பக்கம் எண் :

காப்பியங்கள்

சஞ்சீவி பர்வதத்ததின் சாரல்


குயில்கூவிக் கொண்டிருக்கும்; கோலம் மிகுந்த
மயிலாடிக் கொண்டிருக்கும்; வாசம் உடையநற்
காற்றுக் குளிர்ந்தடிக்கும்; கண்ணாடி போன்றநீர்
ஊற்றுக்கள் உண்டு; கனிமரங்கள் மிக்கஉண்டு;
பூக்கள் மணங்கமழும்; பூக்கள்தோறும் சென்றுதே
னீக்கள் இருந்தபடி இன்னிசைபா டிக்களிக்கும்;
வேட்டுவப் பெண்கள் விளையாடப் போவதுண்டு;
காட்டு மறவர்களும் காதல்மணம் செய்வதுண்டு.
நெஞ்சில் நிறுத்துங்கள்; இந்த இடத்தைத்தான்
சஞ்சீவி பர்வதத்தின் சாரல்என்று சொல்லிடுவார்.

சஞ்சீவி பர்வதத்தின் சாரலிலே ஓர்நாளில்
கொஞ்சம் குறையமணி நான்காகும் மாலையிலே
குப்பன்எனும் வேடக் குமரன் தனியிருந்து
செப்புச் சிலைபோலே தென்திசையைப் பார்த்தபடி
ஆடா தசையாமல் வாடிநின்றான். சற்றுப்பின்,
வாடாத பூமுடித்த வஞ்சிவரக் கண்டான்.
வரக்கண்ட தும்குப்பன் வாரி அணைக்கச்
சுரக்கின்ற காதலொடு சென்றான். -"தொடாதீர்கள்!"
என்று சொன்னாள் வஞ்சி இளையான் திடுக்கிட்டான்.

குன்றுபோல் நின்றபடி குப்பன் உரைக்கின்றான்;
"கண்ணுக்குள் பாவையே!கட்டமுதை நான்பசியோ
டுண்ணப்போம் போதுநீ ஓர்தட்டுத் தட்டிவிட்டாய்!
தாழச் சுடுவெய்யில் தாளாமல் தான்குளிர்ந்த
நீழலைத்தா வும்போது நில்என்று நீதடுத்தாய்!
தொட்டறிந்த கையைத் தொடாதேஎன் றாய்! நேற்றுப்
பட்டறிந்த தேகசுகம் விட்டிருக்கக் கூடுவதோ?
உன்னோடு பேச ஒருவாரம் காத்திருந்தேன்;
என்னோடு முந்தாநாள் பேச இணங்கினாய்!
நேற்றுத்தான் இன்பக் கரைகாட்டி னாய்! இன்று
சேற்றிலே தள்ளிவிட்டாய்! காரணமும் செப்பவில்லை"
என்றுரைக்கக் கேட்ட இளவஞ்சி, 'காதலரே!
அன்றுநீர் சொன்னபடி அவ்விரண்டு முலிகையைச்
சஞ்சீவி பர்வதத்தில் தையலெனைக் கூட்டிப்போய்க்
கொஞ்சும் பறித்துக் கொடுத்தால் உயிர்வாழ்வேன்.
இல்லையென்றால் ஆவி இரா' தென்றாள். வேட்டுவன்;
'கல்லில் நடந்தால்உன் கால்கடுக்கும்' என்றுரைத்தான்.
'கால்இரண்டும் நோவதற்குக் காரணமில்லை. நெஞ்சம்,
மூலிகைஇ ரண்டின்மேல் மொய்த்திருப்பதால்' என்றாள்,
'பாழ்விலங்கால் அந்தோ! படுமோசம் நேரும்' என்றான்.
'வாழ்வில் எங்கும் உள்ளதுதான் வாருங்கள்' என்றுரைத்தாள்.
'அவ்விரண்டு மூலிகையின் அந்தரங்கம் அத்தனையும்.
இவ்விடத்திற் கேட்டுக்கொள்' என்றுரைப்பான் குப்பன்:
'ஒன்றைத்தின் றால்இவ் வுலகமக்கள் பேசுவது
நன்றாகக் கேட்கும்மற் றொன்றைவா யில்போட்டால்
மண்ணுலகக் காட்சிஎலாம் மற்றிங் கிருந்தபடி
கண்ணுக் கெதிரிலே காணலாம். சொல்லிவிட்டேன்;
ஆதலால் மூலிகையின் ஆசை தணி' என்றான்.
'மோதிடுதே கேட்டபின்பு மூலிகையில் ஆசை' என்றாள்.
'என்னடி!பெண்ணேநான் எவ்வளவு சொன்னாலும்
சொன்னபடி கேட்காமல் தோஷம் விளைக்கின்றாய்
பெண்ணுக் கிதுதகுமோ?வண்ணமலர்ச் சோலையிலே,
எண்ணம்வே றாகிஇருக்கின்றேன் நான்' என்று
கண்ணை அவள் கண்ணிலிட்டுக் கையேந்தி நின்றிட்டான்.

'பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம்என் கின்றீரோ?
மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை?
பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே.
ஊமைஎன்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும்
ஆமை நிலைமைதான் ஆடவர்க்கும் உண்டு.
புலன் அற்றபேதையாய்ப் பெண்ணைச்செய் தால் அந்
நிலம்விளைந்த பைங்கூழ் நிலைமையும் அம்மட்டே,
சித்ரநிகர் பெண்டிர்களைச் சீரழிக்கும் பாரதநற்
புத்ரர்களைப் பற்றியன்றோ பூலோகம் தூற்றுவது?
சற்றுந் தயங்கேன் தனியாய்ச்சஞ் சீவிமலை
உற்றேறி மூலிகையின் உண்மை அறிந்திடுவேன்;
மேலிருந்து கீழே விழுந்திறக்க நானறிவேன்.
ஊரிலுள்ள பெண்களெல்லாம் உள்ளத்தைப் பூர்த்திசெயும்
சீரியர்க்கு மாலையிட்டுச் சீரடைந்து வாழ்கின்றார்.
தோகை மயிலே!இதைநீகேள் சொல்லு கின்றேன்.
நாகம்போல சீறுகின்ற நாதரிடம் சொல்லிவிடு.
பச்சிலைக்குச் சஞ்சீவி பர்வதம்செல் வேன் என்றாள்.

'அச்சுப் பதுமையே! ஆரணங்கே! நில்லேடி!
நானும் வருகின்றேன் நாயகியே! நாயகியே!
ஏனிந்தக் கோபம்? எழிலான காதலியே!
என்றுகுப்பன் ஓடி இளவஞ்சியைத் தழுவி
நின்றான். இளவஞ்சி நின்று மகிழ்வுற்றாள்.
'அவ்விரண்டு மூலிகையில் ஆரணங்கே நீ ஆசை
இவ்வளவு கொண்டிருத்தல் இப்போது தான் அறிந்தேன்.
கூட்டிப்போய்ப் பச்சிலையைக் கொய்து தருகின்றேன்;
நீட்டாண்மைக் காரி! எனக்கென்ன நீதருவாய்?'
என்று மொழிந்தான் எழுங்காத லால்குப்பன்,
முன்னே இலைகொடுத்தால் முத்தம் பிற' கென்றாள்,
'என்கிளியே நீமுத்தம் எத்தனைஈ வாய்?' என்றான்,
'என்றன் கரத்தால் இறுக உமைத்தழுவி
நோகாமல் முத்தங்கள் நூறுகொடுப்பேன்' என்றாள்,
'ஆசையால் ஒர் முத்தம் அச்சாரம் போ'டென்றான்.

'கேலிக்கு நேரம் இதுவல்ல, கேளுங்கள்
மூலிகைக்குப் பக்கத்தில் முத்தம் கிடைக்கும்' என்றாள்.
குப்பன் தவித்திட்டான், காதற் கொடுமையினால்,
எப்போது நாம்உச்சிக் கேறித் தொலைப்பதென
அண்ணாந்து பார்த்திட்டான் அம்மலையின் உச்சிதனை!
கண்ணாட்டி தன்னையும்ஓர் கண்ணாற் கவனித்தான்.
வஞ்சிஅப் போது மணாளன் மலைப்பதனைக்
கொஞ்சம் அவமதித்துக் கோவை உதடு
திறந்தாள், திறந்து சிரிக்குமுன்,குப்பன்
பறந்தான் பருவதமேல் பாங்கியையும் தூக்கியே.

கிட்டரிய காதற் கிழத்தி இடும்வேலை
விட்டெறிந்த கல்லைப்போல் மேலேறிப் பாயாதோ!
கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர்கடுகாம்,
மாமலைதான் சென்னி வளைந்து கொடுத்ததுவோ,
நாம்மலைக்கக் குப்பன் விரைவாய் நடந்தானோ,
மங்கையினைக் கீழிறக்கி, மாதே! இவைகளே
அங்குரைத்த மூலிகைகள்; அட்டியின்றிக் கிள்ளிக்கொள்
என்றுரைத்தான் குப்பன், இளவஞ்சி தான்மகிழ்ந்து
சென்று பறித்தாள். திரும்பிச் சிறிதுவழி
வந்தார்கள், அங்கோர் மரத்து நிழலிலே
சிந்தை மகிழ்ந்து சிறக்க அமர்ந்தார்கள்.

