|
அடக்குமுறைச் சட்டத்தை அவிழ்த்து விட்டார்!
அங்கங்கே தோட்டிகளைப் பிடித்து வந்து
கிடத்திடுவீர் போலீசில் என்றார்; ஓடிக்
கிடுகிடெனப் பிடித்தார்கள் போலீஸ் காரர்!
அடைத்தார்கள் இருட்டறையில் ‘உமது கொட்டம்
அடக்கிடுவோம்’ எனச்சொல்லி மடக்கி னார்கள்
புடைத்தார்கள் எலும்பொடிய “சுதந்தி ரத்தின்
பொருளிதுவா” எனச் சொல்லி அழுதான் ஏழை!
அறம்வளரும் நாட்டினிலே சோறு கேட்டால்
அடிஉதைகள்! அசோகரின் சாந்த மார்க்கம்
பறக்கிறது கொடியினிலே! ஏழை மக்கள்
பட்டினிக்கு அடக்குமுறை உணவு போலும்!
சிறைபோன்ற அரசாங்கம் ஜன்னி கொண்டு
சிதைத்ததடா ஏழைகளின் குடிசை தன்னை
முறையின்றி அவர்தம்மைப் பிடித்து வந்து
முயல்போல அடைத்ததடா கோட்டத் திற்குள்!
காதலரும் தந்தையரும் உடன்பி றந்த
காளையரும் போலீசில் அடைபட் டுப்போய்
வேதனையை அடைவதனைப் பார்த்துக் கொண்டு
வீட்டினிலே இருப்பாரோ ஏழைப் பெண்கள்?
‘சாதலிலும் ஒன்றாக வருவோம்’ என்றே
தண்டனையைத் தூசியென மதித்துக் கூடிக்
காதகராம் போலீசார் முன்னே சென்று
கடல்போலே நிறைந்தார்கள் உணர்ச்சி யாலே!
“கணவர்தமைப் பிரிந்திருக்க ஒப்ப மாட்டோம்
காளையராம் உடன்பிறந்தோர் துன்பம் எய்த
வணங்கிஉயிர் வாழயாம் விரும்ப மாட்டோம்
வரவிடுவீர் வெளியினிலே அவரை யெல்லாம்-
பிணந்தின்னும் கழுகுகளே விடுவீர்” என்று
பிள்ளைகளைக் கக்கத்தில் வைத்துக் கொண்டு
தணல்விழியைப் பாய்ச்சினார் போலிசின் மேல்
தலைச் சிகப்புப் புலிகளுக்கோ மூக்கில் கோபம்!
|