பக்கம் எண் :

தமிழச்சியின் கத்தி

சேரிக்குள் சென்றாள்

எண்சீர் விருத்தம்


எட்டிஇருந் திட்டபல சேரிமக்கள்
       இல்லங்கள் நோக்கிஅவள் மெல்லச் சென்றே
இட்டகனல் வெப்பத்தால் தோழிமாரே,
       என்நெஞ்சு வெந்ததுண்டு தோழிமாரே,
மட்டற்ற நாவறட்சி தோழிமாரே,
       வாட்டுவதால் நீர்கொடுப்பீர் தோழிமாரே,
எட்டுணையும் மறுப்பீரோ தோழிமாரே,
       என்றுநடு வீதியிலே கூவி நின்றாள்.

சேரியிலே வீடுதொறும் விழித்தி ருந்து
       சேதிதெரிந் திடநினைத்த சேரி மக்கள்
ஓரொருவ ராய்வந்தார் வெளியில்; 'அம்மா
       உற்றதென்ன உந்தமக்கே? உரைக்க வேண்டும்.
நீர்குடிப்பீர்; நில்லாதீர்; அமைதி கொள்வீர்;
       நிலவில்லை; இந்தஇருள் தன்னில் வந்தே,
கூரைகொளுத் தியதீயர் எவர்? உமக்குக்
       கொடுமைஇழைத் தவர்யாவர்? உரைப்பீர்' என்றார்.

'திரிநெருடி நெய்யூற்றி விளக்கை ஏற்றிச்
       சிறுதடுக்கும் இட்டு, நீர் குடிக்கத் தந்த
பெரியீரே, என் அருமைத் தோழிமாரே
       பெருந்தீயால் சிறுவீடு வேகும் கோலம்
தெருவினிலே கண்டீரே இரங்கினீரோ!
       செயும்உதவி செய்தீரோ? மக்கள் கூட்டம்
ஒருமுனையிற் பெற்றதீ, முழுதும் தீர்க்கும்;
       என்னுமோர் உண்மையினை மறக்கலாமோ?

குளக்கரையின் சிறிதளவு குளத்த சைவே
       கொல்புலியால் ஒருவன்இடர், பலர்க்கும் அன்றோ?
இளக்காரம் தாராமல், தீமை ஒன்றை
       இயற்றியோ ரைஊரார் எதிர்க்க வேண்டும்.
களாப்புதரும் தன்னகத்தே இடங்கொடுத்தால்
       கவ்விவிடும் வேரினையே காட்டுப் பன்றி!
விளாஓடும் பழமும்போல் பிரிதல் தீமை
       வெளியானைக் கொட்டும் தேனீக்கள் வாழும்!

சுதரிசனாம் சுபேதாராம் தோழி மாரே,
       துணைவருக்குச் சிப்பாயின், உத்தி, யோகம்
உதவுவதாய் அழைத்துவந்தான்; கோட்டைக் குள்ளே,
       ஒளித்துவைத்தான் எனைவிட்டுப் பிரித்து வைத்தான்
இதன்நடுவில் குடிசையிலே இருக்கும் என்னை
       எடுத்தாள எண்ணமிட்டான் சூழ்ச்சியெல்லாம்
புதிதுபுதி தாய்ச்செய்தான்; கூரை தன்னைப்
       பொசுக்கினான் நான்கலங்கிப் போவேனென்று.

தீஎரியும் நேரத்தில், தீமை வந்து
       சீறுகின்ற நேரத்தில், எனைஇ ழுத்துப்
போய், அழிக்க எண்ணமிட்டான் எனது கற்பை!
       புதைத்திருந்தேன் என்இடையில் குத்துக் கத்தி
தோயுமடா உன்மார்பில் என்று காட்டித்,
       ?தொலையில்போ! என்றேன்நான்! சென்றான் அன்னோன்
நாய்குலைக்க நத்தம்பாழாமோ சொல்வீர்
       நான்அடைந்த தீமைகளைச் சுருக்கிச் சொன்னேன்.

