பக்கம் எண் :

148சித்தர் பாடல்கள்

27.கற்புக் குலைத்தமையும், கருவோ அறுத்தமையும்,
பொற்புக் குலைத்தமையும், போதம் இழந்தமையும்.
  
28.என்ன வினைவருமோ! இன்னம் எனக்கு என்றறியேன்!
சொன்ன சொல் எல்லாம் பலித்ததடி! சோர்வறவே.
  
29.கங்குல்பகல் அற்றிடத்தைக் காட்டிக் கொடுத்தாண்டி!
பங்கம் அழித்தாண்டி! பார்த்தானைப் பார்த்திருந்தேன்.
  
30.சாதியில் கூட்டுவரோ? சாத்திரத்துக்கு உள்ளாமோ?
ஓதிஉணர்ந்ததெல்லாம் உள்ளபடி ஆச்சுதடி!
  
31.என்ன குற்றம் செய்தேனோ எல்லாரும் காணாமல்,
அன்னை சுற்றம் எல்லாம் அறியாரோ அம்புவியில்?
  
32.கொன்றாரைத் தின்றேனோ? தின்றாரைக் கொன்றேனோ?
எண்ணாத எல்லாம் எண்ணும் இச்சை மறந்தேனோ?
  
33.சாதியில் கூட்டுவரோ? சமயத்தோர் எண்ணுவரோ?
பேதித்து வாழ்ந்ததெல்லாம் பேச்சுக்கு இடமாச்சுதடி?
  
34.கண்டார்க்குப் பெண்ணலவோ? காணார்க்கும் காமமடி!
உண்டார்கள் உண்டதெலாம் ஊணல்ல துண்டர்களோ?
  
35.கொண்டவர்கள் கொண்டதெல்லாம் கொள்ளாதார்
                                    கொள்ளுவரோ?
விண்டவர்கள் கண்டவரோ? கண்டவர்கள் விண்டவரோ?
  
36.பண்டாய நான்மறைகள் பாடும் பரிசலவோ?
தொண்டாய தொண்டர்உளம் தோற்றி ஒடுங்குமதோ.
  
37.ஓத எளிதோ? ஒருவர் உணர்வரிதோ?
பேதம்அற எங்கும் விளங்கும் பெருமையன்காண்.
  
38.வாக்கும் மனமும் கடந்த மனோலயன் காண்!
நோக்க அரியவன் காண்; நுண்ணியரில் நுண்ணியன் காண்!
  
39.சொல்லுக்கு அடங்கான் காண்! சொல்லிறந்து நின்றவன் காண்!
கல்லுள் இருந்த கனல்ஒளிபோல் நின்றவன் காண்!