பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்347








1.

வாலைக்கும்மி

விநாயகர் துதி

பின் முடுகு வெண்பா

கல்விநிறை வாலைப்பெண் காதலியென் றோதுகின்ற
செல்வியின் மேற் கும்மிதனைச் செப்புதற்கே - நல்விசய
நாதனின்சொல் வேதனஞ்சு போதன்மிஞ்சி மானகஞ்ச
பாதம் வஞ்ச நெஞ்சினில்வைப் போம்.

  


2.

கும்மி

சத்தி சடாதரி வாலைப்பெண் ணாமந்த
     உத்தமி மேற் கும்மிப் பாட்டுரைக்க
வித்தைக் குதவிய வொற்றைக்கொம் பாம்வாலை
     சித்தி விநாயகன் காப்பாமே.

  


3.

சரஸ்வதி துதி

சித்தர்கள் போற்றிய வாலைப் பெண் ணாமந்த
     சத்தியின் மேற்கும்மிப் பாட்டுரைக்கத்
தத்தமி தோமென ஆடுஞ் சரஸ்வதி
     பத்தினி பொற்பதங் காப்பாமே.

  


4.

சிவபெருமான் துதி

எங்கும் நிறைந்தவள் வாலைப்பெண் ணாம்மாலின்
     தங்கையின் மேற்கும்மி பாடுதற்குக்
கங்கை யணிசிவ சம்புவாஞ் சற்குரு
     பங்கயப் பொற்பதங் காப்பாமே.

  


5.

சுப்பிரமணியர் துதி

ஞானப்பெண் ணாமருள் சோதிப்பெண் ணாமாதி
     வாலைப்பெண் மேற்கும்மி பாடுதற்கு
மானைப் பெண் ணாக்கிய வள்ளிக் கிசைந்திடும்
     மால்முரு கேசனுங் காப்பாமே.