|
நிலவைப்
பிடித்தார்
நிலவைப் பிடித்துவிட்டார் - அதன்
நெற்றியில் வெற்றிக் கொடியைநட்டார்!
உலகே விழித்தெழுவாய் - திறன்
உன்கையில் இருக்கையில் ஏன்அழுவாய்
எட்ட இருந்துகொண்டே - புவி
எட்டி எட்டிப்பார்த்த வெண்மதியைத்
தொட்டது செங்கொடியே - ஆ!
தூரம் எலாம்இனி பொடிப் பொடியே!
நேற்றுப் பிறந்ததடா - எனில்
நீதியின் ஆற்றல் சிறந்ததடா?
போற்றும் பொதுவுடைமை - அலை
பொங்கிக் கிளர்ந்தது சோவியத்தில்!
மலையின் உடற்பிளந்தார் - வைர
மணிகள் பெரும்படியாய் அளந்தார்!
அலையின் குடற்பிளந்தார் - பல்
லாயிரம் விந்தைசெய வளர்ந்தார்!
பாலை நிலத்தினையே - எழிற்
பட்டுடை போர்த்த திருமகளாய்ச்
சோலையாய்த் தேற்றி வைத்தார் - ஒரு
சூத்திரப் பாவையாய் மாற்றிவைத்தார்!
எண்ணெய் வயல்மடுத்தார் - துயர்
ஏழைமை என்றதுயர் தடுத்தார்!
வெண்ணெய், நெய், பால் கொணர்ந்தார் - பசி
வீழ்ந்திட விளைச்சலின் வேல்கொணர்ந்தார்!
வளரும் பொதுவுடைமை - தரும்
வண்மையால், திண்மையால் இப்புவியைக்
கிளரும் புதுவுலகாய் - அவர்
கீர்த்திக் குறைவிடம் ஆக்கிவைத்தார்!
|