91-102
 

91. தவம்

இளையம் முதுதவம் ஆற்றுதும் நோற்றென்
றுளைவின்று கண்பாடும் ஊழே -விளிவின்று
வாழ்நாள் வரம்புடைமை காண்பரேல் காண்டாரும்
தாழாமே நோற்பார் தவம்

(பொ-ள்.) விளிவு இன்று- இளமையில் இறத்தலின்றி, வாழ்நாள் வரம்புடைமை காண்பரேல்-தமது வாழ்நாள்நீண்ட கால எல்லையினை உடையதாதல் அறிவரேல், இளையம்-(நாம்இப்போது) இளைஞராயிருக்கிறோம்,முது - முதுமையில், நோற்று-வருந்தி, தவம்ஆற்றுதும் என்று - தவம் செய்வோம்என்று, உளைவு இன்று-வருத்தமில்லாமல், கண்பாடும்-உறங்கிக்கிடப்பதும், ஊழே-ஒருகால் முறையேயாகலாம்; காண்பாரும் தமது ஆயுள் நாள் முடிவைக் காணுந்துறவியரும், தாழாமே-நொடிப்பொழுதாயினுந்தாமதியாமல், தவம் நோற்பார்-தவஞ் செய்வார்,   

(வி-ம்.) வரம்பு-எல்லை, முடிவு, உளைவு, விளிவு ; வு விகுதிபெற்ற தொழிற்பெயர்கள், இளையம்; இளமை என்னும்பண்படியாய்ப் பிறந்த உளப்பாட்டுத் தன்மைப் பன்மை வினைமுற்று, விளிவின்று என்பதில் இன்றி என்னும் வினையெச்சம்செய்யுளாகலின் உகரத் திரியாக வந்தது. நோற்று; நோல்:பகுதி, “நரைவரு மென்றெண்ணி நல்லறிவாளர், குழவியிடத்தே துறந்தார்” என்னும்நாலடியார் இங்கு நினைவுக் கூர்தற்குரியது.   

(க-து.) இறக்கு நாள்என்றென்று யார்க்குந் தெரியாதாகையால் உடனே தவஞ் செய்துகொள்ளுதல்மக்கள் கடன்,                       (91)

   

92. தவத்தின் இயல்பு

நல்லவை செய்யத் தொடங்கினும் நோனாமே
அல்லன அல்லவற்றிற் கொண்டுய்க்கும் - எல்லி
வியனெறிச் செல்வாரை ஆறலைத் துண்பார்
செலவு பிழைத்துய்ப்ப போல்

(பொ-ள்.) எல்லி- இரவிலே, ஆறலைத்து உண்பார்-வழி பறிப்பவர்களாகியதிருடர்கள், வியல்நெறி செல்வாரை-மக்கள்போக்குவரவுடைய பெருவழியிற் செல்லும் வழிப்போக்கர்களை, செலவு-(அந்நெறியில்) செல்வதை, பிழைத்து - தப்புவித்து, உய்ப்பபோல்-மக்கள் நடமாட்டமில்லாத தனிவழியிற் கொண்டு செல்லுதல்போல், நல்லன செய்யத் தொடங்கினும்-நற்காரியங்களைச் செய்யத்தொடங்கினாலும், அல்லன-தீயூழானது, நோனாமே-(அது)பொறாமல், அல்லவற்றில்-தீய காரியங்களில், கொண்டு உய்க்கும்-கொண்டு போய்விடும்.      

(வி-ம்.) 'ஊழ்வலிது' என்பது இங்கு நோக்கற்பாலது. நோனமே; எதிர்மறை வினையெச்சம். ஆ: எதிர்மறை யிடைநிலை. மே:விகுதி. எல்லி செல்வாரை;ஏழன் தொகை, "தவமுந் தவமுடையார்க்காகும் அவமதனை, யஃதிலார் மேற்கொள்வது," ஊழிற் பெருவலியாவுள மற்றொன்று, சூழினுந் தான் முந்துறும்' என்னும்திருக்குறள்கள் இங்கு நினைவு கூரற்பாலன.       