உயிர்போன்ற என்கணவர் இருக்கும் கோட்டை
       உட்புறத்தை நான்அடைய வேண்டும் அங்கே
துயரத்தில் ஆழ்த்தப்பட் டிருக்கின் றாரா?
       துயரின்றி இருக்கின்றாரா துணைவர்?
முயல்வதே என்கடமை உளவு தன்னை
       மொழிவதுதான் நீங்கள்செய்யும் உதவி? என்றாள்.
துயரோடு வந்திட்ட எம்பிராட்டி
       தூங்கிடுக விடியட்டும்? என்றார் அன்னோர்.

கண்மூட வழியிலையே! விடியு மட்டும்
       காத்திருக்க உயிரேது? தோழி மாரே,
விண்மூடும் இருட்டென்றும், பகல்தா னென்றும்
       வேறுபா டுளதேயோ வினைசெய் வார்க்கே?
மண்மூடி வைத்துள்ள புதுமையைப்போல்
       மனமூடி வைத்திருப்பார் சூழ்ச்சி! இந்தப்
பெண்மூடி வைத்திடவோ என்உணர்வை?
       பெயர்கின்றேன் வழியுரைப்பீர் பெரியீர் என்றாள்.

கையோடு கூட்டிப்போய்க் காட்டுகின்றோம்
       காலையிலே ஆகட்டும்; இரவில் போனால்
செய்வதொன்றும் தோன்றாது; தெருத்தோன்றாது;
       சிப்பாய்கள் நம்மீதில் ஐயம் கொள்வார்.
மெய்யாலும் சொல்கின்றோம் கணவர் உள்ள
       வீட்டையோ கோட்டையையோ அறிவதெங்கே
ஐயாவைக் காணுவதும் முடியாதென்றார்
       அரிதான மாண்புடையாள் சரிதான் என்றாள்.





( 5 )





( 10 )




( 15 )





( 20 )





( 25 )




( 30 )





( 35 )




( 40 )





( 45 )





( 50 )




( 55 )





( 60 )





( 65 )




( 70 )

மன்னனைக் கண்டாள்

(தென்பாங்கு -- கண்ணிகள்
  
        

தேசிங்கு மன்னன் -- சில
சிப்பாய்களோடு
பேசிச் சிரித்தே -- தன்
பெருவீடு விட்டு
மாசற்ற தான -- புனல்
மடுவிற் குளிக்க
வீசுங்கை யோடு -- மிக
விரைவாய் நடந்தான்!

எதிர்ஓடி வந்தாள் -- நல்
எழிலான மங்கை!
சுதரிசன் சிங்கன் -- என்
துணையைப் பிரித்தான்;
மதில்வைத்த கோட்டை -- தனில்
வைத்தே மறைத்தான்;
எதைநான் உரைப்பேன்? -- அவன்
எனையாள வந்தான்.

குடிபோன வீட்டை -- அக்
கொடியேனும் நேற்று
நடுவான இரவில் -- அவன்
நாலைந்து பேரால்
முடிவாய்ந்த மன்னா -- அனல்
மூட்டிப் பொசுக்கிக்
கடிதாக என்னை -- அவன்
கைப்பற்ற வந்தான்;

தப்பிப் பிழைத்தேன் -- இதைத்
தங்கட்கு உறைக்க
இப்போது வந்தேன் -- இனி
என்கணவ ரைநான்
தப்பாது காண -- நீர்
தயை செய்ய வேண்டும்
ஒப்பாது போனால் -- என்
உயிர் போகும்? என்றாள்.

சுதரிசன் சிங்கன் -- நம்
சுபேதாரும் ஆவான்;
இதைஅவன் பாலே -- சொல்!
ஏற்பாடு செய்வான்
இதையெலாம் சொல்ல -- நீ
ஏனிங்கு வந்தாய்?
கதையெலாம் பொய்யே -- இத்
தமிழருக்கு என்றான்.

தேசிங்கு போனான் -- சில
சிப்பாய்கள் நின்று
பேசினால் சாவாய் -- நீ
பேசாது போடி
வீசினாய் அரசர் -- வரும்
வேளையில் வந்தே,
பேசாது போடி? -- என்று
பேசியே போனார்.

