பக்கம் எண் :

Untitled Document
பாண்டியன் பரிசு

இயல் 81


{ வேலன் பேழை தூக்கிக் குதிரைமேல் வர, எதிரிகள்
எதிர்க்க-வேலன் ஆட்களும் கை கலந்தார்கள். }

சீழ்க்கையடித் தேஒருவன், வேலன்! பேழை
செல்லுங்கள் என்றரைத்தான்! வேலன், மேலே
வாழ்க்கையிலே வன்பிணிகள் பாய்ந்ததைப்போல்
மறவர்பலர் வாளுருவிப் பாய்ந்திட்டார்கள்!
தாழ்க்கையின்றி எதிர்த்தார் வேலன் கூட்டத்தார்!
சாய்ந்தனதோள் தலைகால்கள் தடத டென்று!
கீழ்க்கடலின் மிசைவந்த பரிதி அங்கே
கிடந்தஉடற் குருதியிலே கண்விழித்தான்.

கணக்காயன் மாணவரும், வீரப் பர்க்குக்
கையுதவி யானவரும் பகைக்கூட் டத்தைப்
பிணக்காடு செய்கின்றார்! பகைவர் தாமும்
பிளக்கின்றார் பல்லோரைப்! பேழை தன்னை
அணைத்தபடி வாள்சுழற்றும் வேலன் தன்னை
அழிப்பதுவே கருத்ததாகப் பகைவர் கூட்டம்
தணற்காடய்ச் சூழ்கையிலே பேழை காக்கத்
தட்டினான் குதிரையினைத் தறுகண் வேலன்

பறந்ததுவே லன்குதிரை தெற்கு நோக்கி!
பகைவர்களும் தொடர்ந்தார்கள் வேலன் தன்னை!
சிறந்தகணக் காயன்நெடும் பரியும் ஆங்கே
செல்பகைமேற் சென்றதுசெஞ் சிறுத்தை போலே!
மறைந்திடுவான் வேலன்ஒரு காட்டில்! மேட்டில்
வாய்ந்திடுவான் பகைகாண! அவன்தி றத்தை
அறிந்துபகை பாயுங்கால் குதிரை தன்னை
ஆற்றினிலே நீந்துவிப்பான்; தோப்பில் மீள்வான்!

தன்னருமைப் பேழையொடு குதிரைத் தன்னைத்
தட்டுவான்; விரைவினிலே செலுத்து கின்றான்!
பின்தொடரும் பகைவர்சிலர் சோர்ந்து நிற்பார்!
பின்செல்லும் கணக்காயன் அவரைக் கொல்வான்!
இன்னல்தரும் பகைவர்தொகை குறையும் அங்கே!
என்றாலும் அத்தீயோர் தொடருகின்றார்.
மின்னொளியாள் இன்னுயிர் போல் வாள் அன்னத்தின்
மீதுற்ற அன்புளத்தான்; தீது காணான்!








( 5 )





( 10 )




( 15 )





( 20 )





( 25 )




( 30 )
Untitled Document
இயல் 82

{ துறவியிடம் வந்தொருவன் வணங்கி நின்று
வெலன் நிலையைச் சொல்லுகின்றான் }

துறவியிடம் வந்தொருவன் வணங்கி நின்று
"தூயவனைப் பகைவர்பலர் தொடரு கின்றார்!
திறல்வேலன் பேழையுடன் திரியா நின்றான்!
வேலனோடு கணக்காயர் தாமும் சென்றார்!
மூறைமையுடன் வேலனிடம் கிடைத்த பேழை
முரடர்களால் பறிபோகக் கூடும் என்றான்!
துறவிஉளம் கலங்கினான், வேழ, வன்பால்
சொல்லுக போய் இதை"என்றான்! சென்றான் அன்னோன்.

அவ்வேழ மன்னவனால் கதிர்நாடெங்கும்
அமைதிநிலை பெற்றதுதீ யோரால்! யார்க்கும்
எவ்விடத்தும் தீங்கில்லை, நகர்க்காப் பாளர்
எங்கெங்கும் வாள்பிடித்து நின்றி ருந்தார்
கவ்விற்று மாலைஇருள்! வேலன்தன்னைக்
காண்போமா எனப்பலரும் ஐயுற்றார்கள்!
இவ்வளவில் வேலனையும் கொன்றிருப்பார்
என்றுபலர் எண்ணியுளம் ஏங்குவார்கள்!