(க-து.) நற்காரியங்களைச் செய்யநினைத்தாலும் ஊழ்வினைமாறாயின் அவைதீய காரியங்களாகவே முடியும்.(92)

   

93. கூடாவொழுக்கம்

நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப்போர்வை
கஞ்சுக மன்று பிறிதொன்றே - கஞ்சுகம்
எப்புலமுங் காவாமே மெய்ப்புலங் காக்குமற்
றிப்புலமுங் காவா திது

(பொ-ள்.) நெஞ்சு-தமது மனம்; புறம்பு ஆ-புறத்திலே (கட்டுப்படாமல்)செல்ல, துறந்தார்-துறந்தவர்களுடைய, தவப்போர்வை-தவக்கோலமாகிய போர்வை, கஞ்சுகம் அன்று-சட்டையைப் போன்றதுமாகாது, (ஏனெனில்)கஞ்சுகம்-சட்டையானது, எப்புலமும்-எல்லாம் புலன்களையும். காவாமே-காக்காவிடினும், மெய்ப்புலம்-உடம்பாகிய புலனை மட்டுமாவது,காக்கும்-(பனி குளிர் முதலியவற்றினின்று) காக்கும், (ஆனால்), இது-இந்தப் பொய்த்தவப் போர்வையானது, இப்புலமும்- இந்த உடம்பையும், காவாது-(குளிர், பனி முதலியவற்றினின்று) காக்கமாட்டாது, பிறிது ஒன்றே - (ஆதலால் இப்பொய்த் தவக்கோலம்) வேறுஒரு பொருளே,   

(வி-ம்.)  மனத்தைப்புறஞ்செல்லவிட்டு மேலுக்கு மட்டும் துறந்தார்போல நடிப்பாரது துறவுகோலத்திற்கு ஓர் எளியசட்டைக்கிருக்கும் பெருமைகூடக் கிடையாது என்றார். சட்டையாவது குளிரினின்று காக்கும்; இப்பொய்த்தவப் போர்வையோ அதுவும்செய்யாது; ஆகையால் இது வேறொருபொருளே. துறந்தார் என்போர்எல்லாப் பற்றையும் அறவே நீத்தாராகையால் அவர்கள் மனம் ஒன்றிலும் பற்றுதல் கூடாது, ஏதாவதுஒரு காரியம் விரும்பிப் போகிறவன்,அதற்குத் தகுதியான சட்டையணிந்து செல்லுதல்போல, மனமடக்காது கருத்திலே கரவு  கொண்டாரதுதவக்கோலமும் தீச்செயல் புரிதற்கென்று அணியப்படுவதுபோல் தோன்றலால், அது போர்வை என்றும் ஆனால்போர்வைபோல் அது பயன்படாமையால் போர்வையுமன்று பிறிதொரு பொருள் என்றுங்கூறினார். "நெஞ்சிற்றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து, வாழ்வாரின் வன்கணாரில்" என்றது திருக்குறள்.   

(க-து.) மனத்தைக் கட்டுப்படுத்தாத துறவிகளின் தவக்கோலத்தால் யாதும் பயனில்லை. (93)

   

94. வஞ்சித்தொழுகல்

வஞ்சித் தொழுகும் மதியிலிகாள் யாவரையும்
வஞ்சித்தோம் என்று மகிழன்மின் - வஞ்சித்த
எங்கும் உளனொருவன் காணுங்கொல் என்றஞ்சி
அங்கம் குலைவ தறிவு

(பொ-ள்.)  வஞ்சித்துஒழுகும் மதியிலிகாள்-(பொய்க்கோலம் பூண்டு)பிறரை வஞ்சித்து நடக்கும் மதியீனர்களே!, யாவரையும் வஞ்சித்தோம் என்று மகிழன்மின்- எல்லாரையும் நாம் வஞ்சித்துவிட்டோம் என்று நீங்கள் மகிழ்ச்சி கொள்ள வஞ்சித்தவற்றை, எங்கும் உளன் ஒருவன் காணும் என்று  அஞ்சி-எங்கும் நிறைந்த இறைவன் காண்கின்றானென்று நடுங்கி,   அங்கம் குலைவது -(உங்கள்) உடல்பதறுவதே, அறிவு-(உங்களுக்கு) அறிவாகும்.         

