81-90
|
|
கற்புடுத் தன்பு முடித்து நாண் மெய்ப்பூசி நற்குண நற்செய்கை பூண்டாட்கு - மக்கட்பே றென்பதோ ராக்கமும் உண்டாயின் இல்லன்றே கொண்டாற்குச் செய்தவம் வேறு |
|
(பொ-ள்.) கற்பு உடுத்து- கற்பாகிய ஆடையை உடுத்து, அன்பு முடித்து - அன்பாகிய மலர் சூடி, மெய்- உடம்பில், நாண்பூசி - நாணமாகிய கலவைச் சாந்து பூசி, நற்குணம்நற்செய்கை பூண்டாள் கு - நற்குணம், நற் செய்கைகளாகியஅணிகலன்களை அணிந்தமனையாளுக்கு,மக்கள்பேறு என்பதோர் செல்வமும்உண்டாயின்- புதல்வரைப் பெறுதலானஒப்பற்ற ஆக்கமும் உளதானால், கொண்டான் கு- (அவளை மனைவியாகக்) கொண்டவனுக்கு, செய்தவம்- (அவன்) செய்ய வேண்டியதவம், வேறு இல்- வேறு இல்லை. (வி-ம்.) கற்பு ; அன்பு, நாணம்,நற்குண, நற்செய்கையே ஆடை, மலர், கலவை,அணிகலன் எனக் கொள்ளப்பட்டன ; அதற்கேற்ப உடுத்து, முடித்து,பூசி, பூண்டாள்என வினைகள் தந்தார். எனவே, இஃது உருவகவணி. பேறு : பெறு என்றமுதனிலை திரிந்த தொழிற்பெயர், கற்பு - கணவனுக்குப் பொய்யாமல் ஒழுகும் நல்லொழுக்கம். அன்பு - சுற்றத்தார் முதலியோரிடங் கொள்ளும்பரிவு. நாணம் - செய்யத்தகாதவற்றில் உள்ளத்திற்கு உண்டாவதோர் ஒடுக்கம்.பூண்டாள் : வினையாலணையும் பெயர். (க-து.) கற்பு, அன்பு, நாணம்,நற்குண நற்செய்கை மக்கட்பேறு முதலியமேன்மைகளையுடைய மனையாளொடு வாழும் வாழ்க்கையே தவ வாழ்க்கையைஒக்கும். (81) |
|
|
|
|
|
ஏந்தெழில் மிக்கான் இளையான் இசைவல்லான் காந்தையர் கண்கவர் நோக்கத்தான் - வாய்ந்த நயனுடை இன்சொல்லான் கேளெனினு மாதர்க் கயலார்மேல் ஆகும் மனம் |
|
(பொ-ள்) கேள்- (தன்) கணவன், ஏத்துஎழில் மிக்கான்- சிறந்த அழகுமிகுந்தவனும், இளையான் - இளமைப் பருவமுடையவனும், இளையான் - இளமைப் பருவமுடையவனும், இசைவல்லான்-இசைபாடுதலில் வன்மையுடையவனும், காந்தையர் கண்கவர் நோக்கத்தான்- பெண்களின் கண்களைக் கவரும் பார்வையுடையவனும், வாய்ந்த - பொருத்தமான, நயன் உடை இன்சொல்லான் - மேன்மையான இனிய சொற்களையுடையவனும், எனினும் - ஆயினும், மாதர்க்கு-(கற்பிலாத) மாதருக்கு, மனம் அயலார்மேல்ஆகும் - வேற்று மனிதர்மேல்மனஞ்செல்லும். (வி-ம்.) எண்பதாவது செய்யுளில்ஆசிரியர் காமங் கதுவப்பட்டார் தம் மனைவியர் எவ்வளவு அழகுடையவராயிருப்பினும் பிறர்மனைவியர்மேல் ஆவல் கொண்டலைவர் என்பதற்கிணங்க, இச்செய்யுளில் கற்பிலா மங்கையர் தங் கணவர் எவ்வளவு நலங்கள் பொருந்தியவராயிருப்பினும் வேற்றுமனிதர்மேல் விருப்பம் கொள்வர் என்றார். இவ்விரண்டானும்ஆசிரியர் கற்பிலா ஆணையும் பெண்ணையும் எடுத்துக் கூறினாரென்க. மாதர்: இழிவினால் ஒருமையில் வந்த