பக்கம் எண் :

210

 நீதி நூல்
 
 பொறுக்காது மாண்டொழிவர். தேடிய பொருளும் கூடிய துன்பமும் வினைப்பயன் ஆதலின், இரண்டையும் ஒப்புநோக்கும் சான்றவரைத் துன்பம் என்ன செய்யும்? (ஒன்றும் செய்யா தென்பது கருத்து)
 பதகர்-கீழோர். தாக்கிடின்-வருத்தினால். அஞர்-துன்பம். சீலர்-சான்றவர். நோய்-துன்பம்.
 

 4

  வேறு
        இன்பமும் துன்பமும் ஏற்பர் இயைந்தே
442
ஒளியி னோடிரு ணிழலொடு வெயில்பொழி யுதகத்
துளியி னோடுமின் னசனிமா மலையையுஞ் சுழற்றும்
வளியி னோடிளந் தென்றலும் வருதல்போன் மாக்கள்
களியி னோடருந் துயரமுங் கொள்ளுவர் கலந்தே.
 மக்கள் வெளிச்சத்துடன் இருளும், நிழலுடன் வெயிலும், மழையுடன் மின்னலும் இடியும், பெரியமலையும் பெயர்ந்து கற்போல் சுற்றச் செய்யும் சூறைக்காற்றுடன் வாடிய உயிரையும் தளிர்க்கச் செய்யும் மெல்லிய தென்றல்காற்றும் மாறிமாறி வருதல்போல, இன்பத்துடன் துன்பும் கலந்து வருவதை இயல்பென எண்ணி ஏற்றுக்கொள்வர்.      
 உதகம்-நீர். அசனி-இடி. வளி-காற்று. மாக்கள்-மக்கள். களி-இன்பம்.
 

5

         அழுது வருந்தினாரே அடைவர் பேரின்பம்
443
உழுது புண்செயப் புன்செயும் நன்செயா முயர்பொன்
முழுதுந் தீயினிற் சுடச்சுட வொளிருமால்* மொழியும்
பழுதின் மாமணி தேய்பட வொளிமிகும் படர்கொண்டு
அழுது நொந்தவர்க் கன்றிமற் றவர்க்கற மரிதே.
 உழுது புண்படுத்துவதுபோல் மண்ணைக்கிளறப் புன்செயும் நன்செய்யாம். உயர்ந்த தங்கத்தைத் தீயினில் புடம் வைத்துச் சுடச்சுட ஒளிவிட்டு மாற்றுயரும். புகழ்ந்து சொல்லப்படும் குற்றமற்ற பெரிய ஒளிக்கல் சாணையிற்பட்டுத் தேய்வுற விளக்கம் மிகும். இவைபோல் துன்பங்கொண்டு கண்ணீர் வார்ந்து வருந்தியவர்களுக்கு அல்லாமல் மற்றவர்கட்கு நிலைத்த இன்பத்திற்கேதுவாகிய நன்மையை மேற்கொள்வது முடியாது.
 
*சுடச்சுடரும். திருக்குறள். 267