71-80
|
|
செயக்கடவ அல்லனவுஞ் செய்துமன் னென்பார் நயத்தகு நாகரிகம் என்னாம் - செயிர்த்துரைப்பின் நெஞ்சுநோம் என்று தலைதுமிப்பான் தண்ணளிபோல் எஞ்சா தெடுத்துரைக்கற் பாற்று |
|
(பொ-ள்.) செயக்கடவஅல்லனவும்செய்தும்மன்-செய்தற்கரிய செயல்களையும் மிகுதியுஞ்செய்து முடிப்போம்என்பார் - (என்று செயலிற்காட்டாது) சொல்லளவிற்சொல்லிநிற்பாரின், நயத்தகு நாகரிகம்என்ஆம்-முகமனான கண்ணோட்டம்என்ன பயனைத் தரும்? (இச்செய்கை) செயிர்த்துரைப்பின் - ஒருவரைக்கோபித்துச்சொன்னால், நெஞ்சுநேரம்என்று - அவர்க்கு மன வருத்தம்உண்டாகுமென்று, தலை துமிப்பான் தண்ணளிபோல்- அவர்தலையை வெட்டும் கருணைத் திறனை ஒக்குமென்று, எஞ்சாது எடுத்துரைக்கற்பாற்று - அது கூசாமற்கூறுந்தன்மையதாகும். (வி-ம்.) நாகரிக மென்றது, ஈண்டுக்கண்ணோட்டம், தன்னாலாகாவிடத்துத் தன்னை வந்தடுத்தோன்பிறனிடம்சென்றேனும்பயன் பெறட்டும்என்று விடாது. தானே அருஞ்செயல்களைச்செய்து விடுவதாய்ச் சொல்லி, அவன் பிறனொருவனிடம்அடையும் பயனையும் அடையவிடாது கெடுத்தலால், 'நெஞ்சு நோமென்று தலைதுமிப்பான்தண்ணளிபோல்' என்றார். மன்:மிகுதிமேற்று, தண்ணளி: அதன் எதிர்மறையையுணர்த்த வந்த குறிப்புமொழி. (க-து.) தன்னை வந்தடுத்துத்தன்உதவி விரும்புவானிடம், தான் செய்தற்கரிய காரியங்களையும்செய்து முடிக்க முடியுமென்று சொல்லளவிற்சொல்லிச்செயலில்அவ்வாறுசெய்யாதொழிவது நாகரிகமாகாது. (71) |
|
|
|
|
|
அல்லன செய்யினும் ஆகுலங் கூழாக்கொண் டொல்லாதார் வாய்விட் டுலம்புப - வல்லார் பிறர்பிறர் செய்பபோற் செய்தக்க செய்தாங் கறிமடம் பூண்டுநிற் பாரஞ் |
|
(பொ-ள்.) ஒல்லாதார்- வன்மையில்லாதவர், அல்லன செய்யினும் - பிறர்க்குப் பயன்படக்கூடிய செயல்கள்) அல்லாதவற்றைச் செய்தாலும், (தாம் பயன்படக்கூடிய செயல்களைச் செய்துவிட்டதுபோல்)ஆகுலம் கூழ் ஆ கொண்டு - ஆரவாரத்தையே பயனாகக் கொண்டு, வாய்விட்டு உலம்புப - பலரறியத் தஞ்செயல்களைக் கூறி முழங்குவர்; வல்லார் - வல்லமையுடையோர் - பிறர் பிறர் செய்பபோல் செய்தக்க செய்து - தக்கார் பிறராற் செய்யப் படுவனபோலப் பயன்படுஞ்செயல்கள் செய்து, ஆங்கு - அவ்விடத்தில்; அறிமடம் - (தாம் செய்த பயன்படுஞ் செயல்களைத் தாம் நன்குணர்ந்தும் உணராததுபோல்) அறியாமையை, பூண்டு நிற்பார் - மேற்கொண்டு அடக்கமாயிருப்பர். (வி-ம்.) மனம், வாக்கு, காயங்களில் அடக்கமிலார் செய்யுங் காரியங்கள் மற்றவர்களுக்குப் பயன்படா வாகையால் 'அல்லன செய்யினும்' என்றார். அடுக்கு, பன்மைக்கண் வந்தது. (க-து.) அருஞ்செயல்கள் செய்ய இயலாதவரே அடக்க மிலாது ஆரவாரமுடையராயிருப்பர். (72) |