நரிவாழ்வு வேரோடு சாய்ந்த பின்னும்
நாட்டினிலே அன்னத்தின் நலத்தைப் போக்க
இருப்பவர்தாம் யார்என்று கேட்பார் சில்லோர்!
இளவரசி அன்னத்தை அடைவதற்கோ
எழிற்பேழை வேண்டும்! அதை வேலன் பெற்றான்;
பெற்றான்பால் பெறுவதற்கு முயலுகின்றார்!
ஒருபொருளிற் பற்றுடையார் அறத்தால் கொள்வார்
ஒருசிலர்தீ நெறிச்செல்வார் என்றார் சில்லோர்!

குடிசையிலே நல்லாத்தா மயக்கத்தாலே
குற்றுயிராய்ப் புரண்டபடி கிடந்தாள்! போழ்து
விடிந்ததுவும் தானறியாள்! பரிதி மேற்கில்
விழுந்ததையும் அவளறியாள்; இரவு வந்து
படிந்ததுத னிக்குடிலில்! விளக்கு மில்லை!
பதறினாள்! விழிதிறந்தாள்! எழுந்தி ருந்தாள்!
உடல்நோகத் தீக்கடைந்தாள்! விளக்கை ஏற்றி
உடன்துயின்ற அன்னத்தைப் பார்த்தாள், இல்லை!





( 35 )




( 40 )





( 45 )





( 50 )




( 55 )





( 60 )
Untitled Document
இயல் 83

{ ஆத்தாவுடன் படுத்திருந்தாள் அன்னம். அவள்
விடியலில் காணவில்லை. }


சேயிழையாள் துயில்கிடந்த இடத்தில் தோய்ந்த
செங்குருதி கண்டிட்டாள், ஐயோ என்று
வாயிலிலும் உட்புறந்தும் வெளிப்பு றந்தும்
வஞ்சியுடல் தனைத்தேடிக் காணாளாகித்
தூயவளே அன்னமே என்று கூவிச்
சொல்லொன்றும் செவியினிலே கேளாளாகி
நீயோடி இறந்திட்டாய் எனத்துடித்தாள்!
நீலிஅவள் அவ்விடத்தில் ஓடி வந்தாள்.

அன்னத்தைச் செங்குருதி சாயக் குத்தி
அழகுடலை இடுகாட்டில் பட்டுப்போன
புன்னையடி யிற்புதைத்தார்! என்றன் ஆத்தா!
போனதடி கதிர்நாட்டின் தேனூற் றென்று
சொன்னபடி துடித்தழுது புரண்டாள் நீலி!
துன்பத்து மலையடியிற் புதைந்தாள் ஆத்தா!
சின்னக்குடி லில்குருதி வெள்ளம் கண்டு
சிவக்கின்ற திருவிளக்கும் நடுங்கிற்றங்கே;




( 65 )




( 70 )





( 75 )




( 80 )
Untitled Document
இயல் 84

{ அதேநேரம் பேழையோடு வேலன் வந்தான். }

இக்கொடிய காட்சியினை வேலன் கண்டான்.
இதோபாண்டியன்பரிசு தாயே! என்ன?
பொற்கொடி எங்கே? என்று விரைந்து கேட்டான்.
பொன்னனையாள் செங்குருதி இங்கே சிந்த
அக்கொடியோர் சாக்குத்திப் பட்ட புன்னை
அடியினிலே புதைத்தாரே என்றாள் ஆத்தா!
தைக்கின்ற வேல்நூறும் அம்பு நூறும்
சருக்கென்று பாய்ந்ததுபோல் உளம் துடித்தே

ஐயகோ என அலறிஎன்றன் வாழ்வும்
அழிந்ததடி அன்னமே, என்றி ரண்டு
கையாலும் தலைமோதிக், "கண்ணே உன்றன்
கலக்கத்தை தீர்க்குமோர் இலக்கியத்தைப்
பொய்யாத பாண்டியனார் பரிசை, உண்மை
புலப்படுத்தும் பட்டயத்தைக் கொண்டு வந்து
வையாயோ என்றாயே வஞ்சி, தூக்கி
வந்தேனே செந்தேனே எனக்கேன் பேழை!