(வி-ம்.) இறைவன் 'எங்குமிருக்கிறார், எல்லாம் அறிவார்' என்னும் உண்மையறியாமையின், 'மதியிலிகாள்'  என்றார். மனிதர்தண்டிப்பதிலும் இறைவன் தண்டனைகொடிதாகலின், ‘அங்கங் குலைவதறிவு’ என்றார். மகிழன்மின்:  எதிர்மறை ஏவற்பன்மைவினைமுற்று, வஞ்சித்த : இறந்தகாலப் பலவின்பால் வினையாலணையும் பெயர். கொல்: அசைச்சொல். மதியாவது பொருளின் இயல்பை ஆராய்ந்து அளந்தறிவது.

(க-து.) எங்கும் நிறைந்த இறைவன் அறியாத செயல்யாதுமில்லையாகையால் பிறரை வஞ்சித்தோம் என்றுமகிழ வேண்டாம்.             (94)

   

95. பழிமொழி பரத்தல்

மறைவழிப் பட்ட பழிமொழி தெய்வம்
பறையறைந்தாங் கோடிப் பரக்கும் - கழிமுடைப்
புன்புலால் நாற்றம் புறம்பொதிந்து மூடினுஞ்
சென்றுதைக்கும் சேயார் முகத்து

(பொ-ள்.)  புண்புலால் கழிமுடை நாற்றம்-இழிவான இறைச்சியின் மிகுந்த கெட்ட நாற்றமானது, புறம் பொதிந்து மூடினும்- (அவ்விறைச்சியை) ஒன்றிற் போட்டுப் பொதிந்து மூடிவைத்தாலும், சேயார் முகத்து சென்றுதைக்கும்-வெகுதூரத்திலிருப்பவர்களுடைய முகத்திலும் போய்த்தாக்கும்; (அதுபோல) மறைவழிப்பட்ட பழிமொழி-மறைவில் நடந்த செயலால் வரும் பழிச் சொற்கள், தெய்வம் பறை அறைந்து ஆங்கு-இறைவன் பறை கொட்டி வெளிப்படுத்தினாற்போல், ஓடிப்பரக்கும்-விரைந்து சென்று எங்கும் பரந்துவிடும்.

(வி-ம்.) மறை : முதனிலைத் தொழிற்பெயர்; அஃது இவன் இடம் உணர்த்தலால்தொழிலாகு பெயர். சென்றுதைக்கும் என்பதைச் சென்று உதைக்கும் என்றும் பிரிக்கலாம். "தூர்த்த மங்கையர் சோர்வினிற் செய்பழி, வார்த்தை யெங்கணும் வல்லிதிற் செல்லல் போல்" என்பது கந்தபுராணம்.

(க-து.) மறைவில் நடந்திருப்பினும் பழிச்செயல்கள் விரைவில் வெளிப்படும். (95)

   

96. மேலோர் செயல்

மெலியார் விழினும் ஒருவாற்றான் உய்ப
வலியார் மற்றொன்றானும் உய்யார் - நிலைதப்பி
நொய்ய சழக்கென வீழாவாம் வீழினும்
உய்யுமால் உய்யா பிற