மூலிகையில் ஓர் இனத்தை முன்னே இருவருமாய்
ஞாலத்துப் பேச்சறிய நாக்கிலிட்டுத் தின்றார்கள்,
வஞ்சிக்கும் குப்பனுக்கும் வையத்து மாந்தர்களின்
'நெஞ்சம் வசமாக' நேரில் அவர் பேசுதல்போல்
செந்தமிழில் தங்கள் செவியிற்கேட் கப்பெற்றார்.
அந்த மொழிகள் அடியில் வருமாறு:

'இத்தாலி தேசம் இருந்து நீ இங்கு வந்தாய்
பத்துத் தினமாகப் பாங்காய் உணவுண்ண
இவ்விடுதி தன்னில் இருந்து வருகின்றாய்!
எவ்வாறு நான் சகிப்பேன் இந்தக் கறுப்பன்
எனக்கெதிரே உட்கார்ந் திருப்பதனை' என்றாய்;
'தனக்கெனவே நல்உணவுச் சாலைஒன் றுண்டாக்கி
அங்கவன் சென்றால் அடுக்கும் என உரைத்தாய்;
"இத்தாலிச் சோதரனே! என்ன மதியுனக்கே?
செத்து மடிவதிலும் சேர்ந்து பிறப்பதிலும்
இவ்வுலக மக்களிலே என்னபே தங்கண்டாய்?
செவ்வைபெறும் அன்பில்லார் தீயபே தம்கொள்வார்,
எங்கள் பிராஞ்சியர்கள் இப்பேதம் பாராட்டித்
தங்கள் பழங்கீர்த்தி தாழ்வடைய ஒப்பார்கள்;
பேதபுத்தி சற்றும் பிடிக்காது போ! போ! போ!
பேதம்கொண் டோர்க்குப் பிராஞ்சில் இடமில்லை.
என்ற மொழிகள் இவர்காதில் கேட்டவுடன்
நன்று பிராஞ்சியர்க்கு நாக்குளிர வாழ்த்துரைத்தார
பின்னர் அமெரிக்கன் பேசுவதைக் கேட்டார்கள்.
அன்னவன் பேச்சும் அடியில் வருமாறு:

'நல்ல அமெரிக்கன் நானிலத்தில் வாழ்கின்ற
எல்லாரும் நன்றாய் இருக்க நினைத்திடுவான்,
பொல்லா அமெரிக்கன் பொன்னடைந்து தான்மட்டும்
செல்வனாய் வாழத் தினமும் நினைத்திடுவான்.
நல்லவனாய் நானிருக்க நாளும் விரும்புகிறேன்'
சொல்லும் இதுகேட்ட தோகையும் குப்பனும்
'கொத்தடிமை யாகிக் குறைவுபடும் நாட்டுக்கு
மெத்ததுணை யாகியிவன் மேன்மை அடைக' என்றார்.
இங்கிலாந்து தேசம் இருந்தொருவன் பேசினான்நாவலந் தீவு நமைவிட்டுப் போகாது.
வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்கள் என்றால்
சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும்;
ஆகையால் எல்லாரும் அங்கே தனித்தனிதான்.
ஏகமன தாகிஅவர் நம்மை எதிர்ப்பதெங்கே?
பேதம் வளர்க்கப் பெரும்பெரும்பு ராணங்கள்!
சாதிச்சண்டை வளர்க்கத் தக்க இதி காசங்கள்!
கட்டிச் சமூகத்தின் கண்ணவித்துத் தாமுண்ணக்
கொட்டி அளக்கும் குருக்கள் கணக்கற்றார்,
தேன்சுரக்கப் பேசிஇந்து தேசத்தைத் தின்னுதற்கு
வான்சுரரை விட்டுவந்த பூசுரரும் வாழ்கின்றார்.
இந்த உளைச்சேற்றை, ஏறாத ஆழத்தை
எந்தவிதம் நீங்கி நமைஎதிப்பார்? இன்னமும்,
சிந்தனா சக்தி சிறிதுமின்றி மக்களுக்குத்
தம்தோள் உழைப்பிலே நம்பிக்கை தானுமின்றி
ஊறும் பகுத்தறிவை இல்லா தொழித்துவிட்டுச்
சாரற்ற சக்கையாய்ச் சத்துடம்பைக் குன்றவைத்துப்
பொற்புள்ள மாந்தர்களைக் கல்லாக்கி யேஅந்தக்
கற்கள் கடவுள்களாய்க் காணப் படும்அங்கே,
இந்த நிலையிற் சுதந்தரப் போரெங்கே?
கொந்தளிப்பில் நல்லதொரு கொள்கை முளைப்பதெங்கே?
'தேகம் அழிந்துவிடும்; சுற்றத்தார் செத்திடுவார்;
போகங்கள் வேண்டாம்; பொருள்வேண்டாம் மற்றுமிந்தப்
பாழுலகம் பொய்யே பரமபதம்போ' என்னும்
தாழ்வகற்ற எண்ணுங்கால் சாக்குருவி வேதாந்தம்.
சாதிப் பிரிவு சமயப் பிரிவுகளும்,
நீதிப் பிழைகள் நியமப் பிழைகளும்,
மூடப் பழக்கங்கள் எல்லாம் முயற்சிசெய்தே
ஓடச்செய்தால் நமையும் ஓடச்செய்வார் என்பேன்'

