பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்577


     அண்டத்துக்குள்ளே  அனாதி பரவெளியைக் கண்டறிந்து கொண்டேன்,
கவலையை விட்டேன் என்று தாமறிந்த இன்பத்தைப் பாடலாக வடித்துள்ளார்.

கண்ணிகள்

அக்கரங்கள் தோன்ற அருள்கொடுக்கும் பூரணிஎன்
பக்கம் இருந்து பலகலையும் சொல்வாளே.

1
  
வாலை அபிராமி மாரிதிரி சூலிஅருட்
பாலை எனக்கருளும் பார்வதியின் தாள்போற்றி
2
  
அம்பிகையால் சோதரி என்னாத்தாள் திருப்பாதம்
கும்பிட்டு ஞானக் குயிற்கண்ணி கூறுவனே.
3
  
ஓங்கார வட்டமதின் உட்பொருள்கண் ஓர்ந்ததற்பின்
நீங்காத ஆசை நிலைக்குமோ மாங்குயிலே.
4
  
இயம்பும் இடைகலைக்கும் இன்பதாம் பிங்கலைக்கும்
சுயமாம் சுழிமுனையுந் தோற்றுமடி மாங்குயிலே.
5
  
ஆன்மா பரத்தோடு அமருந் திருக்கூத்தை
நான்வாயி னாலே நவில்வனோ மாங்குயிலே.
6
  
அஞ்செழுத்தைக் கண்டு அதன் உண்மை யும்தெரிந்து
வஞ்சகங்கள் அற்று மகிழ்ந்திருந்தேன் மாங்குயிலே.
7
  
சூரியனும் சந்திரனும் தோன்றும் இடைநின்றே
பூரித்து னந்த போகமுற்றேன் மாங்குயிலே.
8
  
ஊமையெழுத் தாலேதான் ஓங்கார மாகினதைச்
சீமையிலுள் ளோர்கள் தெரிவரோ மாங்குயிலே.
9
  
முப்பாழும் தாண்டி முடிவின் இடந்தாண்டி
அப்பாழும் தாண்டின் அறிவுளதோ மாங்குயிலே.
10
  
அட்டாங்க யோக மறிந்து தெரிந்தபின்பு
வெட்டவெளி யுண்மை விளங்குமே மாங்குயிலே
11
  
ஆறாதா ரத்தில் அறிவை மிகச்செலுத்திச்
சீராய்த் தவசிலிருந்து சிக்கறுத்தோம் மாங்குயிலே.
12
  
துர்க்குணத்தைச் சுட்டறுத்துச் சூட்ம நிலைதெரிந்து
நற்குணத்தோடு எண்டியங்கு நானிருந்தேன் மாங்குயிலே.
13