(பொ-ள்.) நிலைதப்பி-நிலை தவறி,நொய்ய சழக்கென வீழாவாம்-கனமில்லாத பொருள்கள் விரைவில்விழமாட்டா, வீழினும்-ஒருவேளை விழுந்தாலும், உய்யும்-பிழைக்கும், பிற உய்யா-கனமான பொருள்கள் நிலை கெட்டு  விழுந்தால் பிழைக்க மாட்டா, (அதுபோல) மெலியார் விழினும்-சிறியோர் தம்நிலையினின்று  தவறினும், ஒருஆற்றான்-ஒரு வழியாக, உய்ப-பிழைத்துக்கொள்வர் வலியார்- பெரியோர், (தம் நிலை தவறினால்)மற்ற ஒன்றானும்-வேறு எந்த வகையாலும், உய்யார்-பிழைக்கமாட்டார்.

(வி-ம்.) மெலியார் வலியார் என்றது ஈண்டு முறையே இல்லறத்தாரையும் துறவிகளையும் நோக்கிற்று. சிறியர் நிலைதவறின் அவர் கீழோராகையால் அவர்நிலை தவறினதை உலகம் நன்கறியாது: பெரியாரோவெனின் தன்னிலை கெட்டால் உலகெலாம் அது பரவும். ஆகலின், பின்பு அவர்கள் பெருமையடைதல் அரிது."ஆடு படுத்தால் எழுந்திருக்கும்.ஆனை படுத்தால்எழுந்திருக்குமா?" என்னும்பழமொழி இங்குக் கவனிக்கத் தக்கது. உய்ப : பலர்பால்எதிர்கால வினைமுற்று ; நொய்ய : அஃறிணைக் குறிப்புப் பெயர், சழக்கென : உரிச்சொல்லடியாகப் பிறந்த வினையெச்சம் : சழக்கென்பது பகுதி. 'நிலைதப' என்றும் பாடம்.

(க-து.) மேனிலையிலுள்ளார் அந்நிலை தவறின் பின் ஒரு வழியானும் உய்தலரிது.   (96)

   

97. தீயவையும் நல்லவையே

இசையாத போலினும் மேலையோர் செய்கை
வசையாகா மற்றையோர்க் கல்லால் - பசுவேட்டுத்
தீயோம்பி வான்வழக்கங் காண்பாரை யொப்பவே
ஊனோம்பி ஊன்றின் பவர்

(பொ-ள்.)  மேலையோர்செய்கை-பெரியார் செய்கை, இசையாத போலினும்-(சில நேரங்களில்) பிறர் கொள்கைக்குப்பொருத்தமற்றனவாயிருந்தாலும், மற்றையோருக்கு அல்லால்- சிறியோர்க்கன்றி (அவர் போன்ற பெரியோர்க்கு), வசை ஆகா- குற்றமாகா ;  பசு வேட்டு-உலகின் (நலங்கருதிப்) பசுவைப்படைத்து, தீஓம்பி-முத்தீ வேள்வி செய்து, வான் வழக்கங் காண்பாரை-மழை பெய்தலைச் செய்விக்கும் வேள்வியாசிரியரை, ஊன்ஓம்பி-(தமது) உடம்பைப் பாதுகாக்க வேண்டி, ஊன்தின்பவர்-(வேறோர் உயிரின்) இறைச்சியைத் தின்பவர்கள், ஒப்பாவரோ? (ஆகார்).   

(வி-ம்.) முத்தீ - ஆகவனீயம்,காருகபத்தியம், தட்சிணாக்கினியம், வேட்டு :  இறந்த கால வினையெச்சம்; வேள்: பகுதி; த் : இடைநிலை: ள், த், டகரமாதல் சந்தி; உ : விகுதி. பசு :வேள்விக்குரிய உயிர்களுக்குப்பொதுப் பெயர். மேலையோர் - முனிவர்.

"யானைமதப் பட்டா லலங்கார மாஞ்சிறுநாய்
தானுமதப் பட்டாற்சரியாமோ - ஞானி.
தடை மீறினாலுஞ் சரியாகும் கன்மி
நடைமீறில் ஆகாது காண்."   - ஒழிவிலொடுக்கம்

 

"தன்னூன்பெருக்கற்குத் தான் பிறிதூனுண்பான்
எங்ஙன மாளுமருள்."        - திருவள்ளுவர்.

