பக்கம் எண் :

பாமாலை : பக்தி பாடல்கள்


தோத்திரப் பாடல்கள்

முருகன் பாட்டு

[ராகம் -- நாட்டைக் குறிஞ்சி] [தாளம் -- ஆதி]

பல்லவி

முருகா -- முருகா -- முருகா

சரணங்கள்



வருவாய் மயில் மீதினிலே
வடிவே லுடனே வருவாய்
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும்.
(முருகா) 1

அடியார் பலரிங் குளரே
அவரை விடுவித் தருள்வாய்
முடியா மறையின் முடிவே! அசுரர்
முடிவே கருதும் வடிவே லவனே!
(முருகா) 2

சுருதிப் பொருளே, வருக.
துணிவே, கனலே, வருக.
கருதிக் கருதிக் கவலைப் படுவார்
கவலைக் கடலைக் கடியும் வடிவேல்
(முருகா) 3

அமரா வதிவாழ் வுறவே
அருள்வாய்! சரணம், சரணம்!
குமரா, பிணியா வையுமே சிதறக்
குமுறும் சுடர்வே லவனே, சரணம்.
(முருகா) 4

அறிவா கியகோ யிலிலே
அருளா கியதாய் மடிமேல்
பொறிவே லுடனே, வளர்வாய், அடியார்
புதுவாழ் வுறவே புவிமீ தருள்வாய்.
(முருகா) 5

குருவே, பரமன் மகனே,
குகையில் வளருங் கனலே,
தருவாய் தொழிலும் பயனும், அமரர்
சமரா திபனே, சரணம், சரணம்.
(முருகா) 6