( 85 )





( 90 )




( 95 )
Untitled Document
இயல் 85

{ நரிகள் மண்ணைத்தூற்றம் இடுகாடு; வேலன்
அங்கு சென்றான் அலறி }


எங்குள்ளாய் உடன்வைத்துக் கொள்வாய என்றே
இட்டதோர் பேழைதனைத் தோளில் ஏற்றி
அங்குள்ள புன்னயினை எண்ணி வேலன்
அழுதபடி ஓடுகின்றான்! முழுநிலாவும்
பொங்குதுயர் காணவும்பொறாத தாகி
மறைந்ததுவே போய்க்கரிய முகிலுக் குப்பின்!
மங்காமல் விழிக்கும்நரி மண்ணை எற்ற
வருகின்ற இடுகாட்டிற் புன்னையின்கீழ்.

பிணமேடு தனைக்கண்டான் நெஞ்சிரரண்டாய்ப்
பிளந்ததுபோல் திடுக்கிட்டான்! ஆவி தன்னைத்
தணவேறிச் சுட்டதுபோல் துடித்தான்! காணத்
தாங்காது கைவிரைந்து விழித்தான் கண்ணை!
மணல்மீது தான்வைத்தே பேழை தன்னை
மற்றுமொரு முறைகண்டான்! கனவோ அன்றி
உணர்வேதும் கலங்கியதோ எனநினைத்தான்.
உயிர்க்குயிரே அன்னமே எனஅழைத்தான்!

சிவப்பாம்பல் மலர்வாயிற் சிந்தும் முல்லைச்
சிரிப்புக்கும். கருப்பஞ் சாற்றுச் சொல்லுக்கும்,
குவிக்கின்ற காதலொளி விழிக்கும், கார்போல்
கூந்தலுக்கும், சாந்தமுகத் திங்க ளுக்கும்
உவப்புற்றேன் அவ்வுவப்பால் காதல் பெற்றே
உயிர்நீயே என்றுணர்ந்தேன் இயங்க லானேன்!
அவிந்தனையே திருவிளக்கே! இந்த வையம்
அவியவில்லை எனில்எனக்கிங்கென்ன வேலை?

படித்ததுண்டு; கேட்டதுண்டு; கண்ட தென்ன?
பகலியங்கி இரவுறங்கும் சிறுமை யன்றித்
தடித்தஉடல் பெருநெறியிற் சென்றதில்லை
தனித்தினிக்கும் இசைத்தமிழில் தேனும் கூட்டி
வடித்தெடுத்த மொழியாளே, மலர்க்கண் காட்டி
வாழ்விலெனை உயர்வித்தாய், உயிரே, உன்சீர்
முடித்தனையே திருவிளக்கே இந்த வையம்
முடியவில்லை எனில்எனக்கிங் கென்ன வேலை?

பிறக்கமுடி யாதினிமேல் பெண் ஒருத்தி!
பிரிக்கமுடி யாதஉயிர்ப் பொருளே! நெஞ்சம்
மறக்கமுடி யாதஎல்லாம் பேசி, இன்ப
வாழ்க்கையெனும் கடற்கரையின் ஒட்டில் நானோ
சிறக்கஒரு முறையேனும் மூழ்க வில்லை!
சேயிழையே! தீங்கனியே! அந்தோ நீதான்
இறப்பதுவோ! திருவிளக்கே இந்த வையம்
இறக்கவிலை எனில்எனக்கிங் கென்ன வேலை?

மோதல் ஒன்றோ? எதிர்ப்பொன்றோ இப்பேழைக்கு?
முழுமூச்சும் ஈடுவைத்துக் காத்து வந்தேன்!
ஈதல்ஒன்று மற்றொன்று சாதல் என்றே
எண்ணினேன்! அன்னமே உன்மேற் கொண்ட
காதலன்றோ என்வெற்றி! கண்தி றந்து
காணாயோ? பேழையையும் எனையும் விட்டுச்
சாதலுண்டோ திருவிளக்கே இந்த வையம்
சாகவில்லைஎனில் எனக்கிங் கென்ன வேலை?

வெண்ணிலவை எட்டிவிட்டேன் என்றி ருந்தேன்
விண்ணினின்று வீழ்ந்தேனே! தென்றல் காற்றின்
பண்ணமைந்ததமிழ்ப் பொதிகை எனக்கே என்றேன்
பாழ்ங்கிணற்றில் தூக்கிஎறி யப்பெற் றேனே!
திண்ணெனவே இழந்தேனே, பசியைப் போக்கத்
திரட்டியமுப் பழச்சாறே! என்னை விட்டு
மண்ணடைந்தாய்! திருவிளக்கே இந்த வையம்
மடியவில்லை எனில்எனக்கிங் கென்ன வேலை?