இந்தப் பிரசங்கம் இவ்விருவர் கேட்டார்கள்;
சொந்த நிலைக்குத் துயருற்றார், வஞ்சி
சிலைபோல் இருந்தாள்; திகைத்தாள்; பின் நாட்டின்
நிலையறிய நேர்ந்தது பற்றி மகிழ்ந்திட்டாள்!
'பச்சிலையால் நல்ல பயன்விளையும் என்று சொன்னாள்!
பச்சிலையைத் தந்த பருவதத்தைக் கும்பிட்டாள்.
'இந்த இலையால் இனிநன்மை கொள்க' என்று
சொந்தத் தாய்நாட்டுக்குச் சொன்னாள் பெருவாழ்த்து,
'வல்லமைகொள் பச்சிலையின் மர்மத்தைக் கண்டபடி
சொல்லிஎனைத் தூக்கிவந்து சூக்ஷீமத்தைக் காட்டிய கண்
ணாளர்தாம் வாழ்வடைக' என்றாள்; அவனுடைய
தோளை ஒருதரம் கண்ணாற் சுவைபார்த்தாள்.
அச்சமயம் குப்பன், அழகியதன் தாய்நாட்டார்
பச்சைப் பசுந்தமிழில் பேசுவதைக் கேட்டிருந்தான்;
குப்பனது தோளில் குளிர்ந்தமலர் ஒன்றுவிழ
இப்பக்கம் பார்த்தான்; வஞ்சி இளங்கையால்
தட்டிய தட்டென்று சந்தேகம் தீர்ந்தவனாய்க்
'கட்டிக் கரும்பே! கவனம் எனக்கு
நமது தேசத்தில் நடக்கின்ற பேச்சில்
அமைந்து கிடக்கு' தென்றான், வஞ்சி அதுகேட்டே
'அன்னியர்கள்' பேசுவதில் அன்பைச் செலுத்துங்கள்;
கன்னத்தை மாத்திரம்என் கையிற் கொடுங்களென்றாள்,
'அன்பும் உனக்குத்தான்; ஆருயிரும் உன்னதுதான்
இன்பக் கிளியே! எனக்களிப்பாய் முத்த'மென்றான்.

கையோடு கைகலந்தார்; முத்தமிடப்போகையிலே
ஐயையோ! ஐயையோ!என்ற அவலமொழி
காதிலே வீழ்ந்தது! முத்தம் கலைந்ததே!
ஈதென்ன விந்தை?எழில் வஞ்சி!கேள்' என்றான்,
வஞ்சி கவனித்தாள், சத்தம் வரும்வழியாய்!
நெஞ்சைச் செலுத்தினார் நேரிழையும் காதலனும்.

'ஓர்நொடியிற் சஞ்சீவி பர்வதத்தை ஓடிப்போய்
வேரோடு பேர்த்துவர வேண்டுமே ஐயாவே?
இப்பாழும் வாக்கை இருவரும் கேட்டார்கள்.
குப்பன் மிகப்பயந்து கோதைமுகம் பார்த்திட்டான்,
வஞ்சியவள் நகைத்தே 'இன்ப மணாளரே!
சஞ்சீவி பர்வதத்தைத் தாவிப் பெயர்க்கும்
மனிதரும் இல்லை! மலையும் அசையா
இ னிஅந்தச் சத்தத்தில் எண்ணம் செலுத்தாதீர்'
என்றுரைத்தாள் வஞ்சி, இதுசொல்லித் தீருமுன்,
'நன்றாக உங்களுக்கு ராமன் அருளுண்டு;
வானம் வரைக்கும் வளரும் உடலுண்டே;
ஏனிங்கு நின்றீர்? எடுத்துவரு வீர்மலையை'
என்றஇச் சத்தம் இவர்செவியில் வீழ்ந்தவுடன்
குன்று பெயர்வது கொஞ்சுமும்பொய் யல்லவென்று
குப்பன் நடுநடுங்கிக் கொஞ்சுமிள வஞ்சியிடம்
'மங்கையே, ராமனருள் வாய்ந்தவனாம்; வானமட்டும்
அங்கம் வளர்வானாம்; அப்படிப் பட்டவனை
இந்தச்சஞ் சீவிமலை தன்னை யெடுத்துவர
அந்த மனிதன்அங்கே ஆணை யிடுகின்றான்,
நாலடியில் இங்கு நடந்துவந்து
'ராமனெங்கே! ராமன் அருளெங்கே! சஞ்சீவி
மாமலையைத் தூக்குமொரு வல்லமைஎங்கே! இவற்றில்
கொஞ்சமும் உண்மை இருந்தாலும்நாம் கொத்தவரைப்
பிஞ்சுகள்போல் வாடிப் பிழைப்பதரி தாகி
அடிமையாய் வாழோமே? ஆண்மைதான் இன்றி
மிடிமையில் ஆழ்ந்து விழியோமே?' என்றந்த
வஞ்சி யுரைத்தாள், பின்மற்றோர் பெருஞ்சத்தம்,
அஞ்சுகின்ற குப்பன் அதிரச்செய் திட்டதே:

'அம்மலையை ஓர்நொடியில் தூக்கிவந் தையாவே
உம்எதிரில் வைக்கின்றேன் ஊஹீஹீஊஹீஹீ
குப்பன் பதைத்தான் குடல்அறுந்து போனதுபோல்.
'எப்படித்தாம் நாம்பிழைப்போம்? ஏதும் அறிகிலேன்
சஞ்சீவி பர்வதத்தைத் தாவித் தரையோடு
பஞ்சிருக்கும் மூட்டைபோல் பாவி அவன்எவனோ
தூக்குகின்றான்! வஞ்சி;சுகித்திருக்க எண்ணினையே!
சாக்காடு வந்ததடி! தக்கவிதம் முன்னமே
நம்பென்று நான்சொன்ன வார்த்தையெல்லாம் நம்பாமல்
வம்பு புரிந்தாய்! மலையும் அதிர்ந்திடுதே!
முத்தம் கொடுத்து முழுநேர மும்தொலைத்தாய்
செத்துமடியும் போது முத்தம் ஒருகேடா?
என்றனுயி ருக்கே எமனாக வாய்த்தாயே!
உன்றன் உயிரைத்தான் காப்பாற்றிக் கொண்டாயா?
தூக்கிவிட்டான்! தூக்கிவிட்டான்! தூக்கிப்போய்த் தூளாக
ஆக்கிச் சமுத்திரத்தில் அப்படியே போட்டிடுவான்!
எவ்வாறு நாம் பிழைப்போம்? ஏடி, இதைநீதான்
செவ்வையாய் யோசித்துச் செப்பாயோ ஓர்மார்க்கம்?'
என்று துடிதுடிக்கும் போதில், இளவஞ்சி
நின்று நகைத்துத்தன் நேசனைக் கையால் அணைத்தே
'இப்புவிதான் உண்டாக்கி எவ்வளவு நாளிருக்கும்,
அப்போது தொட்டிந்த அந்திநே ரம்வரைக்கும்
மாமலையைத் தூக்கும் மனிதன் இருந்ததில்லை,
ஓமண வாளரே! இன்னம் உரைக்கின்றேன்,
மன்னும் உலகம் மறைந்தொழியும் காலமட்டும்
பின்னும் மலைதூக்கும் மனிதன் பிறப்பதில்லை,
அவ்வாறு ஓர்மனிதன் ஆகாயம் பூமிமட்டும்
எவ்வாறு நீண்டு வளருவான்? இல்லைஇல்லை;
காதல்நிசம். இக்கனிமுத்தம் மிக்க உண்மை!
மாதுதோள் உம்தோள் மருவுவது மெய்யாகும்
நம்புங்கள் மெய்யாய் நடக்கும் விஷயங் களிவை,
சம்பவித்த உண்மை அசம்பாவத்தால் தாக்குறுமோ?
வாழ்க்கை நதிக்குவீண் வார்த்தைமலை யும்தடையோ?
வாழ்த்தாமல் தூற்றுகின்றீர் வந்துநிற்கும் இன்பத்தை
பொய்யுரைப்பார் இந்தப் புவியை ஒருசிற்றெறும்பு
கையால் எடுத்ததென்பார் ஐயோஎன் றஞ்சுவதோ?
முத்தத்தைக் கொள்க முழுப்பயத்தில் ஒப்படைத்த,
சித்தத்தை வாங்கிச் செலுத்துங்கள் இன்பத்தில்
என்றுரைத்தாள் வஞ்சி இதனாற் பயனில்லை;
குன்று பெயர்ந்ததென்று குப்பன் மனம்அழிந்தான்;
இந்நேரம் போயிருப்பார்! இந்நேரம் பேர்த்தெடுப்பார்?
இந்நேரம் மேகத்தில் ஏறிப் பறந்திடுவார்!
உஸ்என்று கேட்குதுபார் ஓர்சத்தம் வானத்தில்,
விஸ்வரூ பங்கொண்டு மேலேறிப் பாய்கின்றார்'
இம்மொழிகேட் டான்குப்பன்; 'ஐயோ' என உரைத்தான்
அம்மட்டும் சொல்லத்தான் ஆயிற்றுக் குப்பனுக்கே.
உண்மை யறிந்தும் உரைக்கா திருக்கின்ற
பெண்ணான வஞ்சிதான் பின்னும் சிரித்து;
'மனத்தை விடாதீர் மணாளரே காதில்
இனிவிழப் போவதையும் கேளுங்கள்' என்றுரைத்தாள்.
வஞ்சியும் குப்பனும் சத்தம் வரும்வழியில்
நெஞ்சையும் காதையும் நேராக வைத்திருந்தார்;