|
|
|
|
|
பகையின்று பல்லார் பழியெடுத் தோதி நகையொன்றே நன்பயனாக் கொள்வான் - பயமின்று மெய்விதிர்ப்புக் காண்பான் கொடிறுடைத்துக் கொல் கைவிதிர்த் தஞ்சப்படும் |
|
(பொ-ள்.) பகையின்று- ஒரு பகையுமில்லாமல், பல்லாா பழியெடுத்தோதி - பலரிடத்திலுமுள்ள வசைகளை எடுத்துச் சொல்லி, நகை யொன்றே-இகழ்தலாகியதீவினை ஒன்றையே, நன்பயனாக் கொள்வான்-நற்பயன் என்று கொண்டு திரியும்மூடன், பயமின்று - வேறொரு பயனுமின்றி, மெய்விதிர்ப்புக்காண்பான் - உடலிலேற்படும் நடுக்கமாகிய பயனொன்றையே காணக்கருதி, கொடிறு உடைத்துக் கொல்வான்போல் - பிறருடைய கன்னத்தை உடைத்து வருத்து மியல்புடையானைப்போல்,கைவிதிர்த்து அஞ்சப்படும் - (பிறராற்) கை நடுக்கத்துடன் அஞ்சப்படுவான். (வி-ம்.) இன்று - ஈண்டுஇன்றி என்னும்எதிர்மறைக் குறிப்பு வினையெச்சத்திரிபு, கொள்வான், கொல்வான்இரண்டும் வினையாலணையும் பெயர்கள். கொடிறுடைத்துக்கொலை செய்வான் எய்துந்தீவினைப்பயனை இவனும்எய்துவன்என்பது. (க.து.) பிறர்வசைகூறுதலையே தம்தொழிலாகக் கொண்டவரை யாவரும்அஞ்சி விலகுவர் (73) |
|
|
|
|
|
தெய்வ முளதென்பார் தீய செயப்புகின் தெய்வமே கண்ணின்று நின்றொறுக்கும் - தெய்வம் இலதென்பார்க் கில்லைத்தம் இன்புதல்வர்க் கன்றே பலகாலும் சொல்வார் பயன் |
|
(பொ-ள்.) தெய்வம்உளதுஎன்பார் - தெய்வம் உண்டு என்று சொல்வோர்,தீய செயப்புகின் - தீய காரியங்களைச் செய்யத் தலைப்பட்டால், தெய்வமே கண்இன்று நின்று ஒறுக்கும்- அவர்கள் நம்பும் அத்தெய்வமேகண்ணோட்டமின்றி அவர்முன் நின்று அத்தீய காரியங்களுக்காக அவர்களைத் தண்டிக்கும், தெய்வம் இலது என்பார்க்குஇல்லை - தெய்வம் இல்லை என்று சொல்வோர்க்கு அத்தெய்வம் அவ்வாறு தோன்றுவதுமில்லை, அவர்களைத் தண்டித்தலுமில்லை;(இஃது எதுபோலெனில்)தம் இன்புதல்வர்க்கு அன்றே -(பெற்றோர்) தம் அன்பார்ந்த புதல்வர்க்கன்றோ,பலகாலும் (அவர்கள்நன்னெறி தப்பிச்)செல்லுந்தோறும், பயன் சொல்வார் - பயன்தருஞ் சொற்களை (நீதிகளை)ச் சொல்வார்கள்? (அதுபோல வென்க). (வி-ம்.) பெற்றோர் தம்அன்பானபுதல்வர்க்கு மட்டும்அடுத்தடுத்து அறநெறிகற்பிப்பாரன்றி அன்பிலாப்புதல்வர்க்கு அவ்வாறு கற்பியாரானமை போல் இறைவனும் தன்னைநம்பினவர்க்கு அவரை ஒறுத்தேனும்நன்னெறி காட்டுவனன்றி நம்பாதார்க்கு அவ்வாறு செய்வதில்லை என்க. தெய்வம் சொல்லாலஃறிணையாதலின் அதற்கேற்ற முடிபு கொடுத்தார். 