பக்கம் எண் :

               தமிழச்சியின் கத்தி

                  பொன்துளிர்


                 எண்சீர் விருத்தம்
      

சுப்பம்மா கால்தூக்கம், சுப்பம் மாவின்
       துணைவனின்ஒன் றேமுக்கால் தூக்கம் எல்லாம்
தொப்பெனவே இல்லாது மறையும் வண்ணம்,
       துளிர்த்ததுபொற் றுளிர்கிழக்கு மாம ரத்தில்!
அப்போதில் சுப்பம்மா, 'அத்தான் என்றாள்
'       அவசரமா' எனத்திம்மன் புரண்டான் ஆங்கே.
'இப்படிப்போ' என்றுபகல், இருளைத் தள்ளி
       எழுந்துவந்து திம்மனெதிர் சிரித்த தாலே.

'அம்மா'என் றிருகையை மேலே தூக்கி,
       'ஆ'என்று கொட்டாவி விட்டுக் குந்தித்
திம்மன்எழுந் தான்! அவனும், சுப்பம் மாவும்,
       சிறுகுடிசை விட்டுவெளிப் புறத்தில் நின்றே,
அம்மலையின் தோற்றத்தைக் கண்டார். காலை
       அரும்புகின்ற நேரத்தில் பொற்கதிர் போய்ச்
செம்மையுறத் தழுவியதால் மலைக்கோட் டைமேல்
       சிறகுவிரித் தெழுங்கருடக் கொடியைக் கண்டார்.




( 5 )





( 10 )



( 15 )

                     வானப்படம்

                 தென்பாங்கு -- கண்ணிகள்

      

'பொன்னான வானப் படத்தில் -- வயிரப்
புதிதான வண்ணம் குழைத்துத்
தன்னேர் இலாதமலை எழுதித் - திகழ்
தளிர்படும் பூஞ்சோலை எழுதி
உன்னை மகிழ்வித்த காட்சி -- எனக்கும்
உவகை கொடுத்தடி பெண்ணே'
என்றுரைத் தான்நல்ல திம்மன் -- அந்த
ஏந்திழை தான்புகல் கின்றாள்.

'விண்மீதில் அண்ணாந்த குன்றம் -- அதனை
மெருகிட்டு வைத்தசெங் கதிர்தான்
ஒண்ணீழல் செய்திடும் சோலை -- யதனை
ஒளியில் துவைக்கும் காண்க!
கண்காணும் ஓவியம் அனைத்தும் -- அழகு
காட்டப் புரிந்ததும் கதிர்தான்!
மண்ணிற் பிறந்தோர் எவர்க்கும் -- பரிதி
வாய்த்திட்ட அறிவாகும்' என்றாள்.

மங்கையும் திம்மனும் இயற்கை -- அழகில்
வாழ்கின்ற போதிற் சுபேதார்,
செங்கையில் மூட்டையோடு வந்தான் -- புதுமை
'தெரியுமா உங்களுக்' கென்றான்,
அங்காந்த வாயோடு திம்மன் -- விரைவில்,
'அதுவென்ன புகலுவீர்' என்றான்!
'சிங்கன் முயற்சி வீணாமோ -- புதிய
சிப்பாயும் நீயாகி விட்டாய்.

இந்தா இதைப்போடு! சட்டை! -- இதுவும்
எழிலான சல்லடம்! மாட்டு!
இந்தா இதைப்போடு! பாகை! -- இன்னும்
இந்தா இடைக்கச்சை! கட்டு!
செந்தாழை மடல்போன்ற கத்தி -- இடையில்
சேர்த்திறுக் கித்தொங்க வைப்பாய்!
வந்துபோ என்னோடு திம்மா! -- விரைவில்
வா'என் றழைத்தனன் சிங்கன்!




( 20 )





( 25 )




( 30 )




( 35 )




( 40 )




( 45 )


                 
              புதிய சிப்பாய்

             எண்சீர் விருத்தம்

'சுதரிசன்சிங் செய்தநன்றி பெரிது கண்டாய்!
          சுப்பம்மா விடைகொடுப்பாய்!' என்றான் திம்மன்.
இதற்கிடையில், சுதரிசன்சிங்க் 'நாளைக் குத்தான்
          இங்குவர முடியும்நீ' என்று ரைத்தான்.
'அதுவரைக்கும் நான்தனியாய் இருப்ப துண்டோ.
          அறிமுகமில் லாவிடத்தில்?' என்றாள் அன்னாள்.
'இதுசரிதான் இன்றிரவே உனைய னுப்ப
          ஏற்பாடு செய்கின்றேன்' என்றான் சிங்கன்,

'சிங்குநமக் கிருபெண்கள் துணைவைத் தாரே
          சிறிதும்உனக் கேன்கவலை?' என்றான் திம்மன்.
'இங்கெதற்கும் அச்சமில்லை சுப்பம் மாநீ
          இரு' என்று சிங்கனுரைத் திட்டான் திம்மன்
பொங்கிவரும் மகிழ்ச்சியிலே பூரித் தானாய்ப்
          புறப்பட்டான் சிங்கனொடு! சுப்பம் மாவும்,
சுங்குவிட்ட தலைப்பாகை கட்டிக் கொண்டு
          துணைவன்போ வதுகண்டு சொக்கி நின்றாள்!



