|
நவம்பர் புரட்சிக்கு
நல்வாழ்த்துக்கள்!
நோயெனும் தனியுடமை
நுகத்தடி அதுமுறியப்
பேயெனும் ஜார்அரசன்
பெருந்துயர் போய்ஒழியத்
தீயெனும் சுடருடனே
திசைகளின் இடர்கெடவே,
தாயெனும் பொதுவுடைமை
ஜனித்தது நவம்பரிலே!
பண்டைய ஞானியரின்
பண்புறு கனவுகளைக்
கொண்டொரு கொடியுடனே
கொடுமைகள் இடிபடவே
மிண்டிய பொதுவுடைமை
மேற்றிசை கீழ்த்திசையில்
மண்டிய உருசியர்தம்
மண்மிசை பூத்ததடா!
தொல்லைசெய் அடிமையெனுந்
துயரது மண்ணில்இனி
இல்லையென் றுறுதியுடன்
எழுப்பிய முரசொலிபோல்
நல்லிவர் அருள்உளமே
நல்கிய வாள்அதுபோல்
வல்லமை கொண்டுதர
வந்தது பொதுவுடைமை!
போர்இருள் அறுபடவே
பொய்த்தளை அறுபடவே
நேர்வரும் தத்துவமாய்,
நெஞ்சுறை தத்துவமாய்,
வேர்விடும் ‘ஆல்’ எனவே
விளங்கிய பொதுவுடைமை
பார்மிசை எழுந்ததுபார்!
பரிதியின் சுடர்அதுபோல்!
|