இந்தத் தெய்வம்
|
இந்தத் தெய்வம் நமக்கநுகூலம்
இனிமனக் கவலைக் கிடமில்லை |
|
|
மந்திரங்களைச் சோதனை செய்தால்
வையகத்தினை ஆள்வது தெய்வம்
இந்தத் தெய்வம் கதியென்றிருப்பீர்
ஆக்க முண்டென் றனைத்து முரைக்கும் |
(இந்த) |
1 |
மரத்தின் வேரில் அதற்குணவுண்டு
வயிற்றினிலே கருவுக் குணவுண்டு
தரத்திலொத்த தருமங்களுண்டு
சக்தியொன்றிலோ முக்தியுண்டு |
(இந்த) |
2 |
உலகமே உடலாய் அதற்குள்ளே
உயிரதாகி விளங்கிடுந் தெய்வம்
இலகும் வானொளி போலறிவாகி
எங்கணும் பரந்திடும் தெய்வம்
|
(இந்த) |
3 |
செய்கை யாவும் தெய்வத்தின் செய்கை
சிந்தை யாவும் தெய்வத்தின் சிந்தை
உய்கை கொண்டதன் நாமத்தைக் கூறின்
உணர்வு கொண்டவர் தேவர்களாவர் |
(இந்த) |
4 |
நோயில்லை வறுமையில்லை
நோன்பிழைப்பதிலே துன்பமில்லை
தாயும் தந்தையும் தோழனுமாகித்
தகுதியும் பயனும் தரும்தெய்வம் |
(இந்த) |
5 |
அச்சமில்லை மயங்குவதில்லை
அன்பும் இன்பமும் மேன்மையும் உண்டு
மிச்சமில்லை பழந்துயர்க் குப்பை
வெற்றியுண்டு விரைவினில் உண்டு |
(இந்த)
|
6 |
இந்தத் தெய்வம் நமக்கநுகூலம்
இனி மனக்கவலைக் கிடமில்லை |
|
|
1. ஆதாரம்: பாரதி நினைவுகள் -- பக்கம் 137-138
மகாகவி பாரதியாரின் மூத்த மகள் தங்கம்மாள் ருதுவான நாளன்று பாடிய பாடல் என யதுகிரி
அம்மாள் குறிப்பிடுகிறார். |