|
போர்க் கொடி
மண்ணிடையே நம்வாழ்க்கை வண்ண மலர்சூட
விண்ணிடையே நம்முடைய வெற்றிக் கொடியாட
கதிர்பாய்ந்த மாகடலாய்க் காட்சி வரைகின்ற
புதியதமிழ் நாட்டுப் பொற்சுடரை நாமடையப்
போராடும் நேரமிது! பொங்கும் புரட்சியலை
நீராடி மக்கள் நிமிர்கின்ற நேரமிது!
நண்ணுந் தொழிலாளர் நல்லுரிமை யத்தனையும்
கண்ணும் மணியும்போல் காக்கின்ற கட்சிக்கு
வெற்றியென்று சொன்னோர் விசனமுற ஆட்சியைக்கைப்
பற்றுகின்ற காங்கிரசை பற்றிக் கிழித்தெறியக்
கண்கள் நெருப்பாய்க் கனல்கின்ற நேரமிது!
தன்குமரி எல்லைதனைச் சார்ந்த தமிழகத்தில்
எல்லாம் தமிழர்க்கே! என்றெழுந்த போர்முரசம்
எல்லோரும் கேட்டே எழுகின்ற நேரமிது!
செந்தமிழர் நாட்டின் திருநகராம் சென்னையிலே
முந்துகின்ற பேரெழுச்சி மோதுகின்ற நேரத்தில்
நத்திப் பிழைக்கஇங்கு நாய்போன்று வந்துநமைக்
கொத்திப் பிழைக்கின்ற கும்பலிலே ஓர்கழுகு
ஓடுகின்ற ‘ட்ராமை’ ஒருநொடியில் கைப்பற்றி,
நாடுவருந்த நமைஎதிர்க்க வந்தது காண்!
ஓடிவிட்ட வெள்ளையனின் ஒருலட்சம் கொண்டமுதல்
கோடியாய் மேடிட்டுக் கோபுரமாய் ஓங்கியபின்,
‘லாபமில்லை’ என்றுரைக்கும் நாவையிரு துண்டாக்கக்
கோபமொடு செந்தமிழர் கொட்டுகின்றார் போர் முரசு!
நித்தநித்தம் ‘ட்ரா’மோடு நின்றுநின்று கால்கடுக்க,
சித்தம் தளராமல் செய்தொழிலில் ஊக்கமொடு,
கண்கள் வழியோடக் கானலொடு ‘ட்ரா’மோட,
எண்ணற்ற இன்னலிலே தேகம் இளைத்தோட,
சிந்தும் வியர்வையிலே தேசநலன் பெருக,
அந்தத் தொழிலாளர் ஆண்டுதொறும் பாடுபட
ஒன்றுக்கு நூறாய் உயர்ந்ததொரு லாபமெனும்
குன்றுக்கு மேலே குதித்தாடும் பேய்க்கழுகு!
|