பக்கம் எண் :

28மலரும் உள்ளம்

அப்பாவுக்குச் சட்டைத்துணி
      சின்னமாமா - ஓர்
ஆறுகெஜம் வாங்கிவாராய்,
      சின்னமாமா.

தாத்தாவுக்கு ஊன்றிச்செல்ல
      சின்னமாமா - நல்ல
தந்தப்பிடிக் கம்புவேண்டும்,
      சின்னமாமா.

பல்லேயில்லாப் பாட்டிக்குநீ
      சின்னமாமா - இரு
பல்வரிசை வாங்கிவாராய்,
      சின்னமாமா.

எனக்கும்ஒரு "சைக்கிள்"வண்டி
      சின்னமாமா - நீ
இல்லையென்றால் விடவேமாட்டேன்,
      சின்னமாமா.

சொன்னதெல்லாம் மறந்திடாமல்
      சின்னமாமா - உனது
துணியைச்சுற்றி முடிச்சுப்போடு,
      சின்னமாமா!