந்துவிட்டெரியும் ; மேல், விறகில்லையேல்எரிந்த விறகில் தங்கிய தீ நிலைத்தலின்றிச் சிறிது நேரத்தில் அவிந்து போகும் ; மேலும் மேலும் விறகுக்கு ஆசைப்படும் தீ, விறகு கிடைக்காவிடில்கிடைத்தவிறகை எரிக்குமட்டிலேனும நிலையாமல் உடனேஅவிந்து போதலும் உண்டு, பேராசையுடையோர் இவ்விரு வகை நிலைக்கு உரியர்.அம்மா : வியப்பு.

(க-து.) பெற்ற பொருள்போதுமென மகிழ்ச்சி கொள்ளாது பேராசைகொண்டு பெரும்பொருள் விரும்புவோர், பெற்றபொருளான பயனையும் இழப்பர்.(64)

   

65. அறத்தாற்றிற் பொருளீட்டல்

தத்தம் நிலைக்குங் குடிமைக்குந் தப்பாமே
ஒத்த கடப்பாட்டில் தாளூன்றி - எய்த்தும்
அறங்கடையிற் செல்லார் பிறன்பொருளும் வெஃகார்
புறங்கடைய தாகும் பொருள்

(பொ-ள்.) தத்தம் நிலைக்கும் குடிமைக்கும்தப்பாமே - தத்தமக்குரிய நிலைமையிலும் குலவொழுக்கத்திலும் வழுவாது, ஒத்த கடப்பாட்டில் தாள்ஊன்றி-இயைந்த முறையில் முயற்சி செய்து, எய்த்தும் அறம் கடையில் செல்லார் - மறந்தும்பாவநெறியில் செல்லாமல், பிறன் பொருளும் வெஃகார் - பிறனுடைய பொருளையும் விரும்பாதவருடைய,புறங்கடையதாகும் பொருள்- தலைவாயிலிடத்தே பொருள் தானே வந்து கைகூடும்.

(வி-ம்.) தகுதியை இழத்தலாகாதென்றற்கு 'நிலைமைக்குங்குடிமைக்குந்தப்பாமே' எனவும், உலகியலோடும்ஒத்து முயல்கவென்றற்கு 'ஒத்த கடப்பாட்டில்'எனவும், முயற்சியில் கருத்தூன்றுக வென்றற்கு 'ஊன்றி'எனவும்,பிறன்பொருள்விரும்பில்தன்பொருளுங்கேடுறுமாதலின்'பிறன்பொருளும்விரும்பில்தன்பொருளுங் கேடுறுமாதலின் 'பிறன் பொருளும் வெஃகார் எனவும் கூறினார். இவ்வாறுகுலவொழுக்கங் குன்றாமலும், பிறன் பொருள்மேல் ஆசை வையாமலும்,தம்முயற்சியால்பொருள்தேடுவார்க்கு அவர்அறநெறி கண்டு அகமகிழ்ச்சி கொள்ளும் அறக்கடவுள்,அன்னார் புறங்கடையில் எளிதிற்பொருள்குவிப்பார்என நன்னெறியினின்று முயற்சியால்பொருளீட்டும் பெருமை ஆசிரியர் புகழ்ந்தனர். செல்லார், வெஃகார்;வினையாலணையும் பெயர்கள்; இவற்றில்எதிர்மறை ஆகார இடைநிலை புணர்ந்து கெட்டது. நிலையாவது, தம்மிடத்தே நிறறலுடையனவாகிய பொருள், வலி, ஆண்மை துணை முதலாயின. தாம் தாம் என்பது வேற்றுமைப்பொருளில் தத்தம் என்றாயிற்று.

(க-து.) தீய வழிகளிலல்லாது தமது நிலைமைக்கும் குடிமைக்கும் பொருந்திய நல்வழியிற்பொருள் தேடுவார்க்குப் பொருள் எளிதிற்கூடும். (65)

   

66. செல்வத்தின் வகை

பொதுமகளே போல்வ தலையாயார் செல்வம்
குறமகளே ஏனையோர் செல்வம்-கலனழிந்த
கைம்மையார் பெண்மை நலம்போற் கடையாயாா
செல்வம் பயன்படுவ தில்

(பொ-ள்.) தலையாயார்-தலையாயாருடைய,செல்வம்- பொருள், பொதுமகளே போல்வ-பொது மகளிரைப்போல எல்லார்க்கும் பயன்படும். ஏனையோர்-இடையாயினாரது, செல்வம்-பொருள்,குலமகளேபோலத்தன்னையுடையோர்க்கே பயன்படும், கடையாயார்- கடையா யினோரது. செல்வம் - பொருள், கலனழிந்த கைம்மையார் பெண்மை நலம்போல்- மங்கள நாணிழந்த கைம்பெண்களின் நலம்போல, பயன்படுவது இல்-யார்க்கும்பயன்படுவதில்லை.