( 50 )




( 55 )





( 60 )

                 
              அன்றிரவு

              அகவல்
     

மாலை ஆயிற்று! வரும்வழி பார்த்துச்
சோலை மலர்விழி துளிகள் உதிர்க்கக்
குடிசையின் வாசலில் குந்தி யிருந்தாள்
சுப்பம் மாவுக்குத் துணையாய் இருந்த
குப்பும் முருகியும் செப்பினர் தேறுதல்
குப்பு, 'மங்கையே, சிப்பாய் இப்போ
வருவார்; அதற்குள் வருத்தமேன்' என்றாள்.
முருகி, 'இதற்கே உருகு கின்றாயே
சிப்பாய் வேலைக் கொப்பிச் சென்றவர்
மாசக் கணக்காய் வாரக் கணக்காய்
வீட்டை மறந்து கோட்டையில் இருப்பார்;
எப்படி உன்னுளம் ஒப்பும்' என்றாள்.
கோதைசுப் பம்மா கூறு கின்றாள்.
'புயற்காற்று வந்து, போகாது தடுப்பினும்
அயலில் தங்க அவருக்குப் பிடிக்காது;
நெஞ்சம் எனைவிட்டு நீங்கவே நீங்காது;
பிரிந்தால் எனக்கும் பிடிக்கா துலகமே!
வீட்டை விட்டவர் வெளியே செல்வது
கூட்டைவிட் டுயிர்வேறு கூடு செல்வதே'
அதென்ன மோயாம் அப்படிப் பழகினோம்
அயல்போ வாரெனில் அதுவும் எங்கே?
வயல்போ வதுதான். வலக்கைப் பக்கத்து
வீடு, மற்றொரு வீடு, தோப்பு
மாமரம் அதனருகு வயல்தான்! முருகியே
இப்போ தென்ன இருக்கும் மணி? அவர்
எப்போது வருவார்?' என்று கேட்டாள்.
குப்பு, மணி ஆறென்று கூறினாள்! முருகி
விளக்கு வைக்கும் வேளை என்றாள்!
குப்பு, முருகி சுப்பம்மா இவர்
இருந்த இடமோ திருந்தாக் குடிசை
நாற்பு றம்சுவர் நடுவி லேஓர்
அறையு மில்லை. மறைவு மில்லை
வீட்டு வாசல், தோட்ட வாசல்
இருவா சல்களும் நரிநுழை போலக்!
குள்ள மாகவும், குறுக லாகவும்,
இருந்தன. முருகி எழுத்து விளக்கை
ஏற்றிக் கும்பிட்டுச் சோற்றை வடித்தாள்
குப்பு, மகிழ்ந்து குந்தினாள் சாப்பிடச்
சுப்பம் மாமுகம் சுருங்கிக் கூறுவாள்;
'கணவர் உண்டபின் உணவு கொள்வேன்.
முதலில் நீங்கள் முடிப்பீர் என்றனள்
குப்பு 'வாவா சுப்பம் மாநீ
இப்படி வா! நான் செப்புவ தைக்கேள்
வருவா ரோஅவர் வரமாட் டாரோ?

சிப்பாய் வேலை அப்படிப் பட்டது
உண்டு காத்திரு, சிப்பாய் வந்தால்
உண்பார்; உணவு மண்ணாய் விடாது.
சொல்வதைக் கேள்' என்று சொல்லவே மங்கை
'சரிதான் என்று சாப்பிட் டிருந்தாள்.
காலம் போகக் கதைகள் நடந்தன.
முருகி வரலாறு முடிந்துலும் குப்பு,
மாமியார் கதையை வளர்த்தினாள், பிறகு்
மூவரும் தனித்தனி மூன்று பாயில்
தனையணை யிட்டுத் தலையைச் சாய்த்தனர்.
அப்போது தெருப்புறம் அதிக மெதுவாய்
'என்னடி முருகி' என்ற ஒருகுரல்
கேட்டது. முருகி கேட்டதும் எழுந்துபோய்
'ஏனிந் நேரம்' என்று வரவேற்று,
வீட்டில் அழைத்து வெற்றிலை தந்தாள்.
இருவரு மாக ஒரேபாய் தன்னில்
உட்கார்ந் தார்கள்! உற்றுப் பார்த்த
சுப்பம் மாஉளம் துண்டாய் உடைந்தது
சிங்கன் இரவில் இங்கு வந்ததேன்?
முருகியும் அவனும் அருகில் நெருங்கி
உரையாடு கின்றனர் உறவும் உண்டோ;
என்று பலவா றெண்ணி இருக்கையில்,
முருகிக்குச் சிங்கன் முத்த மிட்டான்.
குப்பும் கதவினைத் தொப்பென்று சாத்திச்
சூழ நடந்து சுடர்விளக் கவித்தாள்
'மேல் என்னென்ன விளையுமோ?
கண்ணிலாள்
போல்இவ் விருளில் புரளு கின்றேன்
சுதரிசன் சிங்கின் துடுக்குக் கைகள்
பதறிஎன் மீது பாய்ந்திடக் கூடுமோ',
என்று நினைத்தாள்; இடையில் கத்தியை
இன்னொருதரம் பார்த்துப் பின்னும் மறைத்தாள்.
கரைகண்டு கண்டு காட்டாற்றில் மூழ்கும்
சேய்போல் நங்கை திடுக்கிடும் நினைப்பில்
ஆழ்வதும் மீள்வது மாக இருந்தாள்.
கருவிழி உறங்கா திரவைக் கழிக்கக்
கருதினாள் ஆயினும் களையுண் டானதால்
இருட்சேற் றுக்குள் இருந்த மணிவிழியைக்
கரும்பாம் பாம்துயில் கவர
இரவு போயிற்றே! இரவு போயிற்றே!