*இப்படி யாகஅநுமார் எழும்பிப் போய்
அப்போது ஜாம்பவந்தன் ஆராய்ந்து சொன்னதுபோல்
சஞ்சீவி பர்வதத்தைத் தாவிப் பறந்துமே
கொஞ்சநே ரத்தில் இலங்கையிலே கொண்டுவந்து
வைத்தார், உடனே மலைமருந்தின் சக்தியால்
செத்த இராமனும் லஷ்மணனும் சேர்ந்தெழுந்தார்'
உற்றிதனைக் கேட்டகுப்பன் 'ஓஹோ மலையதுதான்
சற்றும் ஆசையால் தான்தூக்கிப் போனானே!
லங்கையிலே வைத்தானே! லங்கையில்நாம் தப்போமே!,
என்றான், நடுக்கம் இதயத்தில் நீங்கவில்லை.
'இன்னும் பொறுங்கள்' எனஉரைத்தாள் வஞ்சி.

'பெரும்பாரச் சஞ்சீவி பர்வதத்தைப் பின்னர்
இருந்த இடத்தில் அநுமார், எடுத்தேகி
வைத்துவிட்டு வந்தார் மறுநிமிஷம் ஆகாமுன்
செத்தார்க் குயிர்கொடுத்தார், தெண்டமும்போட்டு நின்றார்!

குப்பனிது கேட்டுக் குலுக்கென்று தான்நகைத்தான்,
'அப்போதே நானினைத்தேன் ஆபத்திரா தென்று,
நான்நினைத்த வண்ணம் நடந்ததுதான் ஆச்சரியம்,
ஏனடி! வஞ்சி! இனியச்சம் இல்லை' எனறான்,
'ஆனாலும் இன்னும் அரைநிமிஷம் காத்திருங்கள்;
நானும் அதற்குள்ளே நாதரே, உம்மையொரு
சந்தேகம் கேட்கின்றேன், தக்க விடையளிப்பீர்!
இந்த மலையில்நாம் ஏறிய பின்நடந்த
ஆச்சரிய சம்பவந்தான் என்ன? அதையுரைப்பீர்!
பேச்சை வளர்த்தப் பிரியப் படவில்லை'
என்றாள் இளவஞ்சி; குப்பன் இசைக்கிறான்:
'என்னடி வஞ்சி! இதுவும் தெரியாதா?
நாமிங்கு வந்தோம், நமக்கோர் நலிவின்றி
மாமலையை அவ்வநுமார் தூக்கி வழிநடந்து
லங்கையிலே வைத்தது! ராமன் எழுந்ததும்,
இங்கெடுத்து வந்தே இருப்பிடத்தில் வைத்தது!
கண்ணே! மலையைக் கடுகளவும் ஆடாமல்
கண்ணாடிப் பாத்திரத்தைக் கல்தரையில் வைப்பதுபோல்
தந்திரமாய் மண்ணில் தலைகுனிந்து வைத்திட்ட
அந்தப் பகுதிதான் ஆச்சரியம் ஆகுமடி!
ஆச்சரிய சம்பவத்தைக் குப்பன் அறிவித்தான்,
பேச்செடுத்தாள் வஞ்சி; பிறகும் ஒருசத்தம்;
'இம்மட்டும் இன்று கதையை நிறுத்துகின்றேன்;
'செம்மையாய் நாளைக்குச் செப்புகின்றேன் மற்றவற்றைச்
சத்தியரா மாயணத்திற் சத்தான இப்பகுதி
உத்தியாய்க் கேட்டோர் உரைத்தோர்எல் லாருமே
இங்குள்ள போகங்கள் எல்லாம் அனுபவிப்பர்;
அங்குள்ள வைகுந்தம் அட்டியின்றிச் சேர்வார்கள்;
ஜானகீ காந்தஸ் மரணே! ஜயஜயராம்!
'மானேஈ தென்னஎன்றான்' வையம்அறி யாக்குப்பன்
'முன்புநான் உங்களுக்கு முத்தம் கொடுக்கையிலே
சொன்ன 'ஐயையோ' தொடங்கி இதுவரைக்கும்
ராமாயணம் சொல்லி நாளைக் கழிக்கின்ற
ஏமாந்தார் காசுக் கெசமானன் என்றுரைக்கும்
பாகவதன் சொன்னான் பலபேரைக் கூட்டியே,
ஆகியதும் இந்த அரிய உழைப்புக்குப்
பத்தோ பதினைந்தோ பாகவதன் பெற்றிடுவான்.
சித்த மலைக்கச் சிறிதுமிதில் இல்லை' யென்று
கையி லிருந்தஒரு காட்சிதரும் மூலிகையை
'ஐயா இதைவிழுங்கி அவ்விடத்திற் பாருங்கள்'
'என்றந்தக் குப்பனிடம் ஈந்துதா னும்தின்றாள்,
தின்றதும் தங்கள் விழியால் தெருவொன்றில்,
'மாளிகையி னுள்ளே மனிதர் கூட்டத்தையும்,
ஆளிவாய்ப் பாகவதன் அங்கு நடுவிலே
உட்கார்ந் திருப்பதையும், ஊர்மக்கள் செல்வதையும்,
பட்டைநா மக்காரப் பாகவதன் ரூபாயைத்
தட்டிப்பார்க் கின்றதையும், சந்தோஷம் கொள்வதையும்
கண்டார்கள்; கண்டு கடகடவென் றேசிரித்தார்,
வண்டு விழியுடைய வஞ்சி உரைக்கின்றாள்;