(க-து.) பெரியோர் சில சமயங்களில் தீச்செயல்கள்புரிந்தாலும் அவற்றாலும் உலகுக்கு நன்மையே பிறக்குமாகையால் அவை பழிக்கப்படா. (97)

   

98. ஞானி செயல்

எவரெவர் எத்திறத்தார் அத்திறத்த ராய்நின்
றவரவர்க் காவன கூறி - எவரெவர்க்கும்
உப்பாலாய் நிறபமற் றெம்முடையார் தம்முடையான்
எப்பாலு நிற்ப தென

(பொ-ள்) தம்உடையான் எப்பாலும் நிற்பது என- தம்மையாளுடைய இறைவன் சேர்ந்தும் சேராமலும் எங்கெங்கும் நிறைந்து நிற்பதுபோல், எம்முடையார்-எம்மைஆளுந்தன்மையுடைய பெரியோர்,எவர்க்கும் உப்பாலாய்-யாவர்க்கும்புறத்தாராய்;  எவர் எவர்எ திறத்தார்-யார் யார் எத்தன்மையராய் இருப்பரோ, அவர் அவர்க்கு அ திறத்தராய் நின்று - அவரவர் தன்மைக் கேற்பத் தாமும் நின்று. ஆவனகூறி-அவர்கள் செய்ய வேண்டிய நற்காரியங்களை அவர்க்கெடுத்துச் சொல்லி, நிற்ப - தாம் யாதிலும் பற்றின்றி நிற்பார்கள்.

(வி-ம்.) திறம்வகை ; அவை மந்தம், தீவிரம், தீவிரதரம் போல்வன. உப்பால்: சுட்டிடைச்சொல்.

(க-து.) பற்றற்ற துறவிகள் உலக நடையோடொழுகிஉலகத்தாருக்கு நல்வழிகளை அறிவுறுத்தி வந்தாலும் தாம் உலகப்பற்றின்றி நீங்கியே நிற்பர். (98)

   

99. மெய்யுணர்ந்தார்

மெய்யுணர்ந்தார் பொய்ம்மேல் புலம்போக்கார் மெய்யுணர்ச்சி
கைவருதல் கண்ணாப் புலங்காப்பார் - மெய்யுணர்ந்தார்
காப்பே நிலையாய் பழிநாணல் நீள்கதவாச்
சேர்ப்பர் நிறைத்தாழ் செறித்து

(பொ-ள்.)  மெய்உணர்ந்தார் - உண்மைப்பொருள்களை உணர்ந்தவர்கள், பொய்மேல் புலம்போக்கார் - பொய்ப் பொருள்களின் மேல் தம் புலன்களைச் செலவிடாது, மெய் உணர்ச்சி - மெய்யறிவு கைவருதல் கண்ஆ - தமக்குக் கைகூட வேண்டுமென்பதே கருத்தாக, புலம் காப்பாார்-ஐம்புலன்களையும் காப்பர், மெய்யுணர்ந்தார்- அம்மெய்யறிவாளர், காப்பே நிலைஆ - ஐம்புலன்களையும் காத்தலே நிலையாகவும், பழிநாணல் ஏநீள் கதவுஆ - பழிசொற்களுக்கு நாணுதலே நீண்ட கதவுகளாகவுங் கொண்டு, நிறை - நிறையாகிய,தாழ்- தாழ்ப்பாளை, செறித்துச் சேர்ப்பர் - இறுக்கிப் பொருத்துவர்

(வி-ம்.) நிறை-மனத்தை அதன் வழியில்விடாது நிறுத்தல். மெய்யுணர்ச்சியாவது பின்பு வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் ஐயந்திரிபின்றி அறிதல் : போக்கார் : முற்றெச்சம், கண்ணா நிலையா கதவா  என்பவற்றின் ஈறுகுறைந்து நின்றன. இச் செய்யுள் இயைபுருவகம். "சுவையொளி யூறோசை நாற்றமென்றைந்தின், வகைதெரிவான் கட்டேயுலகு" என்னுந் திருக்குறள் இங்கு ஊன்றிக் கருத்தித்து தற்குரியது.

