பக்கம் எண் :

காவியங்கள் : கற்பனையும் கதையும்


குயில்


காதலோ காதல்

கண்டதொரு காட்சி கனவுநன வென்றறியேன்,
எண்ணுதலுஞ் செய்யேன், இருபதுபேய் கொண்ட வன்போல்
கண்ணும் முகமும் களியேறிக் காமனார்
அம்பு நுனிகள் அகத்தே யமிழ்ந்திருக்க,
கொம்புக் குயிலுருவங் கோடிபல கோடியாய்
5

ஒன்றே யதுவாய் உலகமெலாந் தோற்றமுற்,
சென்றே மனைபோந்து சித்தந் தனதின்றி,
நாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும்
தாளம் படுமோ? தறிபடுமோ? யார்படுவார்?
நாளொன்று போயினது. நானு மெனதுயிருமம்,
10


நீளச்சிலை கொண்டு நின்றதொரு மன்மதனும்,
மாயக் குயிலுமதன் மாமாயத் தீம்பாட்டும்,
சாயைபோ லிந்திரமா சாலம்போல் வையமுமா
மிஞ்சிநின்றோம் ஆங்கு, மறுநாள் விடிந்தவுடர்,
(வஞ்சனைநான் கூறவில்லை) மன்மதனார் விந்தையால்,

15

புத்திமனஞ் சித்தம் புலனொன் றறியாமல்,
வித்தைசெயுஞ் சூத்திரத்தின் மேவுமொரு பொம்மையென,
காலிரண்டுங் கொண்டு கடுகவுநான் சோலையிலே
நீலிதனைக் காணவந்தேன். நீண்ட வழியினிலே
நின்றபொருள் கண்ட நினைவில்லை. சோலையிடைச்
20

சென்றுநான் பார்க்கையிலே, செஞ்ஞாயிற் றொண்கதிரால்
பச்சைமர மெல்லாம் பளபளென, என்னுளத்தின்
இச்சை யுணர்ந்தனபோல் ஈண்டும் பறவையெலாம்
வேறெங்கோ போயிருப்ப, வெம்மைக் கொடுங்காதல்
மீறவெனைத் தான்புரிந்த விந்தைச் சிறுகுயிலைக்
25

காணநான் வேண்டிக் கரைகடந்த வேட்கையுடன்
கோணமெலாஞ் சுற்றிவரக் கொம்பையெலாம்
நோக்கி வந்தேன்.