பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்281


    என்ன அருமையான சொல்லாட்சி. இலக்கணம் பிறழாமல் அதே சமயம்
எளிமை கூட்டி பாடலின் வரிகளைக் கொண்டு இவர் பிற்கால சித்தராயிருக்க
வேண்டும் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.

     ஏழை ஆண்டி ஒருவன் தினசரி பிச்சையேற்று உண்பவன். தனக்கென்று
ஏதும் வைத்துக்கொள்ளாத அவன் ஒருநாள் நந்தவனமொன்றைக் காண்கிறான்.
என்ன வித விதமான வண்ண மலர்கள். வாசம் மிகுந்த மலர்கள் தனிமையில்
இங்கு அமர்ந்து இயற்கையை ரசிப்பது எவ்வளவு சுகமாக இருக்கிறது. அருகில்
ஒரு  சேய்குளம்.  நிறைந்துதான்  இருக்கிறது ஆனாலும் என்ன பயன்? செடி
கொடிகளுக்குத்   தேவையான  நீர்   வானம்  மழைப்  பொழியும்  போது
மட்டுந்தானே  கிடைக்கிறது.  குளம்  நிறைய  தண்ணீர்  இருந்தாலும் வான்
மழையை  மட்டுமே  எதிர்பார்த்துக்  காத்திருக்கும்  இந்த  நந்தவனத்திற்கு
குளத்து நீரை தினசரி ஊற்றினால் எவ்வளவு செழுமையாக இருக்கும்?

     ஆண்டியின்    கற்பனை   அளவுக்கு  அதிகமானதுதான்.  அதனைச்
செயலாக்கிப்  பார்த்தால்தான்  என்ன?  பக்கத்து  ஊரில்  உள்ள  குயவன்
ஒருவனைப் பார்க்கிறான்.  தனக்குக் குடம் ஒன்று  வனைந்து கொடுக்குமாறு
கேட்கிறான்.

     குயவன்  ஆண்டியை  மேலும்  கீழுமாகப்  பார்க்கிறான். அவனுக்குச்
சிரிப்புதான் வருகிறது.

     “ஏன் சிரிக்கிறீர்?”

     “நீயோ  ஆண்டி,  உனக்கெதற்கய்யா தோண்டி?” குயவன் குசும்பாகக்
கேட்டான்.

     “உனக்கெதற்கு அந்தக் கதையெல்லாம். தோண்டி கேட்டால் கொடுக்க
வேண்டியதுதானே? எதற்கு தேவையற்ற கேள்வி?”