(வி-ம்.) தலைமக்கள்தம்மிடமுள்ளபொருளைத்தாம் நுகர்வதுபோற்பிறரும் நுகருமாறுசெய்ப: இடைப்பட்டோர்தம பொருளைத் தாமே நுகர விரும்புவர்;கீழ்மக்கள்பொருள்அவர்க்கும்பயன் படாதாய்ஒழியும். இதனாற்பலர்க்கும்பயன்படும்செல்வமே தலைமக்கள்செல்வமெனகருதப்படுமென்க, போலும் என்றும்பாடமுண்டு.

(க-து.) செல்வர், பலர்க்கும்உதவியாயிருத தற்குரியர். (66)

   

67. ஈயாதார் செல்வம்

வள்ளன்மை யில்லாதான் செல்வத்தின் மற்றையோன்
நல்குரவே போலும் நனிநல்ல - கொன்னே
அருளிலன் அன்பிலன் கண்ணறையன் என்று
பலரால் இகழப் படான்

(பொ-ள்.) வள்ளன்மைஇல்லாதான்- ஈயும் குணமில்லாதானது,செல்வத்தின்-செல்வத்தைவிட, மற்றையோன்- ஈயுங் குணமுடையவனுடைய, நல்குரவே-வறுமையே, நனிநல்ல-மிகவும் நல்லன ; (ஏனெனில், அவ்வறியன்உயிர்களிடம்) அருள் இலன்(என்று) - கருணையில்லாதவன் என்றாதல், அன்பிலன் (என்று) - அன்பில் லாதவன்என்றாதல், கண்ணறையன் என்று - கண்ணோட்ட மில்லாதவன்என்றாதல், பலரால்-பலராலும, கொன்னே - வீணில், இகழப்படான்- பழிக்கப்படமாட்டான்.

(வி-ம்.) 'ஈயாதசெல்வர் இருந்தென்ன போயென்ன'எனும் இழிவுமொழி இங்கு நோக்கற்பாலது. போலும்: அசை -கண் அறையண்- கண்ணோட்டம் அற்றவன்.கொடையில்லாதவன். இகழப்படுவான் என்பதனாற் கொடையாளி புகழப்படுவான்எனஉய்த்துணர வைப்பது மாறுபடு புகழ்நிலையணி.

(க-து.) ஈயாத செல்வர்உலகினராற்பழிக்கப்படுவர். (67)

   

68. இன்சொல்

ஈகை யரிதெனினும் இன்சொலினும் நல்கூர்தல்
ஓஓ கொடி கொடிதம்மா - நாகொன்று
தீவினைக் கம்மியனால் வாய்ப்பூட் டிடப்படின்மற்
றாவா இவரென்செய் வார்

(பொ-ள்.) ஈகைஅரிது எனினும்- தாம்ஒருவர்க்குக் கொடுத்தல்முடியாதெனினும், இன்சொலினும்-இனியமொழிகளைக் கூறுதலினும், நல்கூர்தல்- வறுமையடைதல், ஓஓ கொடிது கொடிது - ஐயோமிகவுங்கொடுமை, தீநாகொன்று - பேசமுடியாதபடி நாவைச் சிதைத்து, வாய்ப்பூட்டு வினைக்கம்மியனால் - பாவமாகிய கம்மாளனால், இடப்படின் - வாய்ப்பூட்டும்போடப்பட்டால், இவர் - இவர்கள், ஆஆ - ஐயோ , என்செய்வார்-யாது செய்வார்கள்?

(வி-ம்) இதுமுதல் மூன்றுசெய்யுள்கள்வாக்கினாலான பயனை விளக்கும்.ஓஓ ஆஆ, அம்ம: இவை இரக்கப்பொருளன. தீவினை கம்மியனாக உருவகிக்கப்பட்டது.கம்-தொழில். கொடிது கொடிது : அடுக்கு மிகுதிமேலது. பாவம்வந்து வாயைப்பூட்டிவிட்டது: அதனால்அவர்வாய்திறந்து இனிய சொற்கூறுவதும்அரிதாயிற்று. எனப் புகழ்வதுபோல இகழ்ந்தனர்எனக்கொள்க.

(க-து.) ஒருவர்க்கு ஒன்று ஈயத்திறனில்லாது போயினும், இன்சொல்லேனுஞ் சொல்லாதொழியின் அது பெருந்தீவினையாய் முடியும்.   (68)

   

69. சொல்வன்மைப் பயன்

சொல்வன்மை உண்டெனிற்கொன்னே விடுத்தொழிதல்
நல்வினை கோறலின்வேறல்ல - வல்லைத்தம்
ஆக்கங்கெடுவ துளதெனினும்அஞ்சுபவோ
வாக்கின்பயன்கொள் பவர்