'வானளவும் அங்கங்கள், வானரங்கள் ராமர்கள்
ஆனது செய்யும் அநுமார்கள், சாம்பவந்தர்,
ஒன்றல்ல; ஆயிரம் நூல்கள் உரைக்கட்டும்;
வீஸ்வரூ பப்பெருமை, மேலேறும் வன்மைகள்,
உஸ்என்ற சத்தங்கள், அஸ்என்ற சத்தங்கள்,
எவ்வளவோ நூலில் எழுதிக் கிடக்கட்டும்,
செவ்வைக் கிருபை செழுங்கருணை அஞ்சலிக்கை
முத்தி முழுச்சுவர்க்கம் முற்றும் உரைக்கட்டும்,
இத்தனையும் சேரட்டும் என்ன பயனுண்டாம்?
உள்ள பகுத்தறிவுக் கொவ்வாத ஏடுகளால்
எள்ளை அசைக்க இயலாது. மானிடர்கள்
ஆக்குவதை ஆகா தழிக்குமோ? போக்குவதைத்
தேக்குமோ? சித்தம் சலியாத் திறன்வேண்டும்,
மக்கள் உழைப்பில் மலையாத நம்பிக்கை
எக்களிக்க வேண்டும் இதயத்தில்! ஈதன்றி
நல்லறிவை நாளும் உயர்த்தி உயர்த்தியே
புல்லறிவைப் போக்கிப் புதுநிலைதே டல்வேண்டும்.
மக்கள் உழைக்காமுன் மேலிருந்து வந்திடுமோ?
எக்கா ரணத்தாலும் இன்மையிலே உண்மையுண்டோ?
மீளாத மூடப் பழக்கங்கள் மீண்டும்உமை
நாடா திருப்பதற்கு நானுங் களையின்று
சஞ்சீவி பர்வதத்தில் கூப்பிட்டேன். தற்செயலாய்
அஞ்சும் நிலைமையே அங்கே நிகழ்ந்ததுண்டாம்.
உங்கள் மனதில் உறைந்து கிடந்திட்ட
பங்கஞ்செய் மூடப் பழக்க வழக்கங்கள்
இங்கினிமேல் நில்லா எனநான் நினைக்கின்றேன்.
தங்கள்கை நீட்டித் தமியாளை முன்னரே
சாரலிலே முத்தம் தரக்கேட்டீர், சாயவில்லை,
ஈர மலையிலே யான்தந்தேன் ஏற்கவில்லை,
சத்தத்தை எண்ணிச் சலித்தீர். அச்சத்தத்தால்
முத்தத்தை மாற்ற முடியாமற் போனாலும்
உம்மைப் பயங்காட்டி ஊளையிட்ட சத்தத்தால்
செம்மைமுத்தம் கொள்ளவில்லை, சேர்ந்துமுத்தம் கொள்வீரே!'

'ஏஏஏ நான் இன்றைக் கேளனத்துக் காளானேன்.
நீயேன் இதையெல்லாம் நிச்சயமாய்ச் சொல்லவில்லை?
ராமா யணமென்ற நலிவு தருங்கதை
பூமியிலி ருப்பதைஇப் போதே அறிகின்றேன்.
நம்பத் தகாதவெலாம் நம்பவைத்துத் தங்கள்நலம்
சம்பா திக்கின்ற சரித்திரக் காரர்களால்
நாடு நலிகுவதை நான்இன்று கண்டுணர்ந்தேன்.
தோடு புனைந்த சுடர்க்கொடியே நன்றுசொன்னாய்!
நல்ல இமயம், நலங்கொழிக்கும் கங்கைநதி.
வெல்லத் தமிழ்நாட்டின் மேன்மைப் பொதியமலை,
செந்நெல் வயல்கள், செழுங்கரும்புத் தோட்டங்கள்,
தின்னக் கனிகள் தெவிட்டாப் பயன்மரங்கள்,
இன்பம் செறிந்திருக்கும் இப்பெரிய தேசத்தில்
முப்பத்து முக்கோடி மாந்தர்கள் மொய்த்தென்ன?
செப்பும் இயற்கை வளங்கள் செறிந்தென்ன?
மூடப் பழக்கம், முடிவற்ற கண்ணுறக்கம்
ஓடுவ தென்றோ? உயர்வதென்றோ? நானறியேன்.
பாரடி மேற்றிசையில் சூரியன் பாய்கின்றான்.
சார்ந்த ஒளிதான் தகத்தகா யக்காட்சி!
மாலைப் பொழுதும் வடிவழகு காட்டுதுபார்!
சாலையிலோர் அன்னத்தைத் தன்பேடு தேடுதுபார்.
என்னடி சொல்கின்றாய் ஏடி இளவஞ்சி?
என்நெஞ்சை உன்நெஞ்சம் ஆக்கிப்பார்' என்றுரைத்தான்.

