பக்கம் எண் :

காவியங்கள் : கற்பனையும் கதையும்

திரௌபதியைத் துரியோதனன் மன்றுக்கு
அழைத்து வரச் சொல்லியதுபற்றி
ஜகத்தில் உண்டான அதர்மக் குழப்பம்


வேறு
தருமம் அழிவெய்தச் சத்தியமும் பொய்யாக,
பெருமைத் தவங்கள் பெயர்கெட்டு மண்ணாக,
வானத்துத் தேவர் வயிற்றிலே தீப்பாய,
மோன முனிவர் முறைகெட்டுத் தாமயங்க,
வேதம் பொருளின்றி வெற்றுரையே யாகிவிட,
நாதம் குலைந்து நடுமையின்றிப் பாழாக,
கந்தருவ ரெல்லாங் களையிழக்கச் சித்தர்முதல்
அந்தரத்து வாழ்வோ ரனைவோரும் பித்துறவே,
நான்முகனார் நாவடைக்க, நாமகட்குப் புத்திகெட,
வான்முகிலைப் போன்றதொரு வண்ணத் திருமாலும்
அறிதுயில்போய் மற்றாங்கே ஆழ்ந்ததுயி லெய்திவிட
செறிதருநற் சீரழகு செல்வமெலாந் தானாகுஞ்
சீதேவி தன்வதனம் செம்மைபோய்க் காரடைய,
மாதேவன் யோகம் மதிமயக்க மாகிவிட, --
வாலை, உமாதேவி, மாகாளி, வீறுடையாள்,
மூலமா சக்தி, ஒரு மூவிலைவேல் கையேற்றாள்,
மாயை தொலைக்கும் மஹாமாயை தானாவாள்,
பேயைக் கொலையைப் பிணக்குவையைக் கண்டுவப்பாள்,
சிங்கத்தி லேறிச் சிரிப்பால் உலகழிப்பாள்.
சிங்கத்தி லேறிச் சிரித்தெவையுங் காத்திடுவாள்
நோவுங் கொலையும் நுவலொணாப் பீடைகளும்
சாவுஞ் சலிப்புமெனத் தான்பல் கணமுடையாள்,
கடாவெருமை யேறுங் கருநிறத்துக் காலனார்
இடாது பணிசெய்ய இலங்கு மஹாராணி,
மங்களம் செல்வம் வளர்வாழ்நாள் நற்கீர்த்தி
துங்கமுறு கல்வியெனச் சூழும் பலகணத்தாள்,
ஆக்கந்தா னாவாள், அழிவு நிலையாவாள்,
போக்குவர வெய்தும் புதுமை யெலாந் தானாவாள்,
மாறிமாறிப்பின்னும் மாறிமாறிப்பின்னும்
மாறிமா றிப்போம் வழக்கமே தானாவாள்,
ஆதிபராசக்தி -- அவள்நெஞ்சம் வன்மையுறச்,
சோதிக் கதிர்விடுக்கும் சூரியனாந் தெய்வத்தின்
முகத்தே இருள்படர,