பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 113

சோவியத் யூனியனுக்கு இந்தியாவின் கடிதம்

நேற்றுவரை இடர்
என்ற கடல், இடை
நீண்டு கிடந்தது காண்! - நம்
நெஞ்சங்க ளாகிய
கப்பல்களில் இன்று
நேயம் படர்ந்தது காண்!
தோற்றுத் தொலைந்த
அடிமைத் தளைகளின்
தொல்லை அகன்றது காண்! - நம்
தோழமை என்கின்ற
மாங்குயில் வாழ்த்தைத்
தொடர்ந்து புகன்றது காண்!

“நாம் - இருவர்” எனும்
நட்பு வளர்ந்து போய்
நற்புகழ் பெற்றது காண் - வரும்
நாளில் உலகினர்
யாரும் மகிழ்ந்திட
நல்லுற வுற்றது காண்!

“ஆம், இருவர், இவர்
சோவியத் - யூனியன்!
இந்தியா! என்ற நண்பர்!
அன்றும் இன்றும் இனி
என்றும் இவர் நலன்
ஒன்”றென் றொலி கிளம்பும்!

‘தமிழர் நாடு’ - 1960