பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை106

தவித்தலையும் மாந்தர்துயர் தீர்த்தி டாமல்
      தலைவரெல்லாம் ஆளுக்கோர் கட்சி பேசி
நவக்கிரகம் எனத்திரும்பிக் கொண் டிருந்தால்
      நாட்டுக்கு நல்வாழ்வோ கிடைக்கும்? கொட்டிக்
கவிழ்த்திடுதல் மிகயெளிதே! ஒன்று பட்டுக்
      கடமைசெயின் தன்னாட்சி பெறுதல் கூடும்,
புவித்தலைமை பெறுதற்கும் முடிமூ வேந்தர்
      பொற்காலம் காணுதற்கும் முயற்சி செய்வீர்!

இன்றுள்ள தமிழரெலாம் அந்த நாளில்
       இருந்தவர்போல் தலைநிமிர்ந்து வாழ்தல்வேண்டும்,
என்றென்றும் செந்தமிழைக் காத்தல்வேண்டும்;
       ஏமாற்றும் மனப்பான்மை மறைதல் வேண்டும்.
நன்மைக்கு நம்செயலைப் பிறந்த நாட்டின்
       நலம்வேண்டி நம்முயிரை ஈதல் வேண்டும்.
குன்றைப்போல் தடைசெய்யும் சாதி பேதக்
       கொடுமையிலாச் சமுதாயம் அமைதல் வேண்டும்.

                  (செய்தி தினத்தந்தி)
 புய நானூறு
இரவு நேரம் மணியோ ஏழரை,
நிமிராத பிறைநிலா நீந்திற்று வானில்;
இழைவிளக்கு வீட்டில் இமைத்துக்கொண் டிருந்தது,

எண்ணெய் விளக்கும் இயற்கை விளக்கும்
இருட்டை விழுங்கிக்கொண் டிருந்த வேளையில்
புறநா னூற்றைப் புரட்டிக்கொண் டிருந்தேன்.