என்றசொற் கேட்ட -- அவ்
வேந்திழை, தீயில்
நின்றவள் போல -- ஒரு
நெஞ்சம் கொதித்து
நன்றுகாண் நன்று! -- மிக
நன்று நின் ஆட்சி!
என்றே இகழ்ந்து -- தணல்
இரு கண்கள் சிந்த,

படைவீடு தன்னை -- அவள்
பலவீதி தேடி
கடைசியிற் கண்டு -- நீள்
கதவினைத் தட்டி,
?அடையாத துன்பம் -- இங்
கடைகின்ற என்னை
விடநேர்ந்த தென்ன? -- நீர்
விள்ளுவீர்? என்றாள்.

கொண்டோன் இருக்க -- அவன்
கொடுவஞ்ச கத்தால்
பெண்டாள எண்ணி -- மிகு
பிழைசெய்த தீயன்
உண்டா என் அத்தான் -- அவன்
உம்மோடு கூட?
எண்ணாத தென்ன -- எனை?
இயம்புவீர்? என்றாள்.

உள்ளிருக் கின்றீர்? -- என்
உரை கேட்ப துண்டோ?
விள்ளுவீர்? என்றாள் -- அங்கு
விடை ஏது மில்லை.
பிள்ளைபோல் விம்மிப் --பெரும்
பேதையாய் மாறி
தெள்ளுநீர் சிந்தும் -- கண்
தெருவெலாம் சுற்ற,

கோட்டையை நீங்கி -- அக்
கோதையாள், சேரி
வீட்டுக்கு வந்து -- தன்
வெறுவாழ்வை நொந்து
மீட்டாத வீணை -- தரை
மேலிட்டதைப்போல்
பாட்டொத்த சொல்லாள் -- கீழ்ப்
படுத்துக் கிடந்தாள்!



( 75 )




( 80 )





( 85 )





( 90 )




( 95 )




( 100 )




( 105 )





( 110 )




( 115 )




( 120 )





( 125 )




( 130 )





( 135 )





( 140 )




( 145 )




( 150 )




( 155 )





( 160 )

 இருமாதரும் அழைத்தார்கள்

(தென்பாங்கு கண்ணிகள்)

       

?எப்படி இங்கு வந்தாய்? -- சுப்பம்மா
எழுந்திரு விரைவாய்
எப்படி நீ இளைத்தாய் -- அவர்கள்
இன்னல் புரிந்தாரோ?
செப்படி அம்மா நீ -- உனக்கோர்
தீமையும் வராமல்
மெய்ப்படியேகாப்போம் -- எமது
வீட்டுக்கு வா? என்றனர்.

முருகியுங் குப்பும் -- இப்படி
மொழிந்து நிற்கையில்
?வருவது சரியா -- உங்களின்
வழக்கம் கண்ட பின்னும்?
தெரியும் சென்றிடுவீர்? என்றுமே
சேயிழை சொல்லிடவே
அருகில் நில்லாமல் -- அவர்கள்
அகன்று விட்டார்கள்


( 165 )




( 170 )





( 175 )


சேரித்தலைவன் செங்கான்

(எண்சீர் விருத்தம்)
       

சேரிவாழ் செங்கானை, இரண்டு பேரும்
        தெருவினிலே தனியிடத்தில் கூட்டி வந்து,
?சேரிக்கு நீ தலைவன் உன்வீட்டில்தான்
        சேயிழையும் இருக்கின்றாள், அவள்இப்போதில்
ஆரையுமே வெறுக்கின்றாள். நல்ல தெல்லாம்
        அவளுக்குப் பொல்லாங்காய்த் தோன்றும் போலும்
நேரில் அவள் கற்பழிக்கச் சிலபேர் செய்த
        நெறியற்ற செய்கையினால் வெறிச்சியானாள்.