பன்மை ; இசைக்குஎளிதில் மயங்குவர் மாதர் என்பது, "பாடினான் தேவகீதம் பண்ணினுக் காசான் பாடக், சூடக மகளிர்சேர்ந்து" என்னும் சிந்தாமணியினால் விளங்கும். இச் செய்யுளுடன் பின்வரும் இரண்டு செய்யுளையுஞ் சேர்த்து மூன்று செய்யுளில்ஆசிரியர் கற்பிலா மகளிர் தன்மை கூறுகின்றார். (க-து.) கற்பிலாமனைவியர் தங்கணவர் எவ்வளவு நலங்கள் பொருந்தியவராயிருப்பினும் வேற்றுமனிதர்மேல் விருப்பங் கொள்வர். (82) |
|
|
|
|
|
கற்பில் மகளின் நலம்விற் றுணவுகொளும் பொற்றொடி நல்லார் நனிநல்லர் - மற்றுத்தம் கேள்வர்க்கும் ஏதிலர்க்கும் தங்கட்கும் தங்கிளைஞர் யாவர்க்கும் கேடுசூ ழார் |
|
(பொ-ள்.) நலம்விற்று உணவுகொளும் பொன்தொடி நல்லார் - தமது இன்பத்தைப் பிறர்க்கு விற்று உண்டு பிழைக்கும் பொன்வளை யணிந்த பொதுமகளிர், கற்பு இல் மகளின் நனி நல்லார்- கற்பிலாத பெண்களினும்மிகவும் சிறந்தவர்களாவர். (ஏனெனில்),தம் கேள்வர்க்கும் - தம்மேல் அன்புடைய கணவர்க்கும்,ஏதிலார்க்கும்-பிறர்க்கும், தங்கட்கும்,தம் கிளைஞர் யாவர்க்கும் - தம் சுற்றத்தார்அனைவருக்கும், கேடு சூழார் - அவ்விலை மகளிர் கேடு செய்ய நினையார். (வி-ம்.) பொதுமகளிர் கேடு சூழாரென்றமையின், கற்பிலாக் குலமகளிரால் இத்தனை கேடுகளும் வரும்என்பது சொல்லாமலே விளங்கும். ‘பொற்றொடி’ அன்மொழித்தொகை. நனி: உரிச்சொல். கற்பிலா மங்கையரால் ஏற்படுங் கேடுகளைப்பற்றி,"பொருவில் கற்பின் வழீஇயபுன் மங்கையர், உரிய மூன்று மரபினுள் யோரையும்,வெருவந் தேங்க விழுங்கி யுமிழ்கலா, எரியுந்தீநர கிற்குடி யேற்றுவார்" என்று வருங் காசிகாண்டச் செய்யுளும் இங்கு நினைவுகூரற்பாலது. (க-து.) கற்பிலாப்பெண்களினும் பொது மகளிர் நல்லவர். (83) |
|
|
|
|
|
84. கற்பில்லா மகளிரின் பிறப்பு |
முறையும் குடிமையும் பான்மையும் நோக்கார் நிறையும் நெடுநாணும் பேணார்- பிறிதுமொரு பெற்றிமை பேதைமைக் குண்டே பெரும்பாவம் கற்பின் மகளிர் பிறப்பு |
|
(பொ-ள்.) முறையும் - தமக்கும் பிறர்க்குமுள்ளஉறவு முறைமையும், குடிமையும் - தமதுகுடிப்பிறப்பின் தன்மையும், பான்மையும் - தமக்கும் பிறர்க்குமுள்ள தகுதியும், நோக்கார் - பாரார்; நிறையும் - (மனம் தீயவொழுக்கங்களில் செல்லாமல்) நிறுத்தும் தன்மையும், நெடுநாணும் - நீடிய நாணமும்’ பேணார் - பாதுகாவார்; பேதைமைக்கு - பேதைமையே கொண்ட பெண்களுக்கு, பிறிது ஒரு பெற்றியும் உண்டோ - இக்குணங்களல்லாமல் வேறு ஒரு குணமும் உண்டோ?(இல்லை ;கற்பு இல்மகளிர்) பிறப்பு பெரும் பாவம் - (ஆதலால்) கற்பில்லாத பெண்களின் பிறப்புப் பெரிய பாவமாம். (வி-ம்.) நாணம் பெண்களுக்குரியகுணமாகையால் அது பெண்களோடு கூடவே பிறந்து கூடவேவளர்கின்றதென்பார், ஆதலின் நெடுநாண் எனப்பட்டது. நிறை-கற்பு நெறி நிற்றல் : தொழிற்பெயர். நிறு:பகுதி : விகுதி, பேதைமை : பண்பாகு பெயர். பான்மை- ஒருவனுக்கே யுரிமையாயிருத்தல். (க-து.) கற்பிலாமகளிர் பெரும்பாவமுடையராவர். (84) |