'தம் இன்புதல்வர்க்கன்றேபலகாலும்சொல்வார் பயன்' என்னும்ஈற்றடியால்முன்னடிகளில்தொடங்கிய கருத்தை முடித்தலால்,இது வேற்றுப் பொருள்வைப்பணி. ஒறுக்கும் : வினைமுற்று : ஒறு : பகுதி. (க-து.) இறைவனுண்டென்று நம்பினவர்களை அவ்விறைவன்ஒறுத்தேனுந் தீ நெறியினின்றுந் தடுப்பன். (74) |
|
|
|
|
|
தீய செயற்செய்வார் ஆக்கம் பெருகினும் தீயன தீயனவே வேறல்ல - தீயன நல்லன ஆகாவாம் நாவின் புறநக்கிக் கொல்லுங் கவயமாப் போல் |
|
(பொ-ள்.) தீயசெயல்செய்வார்ஆக்கம்பெருகினும்- தீய காரியங்களைச்செய்வோரின்பொருள்ஒருகால்பெருகி வளர்ந்தாலும், தீயன - தீயகாரியங்களால் திரட்டியஅப்பொருள் எல்லாம், நா இன்புறநக்கிக்கொல்லும்கவயமா போல் - நாவினால்இன்பமுற நக்கிப்பின்னால்கொல்லுகின்ற காட்டுப்பசுவைப்போல். தீயனவே வேறல்ல - தீமைபயப்பனவேயன்றி வேறாகா. (ஏனெனில்) தீயன - தீயகாரியங்களால், நல்லன ஆகா - (என்றும்)நற்காரியங்களாக மாட்டா. (வி-ம்.) காட்டுப்பசு தான்கொல்லவிரும்பும்ஓர்உயிரை நாவினால்இன்பந்தோன்றநக்கிக்கொண்டேயிருந்து, அவ்வின்பத்திலீடுபட்டு அவ்வுயிா தன்னிலையில்அசையாமல்நிற்கையில்அதுதிடீரெனப்பாய்ந்து அதன்உயிரை வாங்கும். அதுபோல்தீநெறியில் திரட்டிய பொருள்முதலில்இன்பந்தருவதாய்த்தோன்றினும், இறுதியில் தீமையைப்பயக்கும்என்றார். இது கருதியே "தீயனதீயனவே வேறல்ல" என்றும், " தீயனநல்லன வாகா" என்றுங் கூறினார்.கவயமா - காட்டுப்பசு.தீத்தான்பற்றிய பொருளை முற்றும்எரித்தல்போலத் தீய வழியாலீட்டப்பட்ட பொருளும் தற்சேர்ந்தாரை முற்றும் அழித்தலால்தீயன எனப்படும். " இலனென்று தீயவைசெய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து" என்னுந்திருக்குறள் இங்கே கருதுதற்குரியது.(க-து.) தீயகாரியங்களில் திரட்டிய பொருள் தீமையையேசெய்யும். (75) |
|
|
|
|
|
நன்மக்கள் செந்நாத் தழும்பிருக்க நாள்வாயும் செந்நெறிச் செல்வாரின் கீழல்லர் - முன்னைத்தம் ஊழ்வலி உன்னிப் பழிநாணி உள்ளுடைவார் தீய செயினுஞ் சில |
|