இங்கேயே இருக்கட்டும் சமையல் செய்தே
        இவ்விடத்தில் அனுப்புகின்றோம்; சாப்பி டட்டும்.
அங்கிருக்கும் அதிகாரி சொன்ன தாலே
        அனுப்புவதாய்ச் சம்மதித்தோம். இதெயெல் லாம்நீ
மங்கையிடம் சொல்லாதே! சொல்லி விட்டால்
        மறுபடிநீ பெருந்துன்பம் அடைய நேரும்
இங்கேவா இதையும்கேள்; அவள்இருக்கும்
இல்லத்தில் மற்றவர்கள் இருக்க வேண்டாம்?

என்றந்த இருமாதர் சொல்லக் கேட்ட
        இணக்கமுறும் செங்கானும் உரைக்கலுற்றான்;
?அன்றைக்கே யாமறிந்தோம் இவைகள் எல்லாம்:
        அதிகாரிகள்கலந்த செயல்களென்று!
நின்றதில்லை அவ்விடத்தில்! நெருங்கி வந்து
நீயார்என் றொருவார்த்தை கேட்ட தில்லை.
சென்றுவருவீர்! நீங்கள் சொன்னதைப்போல்
        செய்கின்றேன்? என்றுரைத்தான்! சென்றார் தீயர்,

( 180 )




( 185 )





( 190 )




( 195 )





( 200 )

செங்கான் உண்ண அழைத்தான்

(தென்பாங்கு -- கண்ணிகள்)

ஆனைத் தலைப் பாறையாம் -- அதனண்டையில்
அல்லி மலர்ப் பொய்கையாம்
மேனி முழுக்காட்டியே -- வரு வாயம்மா
வெம்பசி தீர்ப்பாயம்மா
கூனல் அவரைப் பிஞ்சு -- பொறித்தோம்; சுரைக்
கூட்டு முடித்தோம் அம்மா;
ஏனம் நிறைவாகவே -- கருணைக் கிழங்கு
இட்டுக் குழம்பும் வைத்தோம்
.
சென்று வருவாயம்மா -- புனலாடியே
தின்று துயில்வா யம்மா
என்றுசெங்கான் சொல்லவே -- அந்த ஏந்திழை
ஏகினாள்; நீராடினாள்.
அன்னவள் சோறுண்டனள் -- அவள் நெஞ்செலாம்
அன்னவன் மேல் வைத்தனள்.
தின்பன தின்றானதும் -- அந்தச் சேயிழை
செங்கா னிடம் கூறுவாள்:

?உண்டு களைப்பாறினோம் -- மறவேனையா
உரைப்பது கேட்பீரையா
அண்டி இருந்தேன் உமை ஒரு நாளுமே
அன்பு மறவேனையா
சண்டிச் சுதரிசன்சிங்க் -- இன்றி ராவிலும்
தையல் எனைத் தேடியே
கொண்டதன் எண்ணத்தையே -- நிறை வேற்றிடக்
கூசிட மாட்டானையா

அம்மையும் அப்பாவும் நீர் -- என எண்ணினேன்
ஆன துணை செய்குவீர்?
இம்மொழி கள்கூறினாள் -- அந்த ஏந்திழை!
இயம்பிடு கின்றான் செங்கான்:
?எம்மைத் துரும்பாகவே -- நினைக்கின்றனர்
இங்கே அதிகாரிகள்
வெம்மைக் கொடும்பாம்புபோல் -- அவர் சீறுவார்
வெள்ளையை வெள்ளை என்றால்!

தீய வடநாட்டினர்! -- இவர் ஏதுக்கோ
செஞ்சியில் வந்தாரம்மா
நாயும் பிழைக்காதம்மா -- இவர் ஆட்சியில்
நல்லவர் ஒப்பாரம்மர்
தீயும் புயற்காற்றுமே -- இவர் நெஞ்சிலே
செங்கோல் செலுத்து மம்மா
ஓயாது மக்கட் கெல்லாம் -- இடை யூறுதான்
உண்டாயிற்றம்மா? என்றான்.


( 205 )



( 210 )




( 210 )




( 220 )




( 225 )





( 230 )




( 235 )






( 240 )




( 250 )