( 65 )




( 70 )




( 75 )



( 80 )




( 85 )



( 90 )




( 95 )



( 100 )




( 105 )





( 110 )




( 115 )



( 120 )




( 125 )



( 130 )




( 135 )



( 140 )




( 145 )




( 150 )


                      மகிழ்ந்திரு

                தென்பாங்கு -- கண்ணிகள்
     

நீராடை பாசியில்
தாமரை பூத்தது போலே -- நல்ல
நீலத் திரைகடல் மேலே -- பெருங்

காரிருள் நீக்கக்
கதிர்வந்து பூத்ததி னாலே

வாரிச் சுருட்டி எழுந்தனள்
சிங்க னப் போது -- உடை
மாற்றினன் தன்னுடல் மீது -- அவன்
நேரில் அழைத்தனன்
வந்துநின் றாளந்த மாது

'ஆயிரம் பேரொடு
திம்மனும் அங்கிருக் கின்றான் -- காவாத்
தாரம்பம் செய்திருக் கின்றான் -- அவன்
ஞாயிறு செல்லத் திங்
கட்கிழமை வருகின்றான்.

போயிருந் தாலென்ன?
அச்சம் உனக்கென்ன இங்கு -- நீ
பொன்போலப் பாயில் உறங்கு -- இரு
தாய்மாரும் உண்டு!
துயர்செய்வ தெந்தக் குரங்கு?

ஆவி்உன் மேல்வைத்த
திம்ம னிடத்திலும் சென்று -- நான்
ஆறுதல் கூறுவேன் இன்று -- நீ
தேவை இருப்பதைக்
கேள் இங்குத் தங்குதல் நன்று.

கோவை படர்ந்திட்ட
கொய்யாப் பழந்தரும் தோட்டம் -- இங்குக்
கூவும் பறவையின் கூட்டம் -- மிக
நாவிற்றுப் போகும்
இனிக்கும் பழச்சுளை ஊட்டம்.

தெற்குப்புறத்தினில்
ஒடி உலாவிடும் மானும் -- அங்குச்
செந்தினை மாவோடு தேனும் -- உண்டு
சற்றே ஒழிந்திடல்
செல்லுவ துண்டங்கு நானும்!

சிற்றோடை நீரைச்
சிறுத்தையின் குட்டி குடிக்கும் -- அதைச்
செந்நாய் தொடர்ந்து கடிக்கும் -- அங்கே
உற்ற வரிப்புலி)
நாயின் கழுத்தை ஒடிக்கும்.

மாங்குயில் கூவி, இவ்
வண்ணத் தமிழ்மொழி விற்கும் -- இந்த
வையமெலாம் அதைக் கற்கும் -- களி
தாங்காது தோகை

விரித்தாடி மாமயில்      நிற்கும்.
பாங்கிலோர் காட்டில்
படர்கொடி ஊ.ஞ்சலில் மந்தி --ஒரு
பாறையின் உச்சியை உந்தி -- உயர்
மூங்கில் கடுவனை
முத்தமிடும் அன்பு சிந்தி.

கைவைத்த தாவில்
பறித்திட லாகும்ப லாக்காய் -- நீ
கால்வைத்த தாவில் க ளாக்காய் -- வெறும்
பொய்யல்ல நீஇதைப்
போயறிவாய் காலப் போக்காய்.

ஐவிரல் கூட்டி
இசைத்திடும் யாழ்கண்ட துண்டு -- யாழின்
அப்பனன் றோவரி வண்டு? -- மக்கள்
உய்யும் படிக்கல்ல
வோஇவை செய்தன தொண்டு?

'போய்வருவேன்' என்று
சொல்லிச் சுதரிசன் போனான் -- அந்தப்
பூவையின் மேல்மைய லானான் -- அவன்
வாய்மட்டும் நல்லது;
உள்ளம் நினைத்திடில் ஈனன்.

தூய்மொழி யாளும்
சுதரிச னைநம்ப வில்லை -- என்று
தொலையுமோ இப்பெருந் தொல்லை -- என்று
வாய்மொழி இன்றி
இருந்தனன் அக்கொடி முல்லை.



( 155 )






( 160 )





( 165 )




( 170 )




( 175 )





( 180 )




( 185 )





( 190 )




( 195 )




( 200 )





( 205 )




( 210 )




( 215 )





( 220 )