கடைவிழியில் நிலவுசெயும் உனது சாயல்
களிமயிலும் காட்டாதே! ஒசிந்த மென்மை
இடையழகு மின்னலிடை இல்லை யேசெவ்
விதழ்கண்டார் மலரிதழும் காண்பா ருண்டோ?
உடையெல்லாம் நீலமணி! கடலோ நாணும்!
ஒளிமுகத்தைக் கண்டிட்டால் பரிதி நாணும்!
மடிந்தாயோ திருவிளக்கே இந்த வையம்
மடியவில்லை எனில்எனக்கிங் கென்ன வேலை?







( 100 )





( 105 )




( 110 )





( 115 )




( 120 )





( 125 )





( 130 )




( 135 )





( 140 )





( 145 )




( 150 )





( 155 )




( 160 )
Untitled Document
இயல் 86

{ பிணத்தைத் தோண்டி மடியில் சாத்தினான். நிலவு
அப்போது முகிலில் மறைந்திருந்தது. }


புதைத்தாரோ இரக்கமிலார் பொன்னு டம்மைப்
புதுமுகத்தைக் கடைசிமுறை காட்டாய் என்று
பதைத்தானாய்ப் பிணப்புதையல் தோண்டிக், கூட்டைப்
பரிந்தெடுத்து தன்மடியில் கிடத்திக் கூந்தல்
ஒதுக்கி, முழுநிலா, முகிலில் புதைந்த தாலே
இருளிடையே ஒளிமுகமும் புதைந்த தென்று
கொதித்துள்ளம், கண்ணேஎன் கண்ணே என்று
கூப்பிட்டு, முகத்தோடு முகத்தைச் சேர்த்தே

"முத்தமடி" கடைசிமுறை! ஒன்றே ஒன்று
முடிந்ததடி என்வாழ்வும்! உயிர்க்கிளைமேல்
தொத்துகிளியே,என்று மலர்க்கன்னத்தைத்
துணைவிழியால் தேடுங்கால் முழுநிலாவும்
மொய்த்தமுகில் கிழித்துவெளிப் பட்ட தாலே
முழுதழுகி, ஊன்கழன்ற முகத்தைக் கண்டான்!
கொத்தாகக் குழல்கழன்ற முகத்தைக் கண்டான்!
குடல்சரிதல் கண்டான்; பல் இளித்தல் கண்டான்








( 165 )





( 170 )




( 175 )
Untitled Document
இயல் 87

{ பின்னர் நிலா வெளிப்படவே, பிணத்தின்
அழகற்ற நிலை கண்டான்; எறிந்தான் பிணத்தை!
வெறுத்துரைத்தான் பெண்ணுலகை! }


சீ!என்று பிணம் எறிந்து விரைந்தெழுந்து
சிதையுடலை மறுமுறையும் உற்று நோக்கி
ஏ! இதற்குத் தானா? இவ்வழியுடற்கா?
இருள்கண்டால் விழிமூடும்! நோயும் அஞ்சும்
வாயெச்சில் கண்டாலும் அருவருக்கும்!
மாக்கீழ்மை! இதற்குத் தானா இப்பாடு!
ஈயருந்த அழகுதசை, எறும்பு மொய்க்க
இற்றொழுகு புண்ணீர்! மற்றிதிலோ நாட்டம்?

பேன்நாறி வீழ்குழலைத் தேனாறு என்றும்
பீளைஒழு கும்விழியை நீல மென்றும்
மேல்நாறும் சளிமூக்கை எட்பூ என்றும்
வெறுங்குறும்பிக், காதை,எழில் வள்ளை என்றும்
ஊன்நாறும் ஊத்தைப்பல் வாய்உதட்டை
ஒலிமுல்லை செவ்வாம்பல் கோவை என்றும்
தோல் நாறும் கன்னம்கண்ணாடி என்றும்
துயர்ஈளை பயில்குரலைக் குயில்தான் என்றும்

உடல்சுமக்கும் உரல்போலும் இடையை, வானின்
உச்சிஅதிர் மின்னலிலும் அச்ச மென்றும்
கொடுங்குள்ள வாத்துநடை அன்ன மென்றும்
குறுகியசெக் குலக்கைக்கால் வாழை என்றும்
இடும்பையிலே இடும்குதிகால் சுவடி என்றும்
ஈரித்த வெள்ளடி தாமரைப்பூ என்றும்
கெடும்படியே சொல்லிவைத்தார் புலவர், நேரில்
கிழக்கினையும் மேற்கென்று கிளத்துவார்போல்!