(கா-து.)  உண்மைப்பொருள்களை உணர்ந்த பெரியோர் ஐம்புலன்களையும் அடக்கி மெய்யறிவு உண்டாகும் வழியில் நிற்பர்.      (99)

   

100. பேரின்பம்

கற்றுத் துறைபோய காதலற்குக் கற்பினாள்
பெற்றுக் கொடுத்த தலைமகன்போல் - முற்றத்
துறந்தார்க்கு மெய்யுணர்வில் தோன்றுவதே இன்பம்
இறந்தவெலாம் துன்பமலா தில்

(பொ-ள்.) கற்றுத் துறைபோயகாதலற்கு - கற்க வேண்டிய நூல்களெல்லாம் கற்றுக் கற்றதற்குத் தக நிற்குங் கணவனுக்கு,கற்பினாள் - கற்புள்ள மனைவி, பெற்றுக் கொடுத்த தலைமகன் போல் - பெற்றுக் கொடுத்தமுதல் மகனைப் போல், முற்றத் துறந்தார்க்கு-இருவகைப், பற்றினையும் அறவே யொழித்த துறவிகட்கு,மெய்யுணர்வில் தோன்றுவதே இன்பம் - அவர்களின்மெய்யுணர்வில் தோன்றுகின்ற இன்பமே மிகுந்த இன்பமாகும். இறந்த எலாம்துன்பம் அலாது இல் - அஃதொழித்த பிறவெல்லாம் (அவர்கட்குத்) துன்பமன்றிவேறில்லை.

(வி-ம்.) பிற்காலத்தில் தந்தைக்குரியபொறுப்புக்களை ஏற்றுப் பணிபுரிதல் முதலியன முதல்மகனுக்குரித்தாதலின் 'கற்பினாள்பெற்றுக்கொடுத்த தலைமகன்' மிகவும் மதிக்கப்படுகின்றான். துறை - இங்கு வகை. இருவகைப்பற்று - உடல் என்னும் அகப்பற்றும், உடைமை என்னும் புறப்பற்றும். 'இறந்த வெலாந்துன்பமே யாம் என்பதும் பாடம்.

(க-து.) முற்றுந் துறந்த முனிவர்கட்குஅவர்கள் மெய்யுணர்வில் தோன்றும் இன்பமேஇன்பம்.(100)

   

101. நீணெறிச் சென்றார்

கற்றாங் கறிந்தடங்கித் தீதொரீஇ நன்றாற்றிப்
பெற்றது கொண்டி மனந்திருத்திப் - பற்றுவதே
பற்றுவதே பற்றிப் பணியறநின் றொன்றுணர்ந்து
நிற்பாரே நீணெறிச்சென் றார்

(பொ-ள்.) கற்று ஆங்கு அறிந்து-அறிவுநூல்களைக் கற்று அவற்றின் மெய்ப்பொருளை உணர்ந்து, அடங்கி - அவற்றிற்கேற்பஅடக்கமாய், தீது ஒரீஇ - (அந் நூல்களிலல் விலக்கிய) தீயகாரியங்களைக்கைவிட்டு, நன்று ஆற்றி - (அந்நூல்களில் விதித்த) நற்காரியங்களைச் செய்து, பெற்றதுகொண்டு மனம் திருத்தி - கிடைத்ததைக் கொண்டு மனம் அமைந்து அதனை ஒரு வழிப்படுத்தி,பற்றுவதே பற்றுவதே பற்றி - தாம் அடைய வேண்டிய வீட்டு நெறியையும் அந் நெறிக்குரியமுறைகளையும் மனத்திற் கொண்டு, பணி அற நின்று - சரியை முதலிய தொழில்கள் மாள அருள்நிலையில் நின்று, ஒன்று உணர்ந்து - தனிப்பொருளாகிய இறைவனை அறிந்து, நிற்பாரே -நிற்கின்ற ஞானியரே, நீள்நெறி சென்றார் - வீட்டையும் வழியில் நின்றவராவர்.

