பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்591


34.காயக்கப்பல்

     வெறும் கட்டாந்தரையிலே நின்றிருக்கும் கப்பலால் ஏதும் பயனுண்டா?
அஃது நீரில் இறங்கி மிதந்தால் அல்லவோ அதனுள் பயணம் செய்யும் பயன்
கிடைக்கும்.

   பஞ்சபூதப் பலகையைக் கப்பலாய்ச் சேர்ந்து கொடிக் கம்பத்தில் பாய்மரம்
கட்டி  நெஞ்சு,  மனம்,  புத்தி,  ஆங்காரச்  சித்தம்  இவைகளைக் கயிறாகச்
சேர்த்து,   ஐந்தெழுத்தை   ‘சிவாயநம’  பாயாக  விரித்து  ஐம்புலன்களைச்
சுக்கானாகக்  கொண்டு  இந்த உடலாகிய  அகண்ட ரதம் போகுதடா பயலே!
இதை  நீர்  கருணைக்கடலிலே தள்ளு;  பரிபூரணம் எனும் சுக்கானால் வலி;
திக்கு திசையெங்கும் களைப்புத் தெரியாமல் திருமந்திரம் சொல்லித் தள்ளு.

     தந்தை, தாய், சுற்றம் முதலான  சகலமும் துறந்து, பந்த பாசம் மறந்து,
பதினாறு லோகமும் மறந்து,  இந்தியர்கள்  இரட்சித்த கப்பலிலே  ஏகாந்தக்
கடலிலே அந்திரமான அருளானந்த வெள்ளத்திலே காயக்கப்பலைத் தள்ளிப்
பயணம் செய்து இறைவனைச்  சந்திப்பாயாக  என்று  ‘காயக்கப்பல்’ பாடல்
தெரிவிக்கின்றது.

     சித்தர்  பாடல்  தொகுப்பிலே  காணப்படும்  இந்த  அபூர்வ  பாடல்
தொகுப்பு  யார் பாடியது என்பது தெரியவில்லை. ஒருசில நூல்கள் இதனைத்
திருவள்ளுவ  நாயனார்  இயற்றியது   என்று  யூகமாகக்  கூறினாலும்  இது
பிற்காலத்துச்  சித்தர்  பாடல்  என்பது  இதன்  சொற்பொருள்,  நடையைக்
கூர்ந்து நோக்கின் புலனாகும்.

     சித்தர்   பெயர்   தெரியாவிடினும்   சித்தர்   பாடல்   காயதத்துவம்
உணர்த்துகின்றது.