கண்ணுக்கு மையிட்டும் காதில் மூக்கில்
கல்லிழைத்த நகையிட்டும், சிக்க றுக்க
ஒண்ணாத குழலுக்கு மலர்கள் இட்டும்
உரைநாணும் உடலுக்குத் திரையை இட்டும்
பெண்ணென்று வந்தவளை இட்ட வெல்லாம்
பிரிப்பாரேல் காண்போர்கள் சிரிப்பரன்றோ?
மண்ணுக்கு வைத்தசுமை; வாழ்வின் நஞ்சு
மங்கையரை வெங்கனவாய்மதித்தார் மேலோர்!

மாவடு வென்றால்விழியை மரமே நாணும்!
மலர்என்றால் பெண்முகத்தைச் சோலை நாணும்
காவடிபோ லும்தோளை மூங்கில் என்றால்
காக்கையுந்தன் கால்வைக்கக் கூசுமன்றோ!
நாவடுச்சொல் தேனென்றால் வண்டோ ஒப்பும்?
நங்கையரின் அங்கையோ செங்காந்தட்பூ!
சாவடியின் கால்விலங்கு நிகர்கழுத்தைச்
சங்கென்றால் இக்கொடுமை எங்க டுக்கும்?

தேன்பாதி கொடுநஞ்சு பாதி என்றும்
திருப்பாதி வறுமைநிலை பாதி என்றும்
வான்பாதி படுசூறை பாதி என்றும்
வழிபாதி அடைமுட்கள் பாதி என்றும்
ஊன்பாதி பெருநோயும் பாதி என்றும்
உரைப்பதுபோல் பெண்ணொருத்தி ஆட வன்பால்
நான்பாதி நீபாதி என்பர் ஆயின்
நல்வாழ்விற் சரிபாதி இல்லை ஆகும்...

இருளெல்லாம் பகலாக எண்ணி, நாளும்
இரவெல்லாம் சலியாமல் ஓடி, ஆடித்,
தெருளில்லா, நெஞ்சுடையேன் அலைந்தேன், இன்பம்
தேரேன்; இத் துறைநாடி இன்ன லுற்றேன்!
அருளில்லா, வாட்படைக்கும் வேற்படைக்கும்
அழிவில்லா திருந்திட்டேன் எனினும் அந்தோ
பொருளில்லாப் பெண்மையைநான் பொருளாயெண்ணிப்
பொழுதெல்லாம் பழுதாக்கி விட்டே னன்றோ?

தாய்க்கேனும் தொண்டுசெயார்! அன்பு கொண்ட
தந்தைக்குத் தொண்டுசெய்யார்! தன்நாட்டார்க்குப்
போய்த்தூய தொண்டுசெய்யார்! தமிழ்வ ளர்க்கும்
புதுநூற்குத் தொண்டுசெய்யார்! கல்லார் நல்லா
ராய்த்திகழத் தொண்டுசெய்யார்! அடிமை மாற
அறத்துக்குத் தொண்டுசெய்யார்! பெண்கள் என்னும்
நோய்க்கன்றோ நாளெல்லாம் தொண்டு செய்தார்
நுனிஏறி அடிமரத்தை வெட்டு வார்போல்!

பெண்ணினத்தைத் தூற்றலுற்றான்! பெண்ணி னத்தைப்
பெரிதென்னும் வையத்தை அருவ ருத்தான்!
கண்ணிழந்தான் போலிருந்தான்! எதையும் அங்குக்
காணாமல் இருந்ததனால் காதல் தேனை
உண்ணுவதும் தீர்ந்திட்டான், மெய்வெறுத்தான்!
உயிர்வெறுத்தான்! பெண்நெருப்பில் வீழ்தல் இன்றிப்
பண்படுத்த முடியாதோ உலகை என்றான்.
பலசொன்னான் முடிவான கருத்தும் சொல்வான்!