(வி-ம்.) அறிவு நூல்களில்விலக்கிய தீயகாரியங்களாவன : காமம் கோபம் முதலியன; அவற்றின்கண்விதித்த நற்காரியங்களாவன: கொல்லாமை, வாய்மை முதலியன. ஓரீஇ :சொல்லிசையளபெடை. பற்றுவது இரண்டனுள் முன்னது வீட்டைப் பற்றும் நெறி; பின்னது அந்நெறியைப் பற்றும் முறை ; பற்றுவது : வினையடிப் பகுபதப் பெயர். பணியற நிற்றல் - முதற் பொருளோடு தான் அதுவென வேறாகாது நிற்றல்.

(க-து.) அறிவு நூல்களைக்கற்று அதன்படி நடந்து மனத்தை ஒருவழிப்படுத்தித் தனிப்பொருளாகிய இறைவனை உணர்ந்து நிற்பாரே வீடடைவர்.    (101)

   

102. முடிபொருள்

ஐயந் திரிபின் றளந்துத் தியில்தெளிந்து
மெய்யுணர்ச்சிக் கண்விழிப்பத் தூங்குவார் - தம்முளே
காண்பதே காட்சி கனவு நனவாகப்
பூண்பதே தீர்ந்த பொருள்

(பொ-ள்.) அளந்து - மறை முடிவின் அளவைகளால் இறைவன், உயிர்,பற்று இவற்றின் தன்மைகளை அளவு செய்து, ஐயம் திரிபு இன்று - அவற்றில் ஐயமும் திரிபுமில்லாமல்,உத்தியில் தெளிந்து-கருத்தில் தெளிவுற்று, மெய் உணர்ச்சிகண் விழிப்ப - மெய்யறிவாகியகண்விழித்து, தூங்குவார் - அறிவுத் துயில் செய்வர், தம் உள்ளே - தம் உள்ளத்தில்,காண்பதே காட்சி - காணுங் காட்சியே காட்சியாகும், கனவு - (அந்த ஞானத்துயிலிற் காணும்)கனவை, நனவாக - விழிப்பு நிலையாக,பூண்பதே - அடைவதே; தீர்ந்த பொருள் - முடிந்தநிலையாகும். (சித்தாந்தமாகும்.)

(வி-ம்.) ஐயமாவது-இறைவன் உளனோ இலனோ என்னும் ஐயப்பாடு, திரிபு -ஒன்றை மற்றொன்றாகக் கருதும் அறிவு மயக்கம் நனவு-விழிப்பு ; வாழ்க்கை ; கனவு நனவாகப்பூண்பது - அறிவு நிலையிற் காணப்பட்ட நுண்ணிய நுகர்வை வாழ்க்கை நிலையினுங்கண்டு நிற்றல், என்றது ஈண்டும் இறைபணி நிற்றலென்பது. மெய்யுணர்ச்சியின்கண்-அகக்கண் ; மனம் பதி முதலியவற்றை உள்ளவாறுணர்ந்தஅறிவு. இன்றி என்னும் வினையெச்சம் செய்யுளில் இன்று என வந்தது. கண்விழிப்பத்தூங்குவார் என்பதற்கு அருள்நிலையில் விழிப்பும் உலக நிலையில் துயிலுமுடையார்என்க.

(க-து.) மெய்யுணர்வு பெற்று இறைவனோடு ஒற்றுமையுடன் நிற்பவரேவீடுபேற்று நெறியில் ஒழுகும் ஞானியராவர்.      (102)