(பொ-ள்.) சொல்வன்மை உண்டெனின் - தன் சொல்லைக் கேட்கும் ஒருவன்அதன்படி நடப்பான் என்னும் தன்சொல்லின் திறனறிந்திருந்தால், கொன்னே விடுத்து ஒழிதல்- அவ்வாறான சொற்றிறனைப் பயன் படுத்தாது வீணாகக்கைவிட்டுவிடுதல், நல்வினை - நற்காரியங்களுக்கு, கோறலின்வேறல்ல - கேடு செய்தலினும் வேறாகா, வாக்கின் பயன் கொள்பவர் - சொல்வன்மையாற் பெறப்படும் பயனையறிந்தோர், வல்லை - விரைவில், தம் ஆக்கம் கெடுவதுஉளது எனினும்- தமது பொருளெல்லாம்கெட்டொழியுமாயினும்,அஞ்சுபவோ - அதற்காக அஞ்சுவரோ? (அஞ்சார்).

(வி-ம்.) சொல்வன்மையாவது - பிறர்க்குந் தமக்கும் பயன்படும் வகையிலும் பிறர்மதிப்பளிக்கும்நிலையிலும்பேசும்ஆற்றல், தம் சொல்லாற் பயனுண்டென்றுதம்மை நாடித் தம் சொல்லுக்குக் குறையிரக்கும் தம்மின் எளியார்க்குஅன்னார்நலங்கருதித் தம் சொல்வன்மையைப்பயன்படுத்தா தொழியினும் நல்வினை கோறலாய் முடியும். சொல்வன்மையுடைய ஒருவரிடம் ஓர் எளியன் போய், "நீவிர் ஒரு சொல் சொன்னால் பிறர் எனக்கு வேண்டும் உதவிசெய்வர்" எனக்கூறி அவன்குறையிரக்கும்போது சொல்வன்மை யுடையான் அது செய்ய மறுப்பானாகில் அவன் தீவினையுறுதலும் உண்டென்க. "அறம் பெரிதறைதல், வாய்மை, கல்வி, தீமையில்திறம்பல். இன்மொழி இசைத்தல், வன்மொழிமறுத்தல்"* இவை வாக்கின் பயன்.

(க-து.) சொல்வன்மையாற்பெறப்படும் பயனை யறிந்தோர் அப்பயனடைவான்வேண்டிச் சொல்வன்மை யாற்செய்யக்கூடிய நன்மைகளை விரைவிற்செய்து நலம்பெறுவர். (69)

   

70. சிறுமுயற்சிப் பெரும்பயன்

சிறுமுயற்சி செய்தாங் குறுபயன் கொள்ளப்
பெறுமெனில் தாழ்வரோ தாழார் - அறனல்ல
எண்மைய வாயினுங் கைவிட் டரிதெனினும்
ஒண்மையில் தீர்ந்தொழுக லார்

(பொ-ள்.) எண்மையவாயினும்அறன் அல்ல கைவிட்டு - செய்தற்குஎளியனவாயிருப்பினும் அறநெறிக்கொவ்வாத தீச்செயல்களைச் செய்யாதொழிந்து, அரிதெனினும் - செய்தற்குஅரியதாயிருந்த போதிலும், ஒண்மையின்தீர்ந்து ஒழுகலார் - அறிநெறியினின்றும் விலகியொழுகாது செய்து அதன்பயன்அடையும்அறிஞர்,சிறுமுயற்சி செய்து - சிறிய முயற்சிசெய்து,உறுபயன் - அம்முயற்சியால்மிகுந்தபயனை, கொள்ளப்பெறும்எனில் - அடையக் கூடுமானால் தாழ்வரோ - அம்முயற்சியைச்செய்யப்பின்வாங்குவரோ?,தாழார் - பின்வாங்கார்.

(வி-ம்.) சிறுமுயற்சி - சொல்வன்மையால்உண்டாகும் பயன் போன்றவை, அம்முயற்சி எளிதாதலால் சிறு முயற்சி என்றும், மனம்நல்வழிச்சென்று செய்யும் அறச்செய்கை யார்க்கும்அரிதாகையால் அதனை அரிதென்றுங்கூறினார். ஒண்மை - நன்மை."அழகும்நன்றும் அறிவும்ஒண்மை" என்பது பிங்கலம். எண்மையவாயினும் என்-பதற்கு: எளிதாகச் செய்துபெரும்பயன்பெறத்தக்கனவாய் வாய்க்குமாயினும்என்றுரைத்தலுமுண்டு. இச்செய்யுட் பொருளோடு "பெருமை யுடையவராற்றுவாராற்றி,னருமையுடைய செயல்" " செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர், செயற்கரிய செயகலா தார்" என்னுந் திருக்குறள்ஒப்பு நோக்குதற்குரியன.       

(க-து.) செய்தற்கரியஅருஞ்செயல் செய்து பெரும்பயன்பெறும்அறிஞர்சிறுமுயற்சியாற்பெரும்பயனடைய வழியிருப்புழி அம்முயற்சியைவிரைந்து செய்து நலமுறப்பின்வாங்கார்.                (70)