|
நம்பிக்கை
(வழி நடைச் சிந்து)
காலம் புரிந்த வடுமாற்றி - நம்
கைகள் இணைத்துத் துயர்ஆற்றி
சீலம் காட்டும் வழியிற்
செல்லுவோம்
செல்லுவோம் - பாரதம்,
சீனம் இணைந்த நட்பால்
வெல்லுவோம்
வெல்லுவோம்!
நேருவும், சூவும் இன்றுபேசி - மக்கள்
நெஞ்சினில் விளக்கொளியை வீசி
வேருடன் வெம்பகையை
வீழ்த்துவார்
வீழ்த்துவார் - வரும்
வெற்றியை மாந்த ரெல்லாம்
வாழ்த்துவார்
வாழ்த்துவார்!
போரெனும் பேயைமண்ணில் ஓட்டி - அன்புப்
புரவியை ஞானரதம் பூட்டிப்
பாரெனும் பெண்ணை மணஞ்
சூட்டுவோம்
சூட்டுவோம் - நட்புப்
பாலகனை ஈன்றுதால்
ஆட்டுவோம்!
ஆட்டுவோம்!
பனியில் உறைந்த எல்லை பாரோம் - நம்
பண்பில் உறைந்த எல்லை மீறோம்
இனியும் இன்னலை யார்
விரும்புவார்
விரும்புவார் - மண்
இன்புற நன்னெறி
திரும்புவார்!
திரும்புவார்!
|