|
|
|
|
|
85. துறவியர் காம நோக்குறாமை |
பெண்மை வியவார் பெயரும் எடுத்தோதார் கண்ணொடு நெஞ்சுறைப்ப நோக்குறார் - பண்ணொடு பாடல் செவிமடார் பண்பல்ல பாராட்டார் வீடில் புலப்பகையி னார் |
|
(பொ-ள்.) வீடுஇல் புலம் பகையினார் - புலன்களுக்குப் பகைவராகியகெடுதலில்லாத துறவிகள்; பெண்மை வியவார்-பெண்மை என்னுந் தன்மையைப் புகழ்ந்து கூறார்; பெயரும் எடுத்து ஓதார் - பெண்ணென்னும் பெயரையும் எடுத்துரையார்.நெஞ்சு உறைப்ப கண்ணோடு நோக்கு உறார்- நெஞ்சில் அவர்கள் உருவம் பதியுமாறு கண்களால் பெண்களைப்பார்க்கமாட்டார்கள்; பண்ணொடுபாடல் செவி மடார் - தம்மை வயப்படுத்தும்பொருட்டு அவர்கள் இசையோடு பாடும் பாடல்களுக்கும் செவி கொடார்: பண்பு அல்ல-குணமற்றனவானபிறசெயல்களையும் , பாராட்டார்- பாராட்டமாட்டார்கள். (வி-ம்.) வீடு - முதனிலை திரிந்ததொழிற்பெயர். புலப்பகை: வேற்றுமைத்தொகை. இச் செய்யுள் முதல் ஆசிரியர்இந் நூல் முடிவுவரை. துறந்தோர் தன்மைகூறுகின்றார். (க-து.) ஐம்புலனும் வென்ற துறவிகள் சிற்றின்பத்திற்குக் காரணமான காரியங்களில் ஈடுபடாதிருப்பர். (85) |
|
|
|
|
|
துயிற்சுவையும் தூநல்லார் தோட்சுவையும் எல்லாம் அயிற் சுவையின் ஆகுவவென் றெண்ணி - அயிற்சுவையும் பித்துணாக் கொள்பபோற் கொள்ப பிறர்சிலர்போல் மொத்துணா மொய்ம்பி னவர் |
|
(பொ-ள்.) பிறர்சிலர்போல்-வேறு சிலர் போல,மொத்துணா மொய்ம்பினவர் - ஐம்புல வின்பங்களால்அடி படாத தவ வலிமையுடையோர், துயில் சுவையும் - தூக்கத்தின் இன்பமும், தூ - நல்லார் தோள்சுவையும்- அழகிய பெண்களது தோளைத் தழுவும் இன்பமும், எல்லாம் - மற்றுமுள்ள எல்லா இன்பங்களும், அயில்சுவை இன்- உண்டி யினாலுண்டாகும் இன்பத்தால், ஆகுவ என்று எண்ணி-வருவன என்று நினைத்து, அயில் சுவையும் - அவ்வுண்டி கொள்ளுதலையும்,பித்து உணா கொள்வது போல மிகச்சிறுகவே உண்பார்கள். (வி-ம்.) பித்தன் பசிக்கும்போதுசிறிது உணவே கொள்வான். அதுபோல்துறவிகள் பசி காரணமாகச் சிறிது உணவே கொள்வார்கள். அயில் : முதனிலைத்தொழிலாகு பெயர். அயிற் சுவையும் என்னும் உம்மைஏனைத் துயிற்சுவை முதலியனவும் குறைப்பரென்னும்பொருட்டு. (க-து.) உண்டிமிகுந்தால் சிற்றின்ப எண்ணங்கள் மனத்திலெழுமென்று துறவிகள் மிகவும் குறைவாகவே உண்பார்கள். (86) |
