பக்கம் எண் :

116தமிழ்ஒளி கவிதைகள்2

ஆணை

எங்கள் தலைவன்! இதயப் பெருவீட்டில்
திங்கள் விளக்காய்த் திசையிற் சுடர்வீசி,

வானவரும் கைகூப்ப வாழ்ந்த பெருந்தலைவன்!
ஞானமணிக் கூண்டில் நாதம் எழுப்பியவன்!

ஆயிரம் ஆண்டுகட்கும் அப்பாலே அப்புறம்ஓர்
ஆயிரம் சென்றாலும் யார்பிறப்பார் அன்னவன்போல்?

அன்பை வளர்த்தான்! அறநெறியைக் கைப்பிடித்தான்!
வன்பகையை வென்றான்! வரலாறு கூறாதோ?

பாரதத்தைப் பொன்னுலகாய்ப் பார்க்கத் துடிதுடித்தான்!
பேரறிஞன்! அன்னோன் பெருமை சிறிதாமோ?

எல்லா உலகும் இதயம் துடிதுடிக்கப் 
பொல்லா மரணப் புயலில் அவன்சாய்ந்தான்!

சாய்ந்தாய் எனில்உன்றன் சக்கரம் சுற்றுதையா!
மேய்ந்த பகைவர்க்கு மேலே சுழலுதையா!

கூடு மறைந்ததெனிற் கொள்கை மறையவில்லை!
நாடு மறையவில்லை! நாங்கள் இருக்கின்றோம்!

உன்றன் அறநெறியில் ஊன்றி அடிவைப்போம்!
வென்று புகழ்காப்போம்! வீரனே! ஆணைஐயா!

‘தமிழ் சினிமா’ - 1964