( 180 )





( 185 )




( 190 )





( 195 )




( 200 )





( 205 )





( 210 )




( 215 )





( 220 )





( 225 )




( 230 )





( 235 )




( 240 )





( 245 )
Untitled Document
இயல் 88

{ பெண்ணுலகை ஏசுகின்ற வேலனின் பின்
அன்னம் வந்து நின்று அழைத்தாள். }


முதுவையம்! தீச்செயலால் முடிந்த வையம்!
முடிவிலொரு பயனில்லா வையம்! என்றான்!
அதுபோதில் பின்புறத்தில் அன்னம் வந்தே
அடியோடு தீர்ந்ததுவோ ஆ ஆ என்றாள்!
இதுவைய மாஎன்றான்! "உள்ளேன என்றாள்!
இரண்டுமுகில்! இரண்டுநிலை! உனைநான் பெற்றேன்
புதுவையம்! புதுவையம் இதுதான் என்றான்!
பூவைநீ இலாவையம் விழலே என்றான்!

திகழ்வேலன் பாண்டியனார் பரிசு தன்னைச்
செங்கையிரண்டும்சேர்த்துத் தூக்கி, "உன்றன்
புகழ்க்குரிய பேழையினைக கொள்க என்றான்!
பூங்கையால் வாங்கினாள் முகத்தில் ஒற்றி
மகிழ்ச்சியொடு கீழ் அமைத்தாள் திறந்தாள்;கண்ணால்
மங்காத பட்டயமும் அனைத்தாள் திறந்தாள்; கண்ணால்
முகம் தாழ்த்திக் கால்விரலால் தரையைக் கீறி
முடிந்ததுசூள்; கடிமணந்தான் மிச்சம் என்றாள்.





( 250 )




( 255 )





( 260 )
Untitled Document
இயல் 89

{ வேலன் நடந்ததை உரைத்தான். }

ஆம்என்றான், அள்ளூற! இனிமேல் உம்மை
அத்தான்என்றழைத்திடுவேன் என்றாள் அன்னம்!
தூமணியே செய்என்றான்! என்னை வந்து
தொடுங்கள் அத்தான் என்றுரைத்தாள்! தீர்ந்த பின்னர்
மாமயிலே இனிமெதுவாய் நடப்பாய் என்று
மணிப்பேழை தான்தூக்கி நடக்கலானான்!
தீமையுறு பிணமென்ன? இறந்ததாகச்
செப்பியவர் யார் என்றாள்! வேலன் சொன்னான்;

தெங்குபெருங் குலைசுமந்த தைப்போல் பேழை
செங்கையிலே சுமந்தகுடி சைபு குந்தேன்.
மங்கை எழில் அன்னமெங்கே என்று கேட்டேன்.
மரத்தடியில் புதைத்தார்கள் என்றார் தாயார்.
செங்குருதி தோய்ந்திருத்தல் கண்டேன், அங்கே
செவ்விழியால் நீர்பெருக இருந்தாள் நீலி!
இங்கு வந்தேன், சரி, அதுபோ கட்டும், பெண்ணே
இன்பமன்றோ நடைமுத்தம் என்றான் வேலன்.



( 265 )




( 270 )





( 275 )




( 280 )
Untitled Document
இயல் 90

{ அன்னம், நீலன் வீட்டில் இருந்ததையும் இப்போது
குடிசைக்கு வந்தபோது ஆத்தா வியப்புற்றுச்
சொன்னதையும் சொல்லுகிறாள் }


உம்அன்னை யுடன் துயின்றேன். விடியுமுன்னே
உலவிவர நீலிஎன்னை அழைத்துச் சென்றாள்!
அம்மருங்கில் தீயவர்கள் எனைஎ திர்த்தார்!
அப்போது நீலன் எனைத் தன்அ கத்தில்
செம்மையுற இருஎன்றான். வெளியிற்சென்றால்
தீமைஎன உரைத்திட்டான். அங்கி ருந்தேன்!
இம்மதியின் ஒளியினிலே குடிசை வந்தேன்,
எழில்நீலி, ஆத்தாவும் வியப்புற் றார்கள்!

நானிறந்து போனேனாம்! புன்னை யண்டை
நல்லுடலைப் புதைத்தாராம்! ஆத்தா வின்பால்
தேனிதழாள் நீலி இது சொன்னாள்! அந்தச்
சேயிழைக்கோ நீலனுரைத் தானாம்! என்றன்
ஊன்உகுத்த செங்குருதி குடிசை தன்னில்
ஒரேவெள்ள மாயிற்றாம்! இதுவு மன்றிப்
போனதுயிர் எனும்படியே அருமை ஆத்தா
புலன்மயங்கிக் கிடந்ததுவும் வியப்பே என்றாள்.









( 285 )





( 290 )




( 295 )