பக்கம் எண் :

காவியங்கள் : கற்பனையும் கதையும்


விதுரன் சொல்வது

வேறு

நன்றாகும் நெறியறியா மன்னன் அங்கு
நான்குதிசை அரசர்சபை நடுவே, தன்னைக்
கொன்றாலும் ஒப்பாக வடுச்சொற் கூறிக்
குமைவதனில் அணுவளவுங் குழப்ப மெய்தான்;
‘சென்றாலும் இருந்தாலு இனிஎன் னேடா?
செய்கைநெறி அறியாத சிறியாய், நின்னைப்
பொன்றாத வழிசெய்ய முயன்று பார்த்தேன்;
பொல்லாத விதிபுன்னைப் புறங்கண் டானால்!
9

‘கடுஞ்சொற்கள் பொறுக்காத மென்மைக் காதும்
கருங்கல்லில் விடந்தோய்த்த நெஞ்சுங் கொண்டோர்
படுஞ்செய்தி தோன்றுமுனே படுவர் கண்டாய்.
“பால்போலும் தேன்போலும் இனிய சொல்லோர்
இடும்பைக்கு வழிசொல்வார்; நன்மை காண்பார்
இளகுமொழி கூறார்” என் றினைத்தே தானும், --
நெடும்பச்சை மரம்போலே வளர்ந்து விட்டாய் --
நினக்கெவரும் கூறியவரில்லை கொல்லோ?
10

‘நலங்கூறி இடித்துரைப்பார் மொழிகள் கேளா
நரபதி, நின் அவைக்களத்தே அமைச்ச ராக
வலங்கொண்ட மன்னரொடு பார்ப்பார் தம்மை
வைத்திருத்தல் சிறிதேனுந் தகாது கண்டாய்.
சிலங்கைப்பொற் கச்சணிந்த வேசை மாதர்
சிறுமைக்குத் தலைகொடுத்த தொண்டர், மற்றுங்
குலங்கெட்ட புலைநீசர், முடவர், பித்தர்,
கோமகனே, நினக்குரிய அமைச்சர் கண்டாய்!
11

‘சென்றாலும் நின்றாலும் இனிஎன் னேடா?
செப்புவன நினக்கெனநான் செப்பி னேனோ?
மன்றார நிறைந்திருக்கும் மன்னர், பார்ப்பார்,
மதியில்லா மூத்தோனும் அறியச் சொன்னேன்.
இன்றோடு முடிகுவதோ? வருவ தெல்லாம்
யானறிவேன், வீட்டுமனும் அறிவான், கண்டாய்.
வென்றான்உள் ஆசையெலாம் யோகி யாகி
வீட்டுமனும் ஒன்றுரையா திருக்கின்றானே.
12

‘விதிவழிநன் குணர்ந்திடினும், பேதை யேன்யான்
வெள்ளைமன முடைமையினால், மகனே, நின்றன்
சதிவழியைத் தடுத்துரைகள் சொல்லப் போந்தேன்.
சரி, சரிஇங் கேதுரைத்தும் பயனொன் றில்லை.
மதிவழியே செல்லு’கென விதுரன் கூறி
வாய்மூடித் தலைகுனிந்தே இருக்கை கொண்டான்.
பதிவுறுவோம் புவியிலெனக் கலிம கிழ்ந்தான்,
பாரதப்போர் வருமென்று தேவ ரார்த்தார்.
13