மூண்டெரியும் அக்கினிக்குள்ளே மூழ்கிவருவோம், தண்ணீருக்குள் மூச்சடக்கியும் இருப்போம், இந்த நிலவுலகை மட்டுமல்லாது இன்னுமுள்ள உலகமத்தனையும் பொன்மயமாக்கிக் காட்டுவோம், பிரம்மா போல புதுப்புது உயிர்களைப் படைத்துக் காட்டுவோம், சூரியனின் செங்கதிரையும் நிலவைப் போல தன்கதிராய் மாற்றிக் காட்டுவோம், கொடிய மிருகங்களான புலி, யானை, யாளி, சிங்கம் முதலான விலங்குகளை எங்களுக்குக் குற்றேவல் செய்யச் சொல்லுவோம். சக்தி வாய்ந்த கடவுளுக்குச் சமமாக நாங்கள் இருப்பதால் அவரை எங்களுடன் விளையாடவும் அழைப்போம், இந்த உலகத்தை இல்லாமற்கூட செய்து காட்டுவோம், எத்தனை பெரிய வித்தகரும் அறுபத்து நான்கு கலைகளை மட்டுமே அறிவார். நாங்களோ அதற்கும் மேலாக ஒரு கலையையும் அறிவோம். இதற்கெல்லாம் காரணம் நாங்கள் இறைவன் மேல் பற்றும் ஏனைய பொருள்களின் மேல் பற்றும் இல்லாதவர்களாயிருப்பதே என்று சித்தர்களின் வல்லபத்தைக் கூறி முடிக்கின்றார் பாம்பாட்டிச் சித்தர். பாம்பாட்டிச்சித்தரின் விடுகதைகள் பெரும்பாலானப் பாடல்கள் விடுகதை நோக்கிலேயே அமைந்துள்ளன. உதாரணமாக சருர குணம் சொல்லும் பகுதியில், பரியாசம் போலவே கடித்த பாம்பு பலபேரறியவே மெத்தவீங்கிப் பரியார மொருமாது பார்த்தபோது பையோடே கழன்ற தென்றாடாய் பாம்பே என்ற பாடலில் பெண்ணொருத்தி விளையாட்டு போலவே ஆடவனொருவனைப் புணர அது கர்ப்பமாய் உருக்கொள்ள இதற்குப் பரிகாரம் என்னவென்று யோசிக்கும் வேளையில் |