|
|
|
|
|
87. துறவிகள் உடம்போம்பாமை |
அன்பொ டருளுடைய ரேனும் உயிர்நிலைமற் றென்பியக்கங் கண்டும் புறந்தார் - புன்புலாற் பொய்க்குடில் ஓம்புவரோ போதத்தால் தாம்வேய்ந்த புக்கில் குடிபுகுது வார் |
|
(பொ-ள்.) போதத்தால்தாம் வேய்ந்த - ஞானத்தால் தாம் அமைத்த, புக்கில் - பேரின்ப வீட்டிலே, குடிபுகுதுவார்- குடிபுகுதற்குச் சித்தமாயிருப்பவர்கள், புன்புலால் பொய்க்குடில்ஓம்புவரோ - முடைநாறும் ஊன் பொதிந்த பொய்க் குடிசையாகிய தம்முடம்பைப் பாதுகாப்பரோ? (காவார்); (காவாதொழிவதால்) அன்பொடு அருள் உடையர் ஏனும் - அன்பும் அருளுமுடையவராயினும், உயிர்நிலை- உயிர்க்கு நிலைக்களமாகிய தம்முடல்(உணவில்லாமையால் மெலிந்து ), என்பு இயக்கம் கண்டும்- எலும்புகள் தோன்றுவதைக் கண்டபோதுங்கூட, புறந்தரார் - (அவ்வூனுடம்பைப்) பாதுகாவார். (வி-ம்.) ஒடு: பாட்டின் இசை நன்கமையவேண்டிவந்த இடைச்சொல். நிலை : வினையடியாகப்பிறந்த பகுபதப்பொருட் பெயர்.புக்கில் - உரிய வீடு, புகுதுவார்-புகு:பகுதி,து: சாரியை. புறந்தரார் - புறந்தா : பகுதி. (க-து.) பேரின்பமாகியவீடுபேற்றை விரும்புகின்றவர்கள் சிற்றின்பவீடாகிய உடம்பைப் பேணார். (87) |
|
|
|
|
|
88. சிற்றின்பம் விரும்பாமை |
சிற்றின்பம் சின்னீர தாயினும் அஃதுற்றார் மற்றின்பம் யாவையுங் கைவிடுப - முற்றுந்தாம் பேரின்ப மாக்கட லாடுவார் வீழ்பவோ பாரின்பப் பாழ்ங்கும்பி யில் |
|
(பொ-ள்.) சிற்றின்பம்சில் நீரது ஆயினும் - சிற்றின்பம் சிறுமையுடையதாயினும், அஃது உற்றார் - அவ்வின்பத்திற்காளானோர்,மற்று இன்பம் யாவையும் கை விடுப - மற்ற எல்லா இன்பங்களையும்கைவிடுவார்கள். பேரின்பம் மா கடல் - பேரின்பமென்னும் பெரிய கடலிலே முற்றும்ஆடுவார் தாம்-எப்போதும் முழுகுபவர்கள்; பார் இன்பப் பாழ் கும்பியில் வீழ்பவோ - உலகவின்பமாகிய நரகத்தில் வீழ்வரோ? (வீழார்) (வி-ம்.) கும்பி-சேறு, 'யானையுநரகமுஞ் சேறுங்கும்பி' பிங்கலம். சிற்றின்பம் - சிறுமை இன்பம்; சிலநீர என்பது சின்னீர என்றாயிற்று, "சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே, மற்றின்பம் வேண்டு பவர்" என்னுந் திருக்குறள் கருத்துஇங்கு நினைவு கூரற்பாலது. (க-து.) பேரின்பம் விரும்பினோர் சிற்றின்பத்தை விரும்பார் ; சிற்றின்பம்விரும்பினோர் மற்றின்பமெல்லாங் கைவிடுவர். (88) |
|
|
|
|
|
எவ்வினைய ரேனும் இணைவிழைச்சொன் றில்லெனின் தெவ்வுந் திசைநோக்கி கைதொழூஉம் - அவ்வினை காத்த லிலரேல் எனைத்துணைய ராயினும் தூர்த்தருந் தூர்ப்பார் அலர் |
|