தென்றலிலே மெல்லச் சிலிர்க்கும் மலர்போலே
கன்னி யுடல்சிலிர்க்கக் 'காதலரே நாம்விரைவாய்ச்
சாரல் அடைவோமே, காதலுக்குத் தக்கஇடம்.
சாரலும் தண்மாலை நாயகியைச் சாரக்,
குயில்கூவிக் கொண்டிருக்கும்; கோலம் மிகுந்த
மயிலாடிக் கொண்டிருக்கும்; வாச முடையநற்
காற்றுக் குளிர்ந்தடிக்கும்; கண்ணாடி போன்றநீர்
ஊற்றுக்கள் உண்டு; கனிமரங்கள் மிக்கஉண்டு;
பூக்கள் மணங்கமழும்; பூக்கள்தோறும் சென்றுதே
னீக்கள் இருந்தபடி இன்னிசைபா டிக்களிக்கும்.
அன்பு மிகுந்தே அழகிருக்கும் நாயகரே
இன்பமும் நாமும் இனி!'

* * * * * * * * * *

இக்காலத்திற் பல துறைகளிலுஞ் சீர்திருத்தம்
வேண்டிநிற்கும் நம் தமிழ் மக்கட்குப் புதுமுறையிற்
பாடப்பட்டிருக்கும் பாரதிதாசனின் பாட்டுக்கள்
கிளர்ச்சியினையும் மகிழ்ச்சியினையும் பயந்து சீர்
திருத்தங்கள் பலவற்றிற்கு வழிகாட்டும்.

          -தமிழறிஞர் மறைமலையடிகள்

பாரதிதாசன் கவிதைகளில் உண்மை, இனிமை,
அழகு இம்மூன்றும் அமைந்துள்ளன. அதனால்தான்
அவரது கவிதைகள் படிப்போர் உள்ளத்துக்கு இன்பம்
அளிக்கின்றன.

          -அறிஞர் மயிலை. சீனி வேங்கடசாமி

இன்றைய தமிழன் அகராதியில் பாரதிதாசன்
என்றால் புரட்சி என்று பொருள். புரட்சி என்றால்
பாரதிதாசன் என்று பொருள். பாரதிதாசன் வேறு
புரட்சி வேறு என்று புரட்சியிலே நாட்டமுடைய
எந்தத் தமிழனும் கருதுவதில்லை.

          -காஞ்சி மணிமொழியார்

சாதிமதக் கொடுமைகளைத் தூள் தூளாக்க
குருட்டுப்பழக்க வழக்கங்களைத் தகர்த்தெறிய பகுத்
தறிவை விரிவாக்க தமிழ்ப்பற்று பொங்கியெழ பெண்
அடிமைத்தனம் நொறுங்க பொதுவாக நில, பண
முதலைகளில் கொடுமையை உணர்த்த சுருங்கச்
சொன்னால் தொழிலாளித்துவ சீர்திருத்தமான
பாடல்களைத் தந்துள்ளார் பாரதிதாசன்.

          -ப. ஜீவானந்தம்

( 5 )
( 10 )

( 15 )

( 20 )
( 25 )
( 30 )
( 35 )
( 40 )
( 45 )
( 50 )

( 55 )
( 60 )
( 65 )
( 70 )

( 75 )
( 80 )
( 85 )

( 90 )
( 95 )

( 100 )
( 105 )

( 110 )
( 115 )

( 120 )
( 125 )
( 130 )
( 135 )
( 140 )

( 145 )
( 150 )
( 155 )
( 160 )
( 165 )

( 170 )

( 175 )
( 180 )
( 185 )
( 190 )
( 195 )

( 200 )

( 205 )
( 210 )
( 215 )
( 220 )
( 225 )
( 230 )
( 235 )

( 240 )
( 245 )
( 250 )
( 255 )
( 260 )
( 265 )
( 270 )
( 275 )
( 280 )
( 285 )

( 290 )
( 295 )

( 300 )

( 305 )
( 310 )
( 315 )
( 320 )
( 325 )
( 330 )
( 335 )
( 340 )
( 345 )
( 350 )

( 355 )
( 360 )
( 365 )
( 370 )
( 375 )
( 380 )

( 385 )
( 390 )
( 395 )
( 400 )
( 405 )

( 410 )
( 415 )( 420 )( 425 )


( 430 )( 435 )
( 440 )