(பொ-ள்.) தம்முன்னை ஊழ்வலி யுன்னி - முற்பிறப்பிற் செய்த தமது பழைய ஊழின் வலிமையைநினைந்து, பழி நாணி உள் உடைவார்- (வருகின்ற) பழிச் சொற்களுக்குவெட்கி மனம் வருந்துவோர், சில தீய செயினும்- (ஒரு காலத்தில் அறிவுமயங்கியேனும்பிற காரணங்களாலேனும்) சில தீயகாரியங்களைச் செய்தாராயினும்,(அவர்கள்) நன்மக்கள்- மேன்மக்கள்- செந்நா தழும்பு இருக்க -செவ்விய நாவினை (இடைவிடாமல் தம் நன்மையை எடுத்துரைத்தலால்)தழும்பேறிருக்கும்படி, நாள்வாயும் செந்நெறி செல்வாரின் -நாள்தோறும் நல்லொழுக்க வழிகளிலே செல்லும் மேலோரினும், கீழ் அல்லர்- கீழாகார். (வி-ம்.) தாம் அறியாமல் ஊழ்வினையால்மதிமயங்கித் தீய காரியங்கள் செய்ய நேர்ந்து அதனால் வரும் பழிக்கு நாணி மனம் வருந்துவோர், மேலும்மேலுந் தீய காரியங்களைச் செய்யாராதலின் அதனால் அவர் பெருமை குன்றுதலிலர். நாள்வாயும் : 'வாயும் ஏழாம் வேற்றுமைக்கண் வந்து நாடோறுமென்னும் பொருடந்து நின்றது. கீழ் : பண்பாகு பெயர்; கீழோரை உணர்த்திற்று. உன்: இடவாகு பெயர்; மனத்தைஉணர்த்திற்று. நல்லோர் இடைவிடாது புகழ என்பார், ‘நன்மக்கள் செந்நாத் தழும்பிருக்க’ என்றார். “பிறர்பழியுந் தம்பழியு நாணுவார் நாணுக்கு, உறைபதி யென்னு முலகு" என்பது திருக்குறள். செந்நா - உண்மையாகிய செம்மையயுடைய நா. (க-து.) மேன்மக்கள் ஒரோவொருகால்ஊழ்வலியால் நல்லொழுக்கத்தினின்றுதவறினும், அவர்கள் உள்ளுடைந்து வருந்துதலின் நன்மக்களேயாவர். (76) |
|
|
|
|
|
பிறன்வரை நின்றாள் கடைத்தலைச் சேறல் அறன் அன்றே ஆயினுமாக - சிறுவரையும் நன்னலத்த தாயிணுங் கொள்க நலமன்றே மெய்ந்நடுங்க வுண்ணடுங்கு நோய் |
|
(பொ-ள்.) பிறன்வரைநின்றாள் - பிறன் வரம்பில் நிற்பவள் (அஃதாவது பிறன் மனைவி),கடைத் தலைச் சேறல் - தலைவாயிலினிடத்துச் செல்லல், அறன் அன்று - நற்செயலாகாது, ஆயினும் ஆக (அவ்வாறுஅறனாகாது) ஆயினுமாகுக. சிறுவரையும் - (அச்செயலில்) நொடிப்பொழுதாயினும், நல் நலத்தது ஆயின்- தூய இன்பமுடையதாயின், கொள்க - அதனைக் கைக்கொள்க ; நலம் அன்றே - (அச்செயலால் வருவது) இன்பமன்றே ;(ஆனால்வருவதென்னை யெனின்), மெய்நடுங்க - உடல் நடுங்க, உள் நடுங்கும்நோய் - மனமும் நடுங்குவதற்குக் காரணமாகிய வருத்தமேயாகும். (வி-ம்.) பிறன்மனை புகுவான் புகுங்கால் மெய்ந்நடுங்கி உள்ளொடுங்கிச் செல்வானாதலால் "மெய்ந்நடுங்க உண்ணடுங்க நோய்" என்றார்."