(பொ-ள்.) எவ்வினையரேனும் - துறவிகள் மற்றும் எவ்வகையான தீச் செயல்களைச் செய்தாலும் இணை விழைச்சு - மகளிரைச்சேர்ந்தின்புறுதல் என்னும், ஒன்றுஇல் எனின் - ஒரு தீத்தொழில் மட்டும் (அவர்களிடம்) இல்லாதிருந்தால், தெவ்வும் - (அவர்களுடைய)பகைவரும், திசை நோக்கிக் கைதொழூஉம் - (அவர்களிருக்குந்) திக்கைநோக்கித் தொழுவர், (அவ்வாறின்றி) எனைத்துணையர் ஆயினும் - அவர்கள்எத்தனை அறச் செய்கைகளுடையவர்களாயிருந்த போதிலும், அவ்வினை காத்தல்இலரேல் - அத் தீத்தொழிலைக் காவாதவர்களாயின், தூர்த்தரும் - மகளிர்இன்பத்திலேயே மூழ்கிநிற்குங்காமுகரும், அலர் தூர்ப்பார் - அவர்களைப் பற்றிப் பழமொழி கூறுவார்கள். (வி-ம்.) விழைச்சு : தொழிற்பெயர்;தூர்ப்பார்;பலர்பால் படர்க்கைவினைமுற்று. இணைவிழைச்சு - கூட்டம்: இருபாலரும் விரும்புதலின் இணைவிழைச்சு எனப்பட்டது. எவ்வினையரேனும் என்றது, துறவிகள் விலக்க வேண்டிய தீச்செயல்களை: அவையாவன : கோபம், நிந்தை, பிச்சை வாங்குதல் முதலியன. தூர்த்த லாவதுஈண்டுப் பழியை மிகுதியாகப் பரப்புதல், இச்சொல்லுக்கு இம்மிகுதிப் பொருளுண்மை "தூர்க்கின்ற மலர்மாரி" (இராவ .199) என்னும் கம்பர் வாக்கிற் காண்க. அலர்: தொழிலாகுபெயர். (க-து.) பெண்ணாசை அற்றகருவிகளைப் பகைவரும் கை கூப்பி வணங்குவர்;இன்றேல், அவர்களை யாவரும் பழிப்பர். (89) |
|
|
|
|
|
பரபரப்பி னோடே பலபல செய்தாங் கிரவுபகல் பாழுக் கிறைப்ப - ஒருவாற்றான் நல்லாற்றில் நூக்கிற் பதறிக் குலைகுலைப எவ்வாற்றான் உய்வார் இவர் |
|
(பொ-ள்.) பலபல பரப்பினோடே செய்து-(உலகினர்)பல காரியங்களை விரைவாகச் செய்து, இரவு பகல் பாழுக்கு இறைப்ப-இரவையும்பகலையும் வீணிற் கழிப்பர், ஒரு ஆற்றால், ஒரு வகையால், நல் ஆற்றில்- நல்லொழுக்க வழியில், நூக்கில் - (அறிவுடையோர் அவர்களைச்)செலுத்தினால் பதறிக் குலை குலைப- மெய்பதறி நடு நடுங்குவார்கள், இவர்-(இத்தகைய இவர்கள் எவ்வாற்றான் உய்வார்-பிறவிப்பெருங்கடலினின்றும்) எந்த வழியாகத்தப்புவார்கள்? (வி-ம்.) நற்பயன் பெறுதற்குரியதம் மனம் வாக்குக் காயங்களை உலகினர் இடையறாமற் கீழ்மையான செயல்களிற் பயன்படுத்தி அழிதலின், 'இரவு பகல் பாழுக்கிறைப்ப' எனவும், அவ்வாறு பாழ்படுவாரை அறிஞர் நன்னெறிக்குத் திருப்ப முயன்றால் அவர்கள், மனம் அதனை விரும்பாமையின் 'பதறிக் குலை குலைப' எனவுங் கூறினர். "வீழ்நாள்படாஅமை" நன்றாற்றினஃதொருவன்வாழ்நாள் வழியடைக்குங் கல்' என்னுந் திருக்குறள் இங்குப் பெரிதும் கருத்திருத்தற் பாலதாகும். (க.து.) உலகினர்தம் வாணாளை வீண் முயற்சிகளிற் கழிப்பர். (90) |
|
|
|
|
|