பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்95


2. பட்டினத்தார் பாடல்

      இளமை  முதலே  இவர் வாழ்வில் அற்புதங்கள் பல நிகழ்ந்ததாய்ச்
சொல்லப்படுகின்றது.  வானுலக  தேவர்களில்  ஒருவரான  குபேரன் தான்
இப்பூவுலகில்  பட்டினத்தாராக   அவதரித்தார்  என்று  திருவெண்காட்டுப்
புராணம்  கூறும்.  இவரது பெற்றோர்கள் சிவநேசன்-ஞானகலாம்பை ஆவர்.
இவர்களின் தவப்பயனாய்ப் பிறந்தவரே பட்டினத்தார். இவருக்குப் பெற்றோர்
வைத்த பெயர் திருவெண்காடர்.

     கப்பல் வணிகம் மூலம்  பெரும் பொருள் ஈட்டிய சிவநேசர் காலமாக
உரிய  வயதில்  ஞானகலாம்பை  சிதம்பரச் செட்டியார் சிவகாமியம்மையின்
புதல்வியான சிவகலை என்பவரை திருவெண்காடருக்கு மணமுடித்தார்.

     இல்லற  வாழ்க்கை   இனிதே   நடந்தாலும்  குழந்தையில்லா  ஏக்கம்
திருவெண்காடரை வாட்டியது. இறைவனிடம் முறையிட்டார். இறைவன் தாமே
குழந்தை  வடிவாய்  சிவசருமர்  என்ற சிவபக்தர் மூலம் திருவெண்காடரைச்
சேர்ந்தார். அன்பு மகனை மருதபிரான் என்று பெயரிட்டு வளர்த்தார்.

     குழந்தை    பெரியவனானதும்   வியாபாரம்   செய்ய   அனுப்பினார்.
திரைகடலோடித்  திரவியம்  தேடிச்  சென்ற  மருதவாணன் கப்பல் நிறையத்
தவிடு மூட்டையும் வரட்டிகளையும் ஏற்றிக்கொண்டு திரும்பி வந்தான்.