பட்டமரம்
மொட்டைக் கிளையோடு
நின்று தினம்பெரு
மூச்சு விடும்மரமே!
வெட்டப் படும்ஒரு
நாள்வரு மென்று
விசனம் அடைந்தனையோ?
குந்த நிழல்தரக்
கந்த மலர்தரக்
கூரை விரித்தஇலை!
வெந்து கருகிட
இந்த நிறம்வர
வெம்பிக் குமைந்தனையோ?
கட்டை யெனும்பெயர்
உற்றுக் கொடுந்துயர்
பட்டுக் கருகினையே!
பட்டை யெனும்உடை
இற்றுக் கிழிந்தெழில்
முற்றும் இழந்தனையே!
காலம் எனும்புயல்
சீறி எதிர்க்கக்
கலங்கும் ஒருமனிதன்
ஓலமி டக்கரம்
நீட்டிய போல்இடர்
எய்தி உழன்றனையே!
|