புக்கவிடத் தச்சம் போதரும்போ தச்சம்,துய்க்குமிடத் தச்சம் தோன்றாமற் காப்பச்சம்,"*"காணிற் குடிப்பழியாம்கையுறிற் கால்குறையும்."+'பகைபாவம் அச்சம் பழியென நான்கும், இகவாவாம் இல்லிறப்பான் கண்" + என்பன இங்குநினைவு கூரற்பாலன. (க-து.) பிறன்மனையாளை விரும்பல் அறனன்று ; இன்பமுமன்று ; துன்பமே விளைவிக்கும். (77) ______________________________________ * நாலடியார்.83,84 திருக்குறள் 15 : 6 |
|
|
|
|
|
கருமஞ் சிதையாமே கல்வி கெடாமே தருமமுந் தாழ்வு படாமே - பெரிதுந்தம் இன்னலமுங் குன்றாமே ஏரிளங் கொம்பன்னார் நன்னலந் துய்த்தல் நலம் |
|
(பொ-ள்.) கருமம் சிதையாமே - தாம் செய்ய வேண்டியகாரியங்கள் தவறிப்போகாமலும், கல்வி கெடாமே - பின்னுங் கற்றுக் கொள்ளவேண்டிய கல்வி கெட்டுப்போகாமலும்,தருமமும் தாழ்வு படாமே- செய்ய வேண்டிய அறச்செயல்களுக்குக் குறைவு வராமலும், பெரிதும் - மிகுதியாக, தம் இன்நலமுங் குன்றாமே - நம் இல்லற நன்மையுங்குறைவுபடாமலும், எர் இள கொம்பு அன்னார்-அழகிய இளங்கொம்பினை யொத்த மனைவியரின், நல் நலம் துய்த்தல்- நல்லின்பத்தை நுகர்தல், நலம்- யாவர்க்கும் நன்றாம். (வி-ம்.) கருமமாவது, பொருள் முயற்சி முதலியன ; கல்வி - அறிஞர்எழுதிய அறிவுரைகள்கற்றலுங் கற்பித்தலும். தருமம்-தத்தம் நிலைக்குரிய வகையில் ஒழுகல். இல் நலம்- இல்லற வாழ்க்கைக்குரிய அறவோர்க்களித்தலும் அந்தணரோம்பலும்,துறவோர்க் கெதிர்தலும், தொல்லோர்சிறப்பின் விருந்தெதிர் கோடலும் முதலியநற்செய்கைகள். முன் செய்யுளில் பிறனில்விழைவதாலேற்படும் துன்பங்களை விளக்கிப் போந்த ஆசிரியர், இச்செய்யுளில் தன் இல்லாளோடு ஒருவன் இன்ப நுகருங்கால் கவனிக்க வேண்டிய முறைகளை விளக்கினார். (க-து.) கடமைகட்குக் குறைவு நேராத முறையில் மனைவியோடுகூடி இன்பம் நுகர்தல் வேண்டும். (78) |
|
|
|
|
|
கொலையஞ்சார் பொய்ந்நாணார் மானமும் ஓம்பார் களவொன்றோ ஏனையவுஞ் செய்வார் - பழியோடு பாவமிஃ தென்னார் பிறிதுமற் றென்செய்யார் காமங் கதுவப்பட் டார் |
|
(பொ-ள்.) காமம் கதுவப்பட்டார் - காமத்தால் பற்றப்பட்டவர்கள், கொலை அஞ்சார் - கொலைபுரியப் பயப்படார்,பொய் நாணார் - பொய் சொல்லக் கூசார்,மானமும் ஓம்பார்- தம் பெருமையையும் பாதுகாவார், களவு ஒன்றோ - களவு செய்தலொன்றோ ! (அதற்கு மேலும்) ஏனையவும் செய்வார், மற்றுமுள்ள பலவகையான தீச்செயல்களும் செய்வார், இஃது - இக்காமம், பழியொடு பாவம் என்னார்- பழியொடு பாவமாம் என்றும் நினையார், (அங்ஙனமாயின் அவர்) பிறிது என்செய்யார் - வேறு யாதுதான் செய்யமாட்டார்?