பக்கம் எண் :

காவியங்கள் : கற்பனையும் கதையும்

கர்ணன் பதில்

வேறு

விகருணன் சொல்லைக் கேட்டு
வில்லிசைக் கர்ணன் சொல்வான்: --
‘தகுமடா, சிறியாய், நின்சொல்.
தாரணி வேந்தர் யாரும்
புகுவது நன்றன் றெண்ணி
வாய்புதைத் திருந்தார், நீதான்
மிகுமுரை சொல்லி விட்டாய்.
விரகிலாய்! புலனு மில்லாய்!
84

பெண்ணிவள் தூண்ட லெண்ணிப்
பசுமையால் பிதற்றுகின்றாய்;
எண்ணிலா துரைக்க லுற்றாய்;
இவளைநாம் வென்ற தாலே
நண்ணிடும் பாவ மென்றாய்,
நாணிலாய்! பொறையு மில்லாய்!
கண்ணிய நிலைமை யோராய்;
நீதிநீ காண்ப துண்டோ?
85

மார்பிலே துணியைத் தாங்கும்
வழக்கங்கீ ழடியார்க் கில்லை.
சீரிய மகளு மல்லள்;
ஐவரைக் கலந்த தேவி.
யாரடா, பணியாள்! வாராய்;
பாண்டவர் மார்பி லேந்தும்
சீரையுங் களைவாய்; தையல்
சேலையுங் களைவாய்’ என்றான்.
86

இவ்வுரை கேட்டா ரைவர்;
பணிமக்க ளேவா முன்னந்
தெவ்வர்கண் டஞ்சு மார்பைத்
திறந்தனர், துணியைப் போட்டார்.
நவ்வியைப் போன்ற கண்ணாள்,
ஞானசுந்தரிபாஞ்சாலி
‘எவ்வழி உய்வோ’ மென்றே
தியங்கினாள், இணைக்கை கோத்தாள்.
87