எல்லாத் தீச்செய்கைகளுஞ்செய்வார். (வி-ம்.) 'காமங் கதுவப் பட்டார்' காமம்என்பதற்கு அடிமையாயினார் என்பது பொருள். மற்று : அசைச்சொல். பொய்ந் நாணார் என்பது தனிக்குறிலையடுத்து நின்ற யகர வீற்றின்முன் நகரம் மிகுந்தது. 'குறில்வழியத்தனி ஐந்தொது முன்மெலி மிகலுமாம்' என்பது விதி, (நன். சூ.158) (க-து.) காமச்சிந்தையுடையோர் எல்லாத் தீச்செயல்களுஞ் செய்வர். (79) |
|
|
|
|
|
திருவினு நல்லாள் மனைக்கிழத்தி யேனும் பிறர்மனைக்கே பீடழிந்து நிற்பார் - நறுவிய வாயின வேனும் உமிழ்ந்து கடுத்தின்னும் தீய விலங்கிற் சிலர் |
|
(பொ-ள்.) நறுவிய- இனிய பொருள்கள், வாயின ஏனும் - (தமது) வாயிலகப்பட்டுள்ளனவாயினும், உமிழ்ந்து - (அவற்றைத்) துப்பிவிட்டு, கடு தின்னும் - கைப்புள்ள பொருள்களைத் தின்னும்,தீய விலங்கின்- கொடிய விலங்குபோல், சிலர்- தீயோர்சிலர், மனைக் கிழத்தி - தம் மனைவி,திருவினும் நல்லாள் ஏனும் -திருமகளினுஞ் சிறந்த அழகுடையவளாயிருப்பினும் அவளை விடுத்து, பிறன் மனைக்கே - பிறர் மனைவியரின் தொடர்புக்கே, பீடுஅழிந்து நிற்பர் - தம்முடைய பெருமை கெட்டு நிற்பர். (வி-ம்.) சில விலங்குகளென்றது, ஒட்டகம் முதலியவை. இவை உண்ணுதற்குஇனிய பொருள்கள்.பல இருக்கினும் அவற்றை விடுத்து வேப்பிலை போன்ற கசப்புடையபொருள்களையே விரும்பும். அவ்வாறே மனிதருள்ளும் உரிமையின்ப முடைய மனைவி இருக்கையில் அவளை விரும்பாது அவ்வுரிமையின்பமில்லா அயலான் மனைவியை விரும்புவோரும் சிலர் உளர். நறுவிய : 'நறுமை' என்னும் பண்படியாகப் பிறந்த பலவின்பால் படர்க்கைப்பெயர்; வாயின: குறிப்பு வினை முற்று. கடு - கைப்பு; பொருள்மேல் நிற்றலால் ஆகு பெயர். விலங்கின்- இன்;ஐந்தாம் வேற்றுமை ஒப்புப்பொருள். "ஆத்தமனையா ளகத்தி லிருக்கவே, காத்த மனையாளைக் காமுறுங் காளையர், காய்த்த பலாவின்கனியுண்ண மாட்டாமல்,ஈச்சம் பழத்துக்கிடருற்றவாறே" என்பது திருமந்திரம். (க-து.) திருமகள்போலும்அழகுடைய தம் மனைவியை நீங்கிப் பிறன் மனைவிமேல்ஆவல் கொள்ளும் பேதையர், இனிய பொருள் தம் வாயிலிருந்துந் தின்னாது உமிழ்ந்து கைப்புள்ளபொருளைத் தின்னும் விலங்குகளுக்குஒப்பாவர். (80) |
|
|
|
|
|